ஞாயிறு – 16.04.2023
பாஸ்கா காலம் 2 ஆம் ஞாயிறு அன்பியமாக... கூட்டியக்கத் திருஅவையாக... திப 2:42-47 1 பேது 1:3-9 யோவா 20:19-31
- Author குடந்தை ஞானி --
- Saturday, 15 Apr, 2023
சீக்கிய மதகுரு குருநானக் அவர்கள் தமது சீடர்களை அழைத்துக்கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று நல்லொழுக்கம், சகோதரத்துவம், இறை பக்தி இவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஊரிலும் கிராம மக்களின் உபசரிப்பில் தங்கி, உபதேசம் பண்ணிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். ஒருமுறை ஒரு கிராமத்திற்குப் போயிருந்தார் குருநானக். அவரது பாடல், சொற்பொழிவு, அறவுரை எதையுமே அந்தக் கிராம மக்கள் பொருட்படுத்தவில்லை. அதாவது பரவாயில்லை: அவர்களுக்குக் குடிக்கக்கூட தண்ணீர் தரவில்லை; பசியாற ரொட்டித்துண்டு தரவில்லை. பஜனை பாடும்போது குறுக்கே சத்தம்போடுவது, கூட்டத்தில் நாய்களையும் கழுதைகளையும் குறுக்கே ஓட விடுவது என்று ரகளைச் செய்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஊரில் ஒருவர்கூட நல்ல எண்ணத்துடன் இது தவறு என்று கண்டிக்கவில்லை.
பொறுமையுடன் அன்றைய பொழுது அங்கே தங்கிய குருநானக், தமது வழிபாட்டுக் கடமைகளைச் சலிப்பின்றி செய்தார். இரவில் கடுமையான குளிர்: ஒதுங்கக் கூட யாரும் இடம் தராததால், குளிரில் மிகவும் கஷ்டப்பட்டார்: அடுத்த நாள் காலை எழுந்து, ஊரைவிட்டு புறப்படுவதற்கு முன்பு செபம் செய்தார். தம்முடன் வந்த சீடர்களைப் பார்த்து, ‘இந்தக் கிராம மக்கள், எப்போதும் இந்த கிராமத்திலேயே வாழ்க்கை வசதிகளோடு வாழ வேண்டும்: வறட்சி துன்பம் எது வந்தாலும் எங்கும் போய் இவர்கள் துன்பப்படாதபடி இறைவன் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ளச் சொன்னார். சீடர்களும் வேண்டா வெறுப்போடு அம்மக்களுக்காகச் செபித்தனர்.
ஆனால் இன்னொரு கிராமத்திற்குப் போனபோது கதை வேறாக இருந்தது: அம்மக்கள் நன்கு உபசரித்தனர்: நல்லுரை கேட்டு, விருந்து கொடுத்து, பணிவிடைகள் செய்தனர்: உபதேச கூட்டங்களில் எந்த இடையூறும் செய்யாமல் செவிமடுத்தனர். ஊரைவிட்டு புறப்படும் நேரம் வந்தது. இத்தருணத்தில் ‘இந்தக் கிராம மக்கள் இந்தக் கிராமத்திலேயே அடைந்திராதபடி உலகெங்கும் செல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்’ என்று பிரார்த்தனைச் செய்தார். சீடர்களுக்கு ஒரே குழப்பம்: ஏதும் புரியவில்லை. சென்ற முறை தங்கிய கிராமத்து மக்கள் வெளியே சிதறாதபடி இருக்க வளம் தர வேண்டினார் குரு. ஆனால் நல்லவர்கள் ஊர் ஊராகச் சிதறவேண்டும் என்கிறாரே, இது சரியில்லையே என்ற தயங்கித் தயங்கி அவரிடமே நியாயம் வேண்டினர்.
‘அந்தக் கிராமத்து மக்கள் தீமையே வடிவமாக இருக்கிறார்கள்: அவர்கள் ஒரே இடத்தில், இருப்பதுதானே நல்லது! ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் பல ஊர்களுக்குச் செல்ல நேர்ந்தால் பல ஊர் மக்களைப் பாழாக்கிவிடுவார்கள். இவர்களோ மிகவும் நல்லவர்கள்: இவர்கள் ஒரே ஊரில் இருந்தால் எப்படி? இவர்கள் போகிற ஊர்களிலெல்லாம் பண்பும் பக்தியும் வளரும் அல்லவா? அதனால்தான் அவர்கள் ஒரே ஊரில் இருக்கவும் இவர்களைப் பலப்பல ஊர்களில் இருக்கவும் ஆண்டவரை வேண்டினேன்’ என்றார்.
