No icon

ஞாயிறு – 21.05.2023

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா திப 1:1-11. எபே 1:17-23. மத் 28:16-20.

இணைப்பாளர் - எந்நாளும் - வானம்

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை, ‘இணைப்பாளர்,’ ‘எந்நாளும்,’ ‘வானம்என்னும் மூன்று சொற்களால் புரிந்து கொள்வோம்.

. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இணைப்பாளர்.

. ‘இதோ! உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்.’

. வானத்தைப் பாருங்கள்! ஆனால், கால்கள் மண்ணில் பதிந்திருக்கட்டும்!

. இயேசு கிறிஸ்து கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இணைப்பாளர்

ஆண்டவரின் விண்ணேற்ற நிகழ்வுடன், கிறிஸ்தியல் வட்டம் நிறைவுக்கு வருகிறது. மூவொரு இறைவனின் நெஞ்சில் நிறைந்திருந்த வார்த்தையானவர் மனுவுருவாகி, பிறந்து, விண்ணக அரசை அறிவித்தார். தம் பணிகள், வல்ல செயல்கள் மற்றும் போதனைகள் வழியாக, விண்ணரசு இம்மண்ணுலகில் இப்போதே வந்தது என இயேசு முழக்கமிட்டார். பாடுகள் பட்டு, இறந்து, உயிர்த்து, இன்று விண்ணேற்றம் அடைகிறார். இந்த வட்டம் கிறிஸ்துவின் மனுவுருவாதலை நிறைவு செய்வதோடு, நம் வாழ்வுக்கும் பொருள் சேர்க்கிறது. மனித உடல் ஏற்றுள்ள நாமும், உயிர்த்து, விண்ணேறிச் செல்வோம் என்னும் எதிர்நோக்கை நமக்கு வழங்குகிறது. இன்றைய திருப்பலித் தொடக்கவுரையில், ‘இயேசு கிறிஸ்து இணைப்பாளர்என வாசிக்கிறோம். இயேசுவின் மனுவுருவாதலே அவரைக் கடவுளோடும், மனிதர்களோடும் இணைக்கிறது. கடவுளே மானிடர்களின் இணைப்பாளராக விளங்குவதன் வழியாக, மானுடத்தின் மாண்பு மேன்மையடைகிறது. ‘கடவுள் நம்மோடுஎன இறங்கி வந்த இயேசு, இன்று, ‘கடவுள் நமக்காகஎன ஏறிச் செல்கிறார்.

இன்று நான் எந்த வாழ்வியல் நிலையில் - குழந்தை, பதின்மம், இளமை, முதிர்ச்சி, முதுமை - இருக்கிறேன்? எந்த வாழ்வியல் நிலையில் நான் இருந்தாலும், அதை முழுமையாக ஏற்று வாழ்கிறேனாகடவுள் மனித உடலை ஏற்று, அதை மாட்சிப்படுத்தியிருக்கிறார் எனில், நான் என் உடலையும், மற்றவர்களின் உடலையும் எப்படிப் பார்க்கிறேன்? உடல் என்பது பாவம் செய்வதற்கான கருவி என எதிர்மறையாக எண்ணுகிறேனா? அல்லது இந்த உடல் கடவுளின் ஆலயம் என அதை நேர்முகமாக ஏற்று அன்பு செய்கிறேனா? இயேசு தம் மனுவுருவாதல் வழியாக மனுக்குலத்தை மாற்றினார் எனில், நான் என் குடும்பம், நண்பர்கள், சுற்றுச்சூழல், உலகம் ஆகியவற்றின்மேல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறேன்? என் நம்பிக்கை அனுபவத்தில் விண்ணகத்தையும், மண்ணகத்தையும் என்னால் இணைத்துப் பார்க்க முடிகிறதா? இறைவேண்டல் மற்றும் அன்றாட வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை மற்றும் உடல்சார் வாழ்க்கை என இரண்டையும் இணைத்துப் பார்க்க முடிகிறதா? இயேசு விண்ணுக்கும், மண்ணுக்கும் இணைப்பாளர் எனில், அவரோடு இணைந்து இணைப்பாளர் நிலையில் இருக்கும் நான், என் பொதுக்குருத்துவம் மற்றும் பணிக்குருத்துவத்தை நினைவு கூர்ந்து, ஒருவர் மற்றவருக்கான இணைப்பாளராகச் செயல்படுகிறேனா? அல்லது பிரிவினைகளை வளர்க்கிறேனா?

. ‘இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்!’

மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் விண்ணேற்றம் பற்றிய குறிப்பு இல்லை. தம் திருத்தூதர்களுக்கு இயேசு வழங்கும் மறைத்தூதுக் கட்டளையோடும், அவருடைய உடனிருப்புச் சொற்களோடும் தன்  நற்செய்தியை நிறைவு செய்கிறார் மத்தேயு. இறையியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை, ‘கடவுள் நம்மோடு’ (இம்மானுவேல், மத் 1:23) என அறிமுகம் செய்கிறார். கடவுள் நம்மோடு என வந்த இயேசு, நம்மை விட்டு அகல இயலாது. ‘நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்என்னும் இயேசுவின் சொற்கள், கடவுள் மனுக்குலத்தோடு ஏற்படுத்திக்கொண்ட நீங்காத உடனிருப்பை உறுதி செய்வதுடன், கடவுளின் நீடித்த திரு முன்னிலையை (பிரசன்னத்தை) நமக்கு நினைவூட்டுகிறது. ‘எனக்கென யாரும் இல்லையே?’ என்று தனிமையில், விரக்தியில், சோர்வில் நாம் உதிர்க்கும் சொற்களுக்கு மாற்றாக இருக்கின்றன இயேசுவின் சொற்கள். ‘வார்த்தை மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார்’ (யோவா 1:14) என வாசிக்கிறோம். ‘குடிகொண்டார்எனில், அவர் தொடர்ந்து நம்முடன் குடியிருந்து கொண்டே இருக்கிறார். ஏனெனில், கடவுளைப் பொருத்தவரையில் அவருக்கு அனைத்தும்இன்றுதான். ‘உலக முடிவுஎன்னும் சொல்லாடல் உலகின் இறுதி அல்லது அழிவை நமக்கு நினைவூட்டவில்லை. மாறாக, ‘நீடித்த நிலையான நேரத்தைஇது குறிக்கிறது. ‘கதிரவனும், நிலாவும் உள்ள வரையில், உம் மக்கள் தலைமுறை, தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக’ (காண். திபா 72:5) என்னும் அருள் வாக்கியத்தில், ‘கதிரவனும், நிலாவும் உள்ளவரைஎன்னும் சொல்லாடல்கதிரவனும், நிலாவும் இல்லாமல் போய்விடும்என்று உணர்த்தவில்லை. மாறாக, ‘நீடித்த நிலையான நேரத்தையேஉணர்த்துகிறது. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ (திபா 136:1) என்னும் முதல் ஏற்பாட்டுச் சொற்கள், இயேசுவின் சொற்களில் நீட்சி அடைந்து, இறைவனின் நீடித்த உடனிருப்பை நமக்கு உணர்த்துகின்றன.

தம் வாக்குறுதிக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் நம் ஆண்டவரின் சொற்கள், என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிறைவேறுகின்றன என்பதை  நான் உணர்கிறேனா? ‘எந்நாளும் உன்னுடன் இருக்கிறேன்என்னும் அவருடைய  சொற்கள் எனக்கு ஆறுதலைத் தருகின்றனவா? என் வாழ்வின் துன்பமான நேரங்களில் இயேசுவின் சொற்கள் என் நம்பிக்கைக்கு வலிமை தருகின்றனவா? இயேசுவின் உடனிருப்பு தரும் சொற்களை, என் வாழ்க்கை அனுபவமாக மாற்றும் நான், தனிமை, நோய், சோர்வு என வருந்தும் சகோதர, சகோதரிகளுக்கு நம்பிக்கை தரும் சொற்களை நான் மொழிகின்றேனா?

. வானத்தைப் பாருங்கள்! ஆனால், கால்கள் மண்ணில் பதிந்திருக்கட்டும்!

இயேசு விண்ணேறிச் செல்வதைக் காண்கின்ற திருத்தூதர்கள், வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது தோன்றுகிற வெண்ணிற ஆடை அணிந்த இருவர், ‘நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கேட்கின்றனர். மறைப்பணி ஆர்வம் நிறை சீடர்கள் (ஆங்கிலத்தில், ‘மிஷனரி டிஷைப்ள்ல்’) தங்கள் பார்வையை வானத்தை நோக்கிச் செலுத்தினாலும், பாதங்களை அழுத்தமாகத் தரையில் பதித்திருக்க வேண்டும். மண்ணின் அழுக்கு தங்கள்மேல் படத் தங்களை அனுமதிக்க வேண்டும். மனித வரலாறு முழுமை பெறும் இடம் விண்ணகம். அந்த விண்ணகம் பற்றிய சிந்தனை மண்ணகம் பற்றிய நம் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது. மண்ணக வாழ்வை நன்றாக வாழ்வதைவிடுத்து, விண்ணகம் நோக்கி தப்பிச் செல்லக் கூடாது. ஆக, ஒவ்வொரு நாளும் இந்த மண்ணக வாழ்வுக்கான அர்ப்பணம் நம்மில் வளர வேண்டும். பொறுப்புணர்வு கூட வேண்டும். ‘நம் விண்ணகம் தாய்நாடு’ (காண். பிலி 3:20) என்றாலும், நாம் சார்ந்திருக்கும் மண்ணின் மேலும் நமக்கு பொறுப்பு உண்டு.

நான் என் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் தொடுகிறேனா? இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா எனக்குத் தரும் செய்தி என்னஎன் வாழ்க்கைஎனக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கை  ஆகியவற்றைத் தாண்டி, வலுவற்றவர்களின், விளிம்பு நிலையில் இருப்பவர்களின், ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமேல் எனக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்கிறேனா? இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு பற்றியே கவலைப்படும் நான், இறப்புக்கு முன் உள்ள வாழ்வை எப்படி வாழ்கிறேன்? மகிழ்ச்சி, அமைதி, கட்டின்மை போன்ற மதிப்பீடுகளைப் போற்றி என் தனிநபர் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேனா?

நிற்க.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகிற அவரால் திருஅவை நிறைவு பெறுகிறதுஎன எழுதுகிறார் பவுல். இயேசு தம் விண்ணேற்றத்தின் வழியாக எங்கும், எல்லாவற்றையும் நிரப்பி நிற்கிறார்.

எக்காளம் முழங்கிடவே உயிரே ஏறுகின்றார் ஆண்டவர்எனப் பதிலுரைப்பாடலில் அக்களிக்கும் நாம், இணைப்பாளராக வானகம் ஏறிச்செல்லும் அவர், நம்மோடு, எந்நாளும் இங்கேயே இருக்கிறார் என்னும் நம்பிக்கையில் நம் கால்களை உறுதியாக மண்ணில் பதித்துக் கொள்வோம்.

Comment