ஞாயிறு – 28.05.2023
தூய ஆவியார் பெருவிழா (பெந்தகோஸ்து ஞாயிறு) திப 2:1-11, 1 கொரி 12:3-7, 12-13. யோவா 20:19-23
வெளியேறு-துணிவுகொள் - கூவியழை
இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழாவுடன், உயிர்ப்புக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த நாளின் விவிலியம், வழிபாடு, இறையியல் மற்றும் ஆன்மீக வளமை மேன்மையானது. ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ (இலத்தீன் மொழியில், ‘இவாஞ்சலி கௌதியம்’) என்னும் திருத்தூது ஊக்கவுரையில், நற்செய்தி அறிவிப்பாளர்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டும் என மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ் (எண். 259), பெந்தகோஸ்தே நிகழ்வை மூன்று சொல்லாடல்களால் எடுத்துரைக்கிறார்: ‘வெளியேறுங்கள், துணிவு கொள்ளுங்கள், கூவி அழையுங்கள்.’ இச்சொல்லாடல்களின் துணைகொண்டு, இந்நாளின் மறையுண்மை குறித்து சிந்திப்போம்.
அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.
ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார்.
இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் அவசியம்.
அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்
திருத்தூதர்கள் மேலறையில் கூடியிருக்கும்போது அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறார். தூய ஆவியாரால் நிறைந்த அவர்கள், முதலில் வேறுமொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடைய நாக்கு கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மொழி என்ற வேலியிலிருந்து வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறிய அவர்கள், பல மொழிகள் பேசுகின்ற மக்களை எதிர்கொள்கிறார்கள். ஆக, தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்ட வேலியிலிருந்தும், தங்களுக்கும், பிறருக்கும் இடையே இருந்த வேலியிலிருந்தும் அவர்கள் வெளியேறுகிறார்கள்.
‘வெளியே போ!’ என்று தூய ஆவியார் என்னை அழைக்கிறார். நான் உடைத்தெறிய வேண்டிய அல்லது தாண்ட வேண்டிய வேலிகள் எவை? எனக்கு நானே வரையறுத்துக் கொண்ட வேலிகளாக அல்லது மற்றவர்கள் எனக்கு இடுகின்ற வேலிகளாக அவை இருக்கலாம். எனக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை, இணக்கத்தை, உறவை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா? எனக்கு அருகில் இருக்கும் குடும்பம், நண்பர்கள், குழுவினரோடும், தூரமாக இருக்கும் நபர்களோடும் நான் கொள்ளும் நெருக்கம் எப்படி இருக்கிறது? மற்றவர்கள் அனைவரும் ‘வெவ்வேறு மொழி பேசக் கூடியவர்கள்’ என நான் முற்சார்பு எண்ணம் அல்லது அச்சம் கொள்கிறேனா? நான் ஒருவர் மற்றவரோடு உரையாடும்போது, தூய ஆவியார் எனக்குக் கற்றுத் தருவதற்கு நான் அனுமதிக்கிறேனா?
ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார் தூய ஆவியார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘பர்ரேஸியா’ என்னும் கிரேக்கச் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். தூய ஆவியார் தருகிற கொடை இது என மொழிகிறார். படைப்புத் திறத் துணிவு என்று நாம் இதை அழைக்கலாம். அதாவது, நம் துணிவின் வழியாக நம் வாழ்வும், மற்றவர்கள் வாழ்வும் மேம்படுகிறது. நாம் விரும்புவதைத் தெளிவாகவும், உறுதியாகவும், கட்டின்மையோடும் சொல்லக்கூடிய ஆற்றலே படைப்புத் திறத் துணிவு. திருத்தூதர்கள் குறிப்பாக, பேதுரு, பெந்தகோஸ்தே நாளில் உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரையின் தெளிவு நமக்கு வியப்பு தருகிறது. மீன்பிடிக்கும் பின்புலத்திலிருந்து வந்த ஒருவர், தெளிவாகவும், உறுதியாகவும் மறைநூலை மேற்கோள் காட்டிப் பேசுவது, தலைமைச் சங்கத்தாருக்கு வியப்பூட்டுகிறது. ‘ஆண்டவராகிய இயேசு உயிர்த்து, விண்ணேற்றம் அடைந்து, கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்’ என்பதே கடவுளின் வல்ல செயல். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகரில் உள்ள குழுமத்தார் பெற்றிருக்கிற கொடைகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இக்கொடைகள் அனைத்தும் பொது நன்மைக்காகவே வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பொது நன்மை என்ன? கடவுளின் வியத்தகு செயல்களைக் குழுமமாக எடுத்துரைப்பது, மாற்று வாழ்வு வாழ்வது.