நம்ம ஊர் மக்கள் இங்கேயே இருக்கனுமா? இல்ல! இன்னும் பல ஊர்களுக்கு இடம்பெயரனுமா? அதனை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அன்பினிய அன்பிய மக்கள் அகிலமெல்லாம் பரவ வேண்டும்: அதுதான் திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவிடும்.
உயிர்ப்புக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, இன்றைய வார்த்தை வழிபாடு தொடக்கத் திருச்சபையின் செயல்பாட்டையும், இயேசுவின் தலைமைச்சீடரான புனித பேதுருவின் விசுவாசத்தையும், புனித தோமாவின் உயிர்த்த ஆண்டவர் அனுபவத்தையும் எடுத்துரைக்கிறது. தொடக்கத் திருச்சபையின் செயல்பாடுதான் திருச்சபைக்கு மூலதனமாக அமைகிற காரணத்தால், அதனை ஆழ்ந்து சிந்திப்பது நலம் பயக்கும்.
திருச்சபை
திருச்சபை என்று சொல்லைக் குறிக்க ‘எக்லேசியா’ (Ecclesia) ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இந்த எக்லேசியா என்ற வார்த்தையே கிரேக்க சொல்லான எக் - கலேன் (ek-kalein) என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வருகிறது. ‘எக்-கலேன்’ என்றால் ‘தொலைவிலிருந்து அழைத்தல்’ என்று பொருள். அதாவது ‘இறைமக்கள் சமூகமாக வாழ அழைப்பது’ என்ற பொருள்படும். கூடுவதுதான் கூட்டம்: ஒருசிலர் தவறுதலாக ‘கூட்டப்படுவதுதான் கூட்டம்’ என்று விளக்கம் உரைப்பது உண்டு. இது இயல்பாக நிகழ்வது. இங்கே எல்லோருக்குமே சமத்துவமிக்க பங்கேற்பும் சரிசமமான பங்களிப்பும் உண்டு. தொடக்கத் திருச்சபை பரவிய காலகட்டத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத்துக்குலுங்கிய கிறிஸ்தவ மலர்கள் எல்லோரையும் தங்கள் அழகாலும், மணத்தாலும் கவர்ந்திழுத்தனர்: மரணத்தைத் தழுவிய, அதுவும் கேவலமாக கருதப்பட்ட சிலுவை மரணத்தைத் தழுவிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது மிகவும் சவாலானது: அது ஏதோ ஓரிரவில் நடந்து முடிவதில்லை. பெந்தகோஸ்தே அனுபவத்திற்குப் பிறகு, தொடக்கக் கிறிஸ்தவர்களுடைய வாழ்வும் வழிபாடும் இரண்டற கலந்திருந்த காரணத்தால் அவர்களால் இவ்வளவு பெரிய இமாலயச் சாதனையைச் சாதிக்க முடிந்தது.
எனவேதான் திருச்சபை என்ற சொல் திருமுகங்களில் பல்வேறு பொருளில் எடுத்தாளப்படுகிறது.
‘திருச்சபை’ என்ற சொல் வழிபாட்டுக் கூட்டத்தைக் குறிப்பதாகவும் (1கொரி11:18, 14:9,28-34,38) அடித்தளச் சமூகத்தைக் குறிப்பதாகவும் (1கொரி1:2, 16:1) மற்றும் அகில உலக விசுவாசிகளின் திருக்கூட்டத்தைக் குறிப்பதாகவும் (1கொரி 15:9, கலா 1:13, பிலி 3:6) அமைந்துள்ளது. திருச்சபை என்ற பதத்திற்கு மேற்சொன்ன மூன்று பதங்களுமே பொருந்திப் போகும். பொருந்தி போவதோடு மட்டுமன்றி, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் உள்ளன. வழிபாடு, தோழமை, விசுவாசம் மூன்றும் ஒன்றொடொன்று நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது.
தொடக்கத் திருச்சபையின் விளக்குமுகத்தை இன்றைய முதல் வாசகம் (திப 2:42-47) விளக்குகிறது. புதிய இஸ்ராயேல் பிறந்திருக்கிறது. மோசேவின் சட்டங்களைப் பின்பற்றி வந்த இஸ்ராயேல் மக்கள் திருத்தூதர்களின் படிப்பினைகளைக் கேட்பதிலும் பின்பற்றுவதிலும் பிரமாணிக்கம் உள்ளவர்களாக மாறியுள்ளனர். சகோதர சகோதரிகளாக ஒன்றித்து வாழ்வதிலும், அப்பம் பிட்குதலிலும், செபத்திலும் ஒருமனப்பட்ட நிலைத்திருந்தார்கள் என்பது இதனுடைய பாடமாகும். இப்படிப்பட்ட அன்பிய வாழ்வியல் முறையை திப 4:32-35 மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்பது தொடக்கத் திருச்சபையின் வீரியத்திற்கு அடையாளம்.
இங்கே ஏழுவிதமான விழுமியங்களையும் ஐந்துவிதமான கூறுகளையும் பார்க்கலாம்.
(1) அன்புச் சமூகமாக கூடிவருகிறார்கள்: (2) இறைவார்த்தைக்குச் செவிமடுக்கிறார்கள்: (3) ஒருமனப்பட்டு செபிக்கிறார்கள்: (4) ஒருமனப்பட்டு அன்புச் சமூகமாக தோழமையோடு வாழ்கிறார்கள்: (5) அப்பம் பிடுதல்-பகிரும் சமூகமாகிறார்கள்: (6) இயேசுவுக்கு சாட்சியாகும் சமூக வாழ்வு வாழ்கிறார்கள்: (7) வார்த்தையால் வாழ்வால் நற்செய்தி அறிவிக்கிறார்கள். மேற்சொல்லப்பட்ட ஏழு கூறுகள்தான் நாம் இன்று கனவு காணும் அன்பியத்திற்காக அடிப்படை விழுமியங்கள்.
தொடக்கத் திருச்சபையில் பின்வரும் ஐந்துவிதமான கூறுகளைக் கண்டுணரலாம். முதலாவதாக, ஒன்றுபடும் சமூகம் (United Community), இரண்டாவதாக, இறைவார்த்தைக்குச் செவிசாய்க்கும் சமூகம் (Listening Community), மூன்றாவதாக, செபிக்கும் சமூகம் (Praying Community), நான்காவதாக, பகிரும் சமூகம் அல்லது பொதுவுடைமைச் சமூகம் (sharing community or Communist Community), இறுதியாக நற்செய்தி அறிவிக்கும் சமூகம் (Evangelical Community).
ஓன்றுபடும் சமூகம்
‘இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் (மத்18:20) என்ற ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதிக்கேற்ப ‘நம்பிக்கைக்கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருக்கிறார்கள்: ஆதித்திருச்சபை அன்புச் சமூகமாக சமைக்கப்பட்டிருந்தது. இங்கே கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை (கொலோ 3:11). ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை (கலா 3:28) இவர்கள் அனைவரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப்பெற்றார்கள் (1கொரி 12:13). கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருந்தார்கள் (கலா 3:28). கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருந்தார் (கொலோ 3:11). விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்று விசுவசித்து (கொலோ 4:1) தலைவர்கள் அடிமைகளை உரிமை குடிமக்களாக அன்புச் செய்தனர் (பில1:16). தோழமையில் ஒன்றுபட்ட சமூகம்தான் தொடக்கத் திருச்சபை. கிறிஸ்துவில் மையங்கொண்ட அன்பியம்தான் தொடக்கத் திருச்சபை. ‘ஒன்றாயிருந்தனர்: ஒரே மனத்தோடு கூடிவந்தார்கள்’ ஒரே உள்ளமும் ஒரே உயிரும் (திப 4:32) என்பதுதான் விவிலியப் பாடம்.
இறைவார்த்தைக்கு செவிசாய்க்கும் சமூகம்
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படாத கால கட்டம்: ஏடெடுத்து எதனைப் படிக்க முடியாத சூழ்நிலை. செவிவழிச் சமூகமாக திருத்தூதர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து விசுவாசத்தில் வேரூன்றினர். திருத்தூதர்களின் போதனைகளைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு அதனை வாழ்வாக்க முற்படுகின்றனர். யாரும் ஏன்? எப்படி? எதற்கு? என்று எதிர்கேள்வி கேட்கவில்லை: தனிமனித வாழ்வில் மாற்றம்: சமூக வாழ்வில் மாற்றம். மாற்றம் நிறைந்த சமுதாயம் மறுமலர்ச்சியைக் காணும். திருச்சபைத் தலைவர்களையும் மூப்பர்களையும் மதித்து ஒழுகினர்: புதிய இஸ்ராயேல் உருவானது.