இன்று நான் துணிவிழந்து நிற்கும் பொழுதுகள் எவை? படைப்புத் திறத் துணிவை நான் பெற என்ன செய்ய வேண்டும்? ஆண்டவர் என் வாழ்வில் எனக்கு ஆற்றிய அரும்பெரும் செயல்களை நான் எடுத்துரைக்கத் தயாராக இருக்கிறேனா? தூய ஆவியார் எனக்கு வழங்கியுள்ள கொடைகள் குறித்து, நான் அக்கறை உள்ளவனாக இருக்கிறேனா? தூய ஆவியாரின் கொடைகளை முன்னிட்டு நான் மற்றவர்களை வேற்றுமைப்படுத்திப் பார்த்தால், அந்த மனநிலை விடுக்க நான் தயாராக இருக்கிறேனா?
இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் நலம்
மூவொரு இறைவனில் அதிகமாக மறக்கப்பட்ட நபர் தூய ஆவியார்தாம். தம் இறுதி இராவுணவில், தூய ஆவியாரைத் தம் சீடர்களுக்கு வாக்களிக்கிற இயேசு, ‘தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்…உங்களை வழிநடத்துவார்’ (காண். யோவா 15:26, 16:13) என, மொழிகிறார். தூய ஆவியாரைப் பெற்றவுடன், திருத்தூதர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்கள். தூய ஆவியாரின் பணிகளாக மூன்றை வரையறுக்கிறார் இயேசு: துணையாக இருத்தல், உண்மையை வெளிப்படுத்துதல், வழிநடத்துதல். நம் வாழ்வில் நாம் பல நேரங்களில் துணையின்றி நிற்கிறோம். உண்மையைப் பொய்யிலிருந்து பகுத்தாய இயலாமல் நிற்கிறோம். திசைதெரியாமல் நிர்கதியாக நிற்கிறோம். இவ்வேளைகளில் தூய ஆவியாரை நாம் கூவி அழைத்தால், அவர் நமக்குத் துணையாளராக வந்து, உண்மையைத் தெளிவுபடுத்தி, வழிநடத்துகிறார். தூய ஆவியார் இல்லாமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெறுமையே என்கிறார் திருத்தந்தை. தூய ஆவியாரை நாம் அழைக்க வேண்டுமெனில், அவரை அறிந்தவர்களாக நாம் இருக்க வேண்டும். நம் வாழ்வு ஊனியல்பை விடுத்து, ஆவிக்குரிய இயல்பை அணிந்திருக்க வேண்டும் (காண். கலா 5:18-24). நற்செய்தி வாசகத்தில் தம் திருத்தூதர்கள் மேல் ஊதுகிற இயேசு தூய ஆவியாரை அவர்களுக்கு அளிக்கிறார். அவர்கள் மகிழ்ச்சியும், அமைதியும் பெறுகிறார்கள்.
நான் ஆவியாரைக் கூவி அழைக்கிறேனா? அவருக்கு நான் என் வாழ்வில் தரும் இடம் என்ன? அவரை அழைப்பதன் வழியாக என் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேனா? என் உள்ளொளியாக அவர் சுடர்விடுவதற்கு நான் அனுமதிக்கிறேனா? வாழ்வின் தெரிவுகள் கடினமாக இருக்கும்போது, பாதைகள் தெளிவு இல்லாமல் இருக்கும்போது அவரின் துணைகொண்டு தெரிவுகளை மேற்கொள்ளவும், தெளிவுபெறவும் தயாராக இருக்கிறேனா? அவர் வழியாகவே நான் கடவுளை அப்பா, தந்தாய் என அழைக்கிறேன் எனில், நான் எப்போதெல்லாம் இறைவேண்டல் செய்கிறேன்? அவரின் நெருப்பு இன்று என் வாழ்வில் தூய்மையாக்க வேண்டிய பகுதிகள் எவை? ஆண்டவரின் ஆவி சாமுவேலைவிட்டும், சவுலைவிட்டும் அகன்றது போல, என்னைவிட்டும் அகன்று விட்டாரா?
நிற்க.
‘ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கிறீர்!’ (திபா 104) என்று இன்றைய பதிலுரைப்பாடலில் பாடுகிறோம். நம் வாழ்வை தூய ஆவியார் புதுப்பிப்பாராக! “தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்” (கலா 5:25) என்னும் பவுலின் சொற்களை நினைவில் கொள்வோம். பாதுகாப்பு வளையம் மற்றும் வேலிகளை விட்டு வெளியேறுவோம்! இறைவனின் வியத்தகு செயல்களை அறிவிக்கும் துணிவு பெறுவோம்! அவரை அன்றாடம் கூவியழைப்போம்.
Comment