செபிக்கும் சமுதாயம்
‘அவர்கள் இறைவேண்டலில் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்’. இறைவனோடு கொண்டிருந்த உறவுதான் மனிதர்களோடு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள உதவியது எனலாம்: வாழ்வையும் வழிபாட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது: அன்பை வாழ்ந்து காட்டுவதில்தான் ஆன்மீகம் அடங்கியிருக்கிறது. இறைவனை அன்புச் செய்கிறேன் என்று பேர்வழி என்று மனிதர்களை வெறுக்க முடியாது. போலி ஆன்மீகத்தை அவர்கள் அறிவார்கள். எனவே பரிசேயத்தனம் எதுவும் அவர்களிடம் இல்லை: வெளிவேடமில்லை. ‘ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்’ (திப 1:14). அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்த அன்னை மரியா அங்கே வழிகாட்டுகிறார்.
பொதுவுடைமைச் சமூகம்
காரல்மார்க்சின் ‘மூலதனத்தின்’ (Das Capita) ஆதார மூலமே ஆதித்திருச்சபைதான். கிபி முதல் நூற்றாண்டில் எருசலேமில் வாழ்ந்த சமுதாயத்தின் கூறுகளை சித்தாந்தமாக்கி‘மூலதனமாக்கி’ ஈராயிரம் ஆண்டு இவ்வுலகிற்கு தேவைப்பட்டது. ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்த நம்பிக்கைக் கொண்ட மக்கள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாக கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது: ஆசையில் உழன்றோர் உண்டு: ஆனால் தேவையில் உழல்வோர் அவர்களுள் காணப்படவில்லை: திருத்தூதர்களின் காலடிகள்தான் தொடக்கத் திருச்சபையின் கருவூலமாக (treasury) இருந்தது. அங்கிருந்துதான் அனைத்தும் பட்டுவாடா செய்யப்பட்டது. வாழ்வும் வார்த்தையும் செபமும் செயலும், விசுவாசமும் வாழ்வும் ஒன்றோடொன்று ஒத்துப்போனது. அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். (திப 4:32-35). அனனியாவின் மரணம் அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது (திப 5). இப்படி பொதுவுடைமைச் சமூகமாக தொடக்கத் திருஅவை விளங்கியது.
நற்செய்தியை அறிவிக்கும் சமூகம்
தொடக்கத் திருஅவை ‘உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்’ என்ற கிறிஸ்துவின் கட்டளைக்கேற்ப நற்செய்தியை அறிவிக்கிற சமூகமாக துலங்கியது: ஸ்தேவான் தொடங்கி, யாக்கோபு, அந்திரேயா.. என இரத்தம் சிந்தி கிறிஸ்துவை அறிவித்தனர்: எருசலேமிற்கு வெளியே.. பாலஸ்தீனத்திற்கு வெளியே, ஆசியாவிற்கு வெளியே.. என கிறிஸ்தவம் தழைக்கத் தொடங்கியது: திருத்தூதரான தோமையார் இந்தியா வந்தார்: பார்த்தலெமேயும் இந்தியா வந்ததாக மரபு. தொடக்கத் திருஅவையின் அங்கத்தினர்களும் கிறிஸ்தவர்கள் என்பதற்கேற்ற அடையாளங்களுடன், பண்பு நலன்களுடன் வாழத்தொடங்கினர்: அவர்கள் முதன்முறையாக ‘கிறிஸ்தவர்கள்’ என்று பெயரைப் பெற்றார்கள் (திப 11:26). திப 2:47 சொல்வதைப் போல ‘எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்’ . சொல்லால், செயலால் அடுத்தவரின் மனங்களை வென்றவர்கள், அவர்களுக்குள் ஓர் இறைத்தேடலைத் தொடங்கிவைப்பார்கள் அன்றோ? அதுதான் நடந்தது. தொடக்க திருச்சபை நற்செய்தியை அறிவிக்கிற சமூகமாக விளங்கியது (திப 8:4)
நாமும் நமது அன்பியங்கள் வழியாக, ஒன்றுபட்ட சமூகமாக, இறைவார்த்தைக்கு செவிசாய்க்கிற சமூகமாக, செபிக்கிற சமூகமாக, பொதுவுடைமைச் சமூகமாக, மறைபரப்புச் சமூகமாக வாழ தொடர்ந்து செபிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக ஆயர்கள் மாமன்றம் 2024 மூலம் முன்னெடுத்துள்ள கூட்டியக்கத் திருஅவையாக, ஒன்றிப்பு - பங்கேற்பு - நற்செய்தி அறிவிப்பு நாளும் மேற்கொள்வோம்.
Comment