No icon

10, செப்டம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம்; 23ஆம் ஞாயிறு எசே 33:7-9; உரோ 13:8-10; மத் 18:15-20

உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில்...

உங்கள் வீட்டுக்கும், உங்களது பக்கத்து வீட்டுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறதுஅதிகபட்சம் ஐந்தடியோ அல்லது பத்தடியோ இருக்கக் கூடும்ஆனால், உண்மையில் பக்கத்து வீட்டுக்கும், நமக்குமான இடைவெளி சீனப் பெருஞ்சுவரை விடப் பெரியது. ஒவ்வொரு குடும்பமும் தனது அண்டை வீட்டை வெறுக்கிறது என்பதுதான் காலத்தின் நிஜம்!

அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள் ஒன்றையொன்று அன்பு செய்கின்றன. இரு வீட்டாரும் சேர்ந்தே சாப்பிடுகிறார்கள்; ஒன்றாக இணைந்தே பயணம் மேற்கொள்கிறார்கள்; பெருநாள்களில் ஒன்றாகச் சேர்ந்து துணிக்கடைக்குச் செல்கிறார்கள்; ஒருவர் துயரத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் அரிதிலும் அரிதான செயல்களாக மாறிவிட்டன. வெயிலில் நடந்து வந்தவர், சற்று அமர்ந்து இளைப்பாற திண்ணை வீடுகள் இன்று இல்லை. ‘நாய்கள் ஜாக்கிரதைஎனும் வாசகம்உள்ளே வராதேஎன்று எச்சரிக்கிறது. ஆளுயர நுழைவாயில்களும், எப்போதும் சாத்தியே வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கதவுகளும் வெறுப்பின் வெளி அடையாளங்கள்.

யாரோ வாய்விட்டுச் சிரிக்கும்போது, யாரோ ஆத்திரப்படுகிறார்கள். அடுத்தவரின் வளர்ச்சி ஏனோ பலருக்கும் பிடிக்காமல்தான் இருக்கிறது. ‘காலிங் பெல்அடித்து அவசரத்துக்கு ஏதாவது கேட்கும் போது கூட அவர்கள் சினமேறிய முகத்துடன் பதில் பேச மறுக்கிறார்கள். அன்பு காட்டுவது என்பதெல்லாம் இன்று அலங்காரச் சொற்கள் ஆகிவிட்டன. வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால் பாலும், காபிப் பொடியும் பக்கத்து வீட்டிலிருந்து அவசரத்துக்குக் கடனாகப் பெற்ற காலம் இனி வருமோ! சிறுவர்கள் பேதமில்லாமல் எவர் வீட்டிலும் போய் சாப்பிட்டு விளையாடி வந்த காலம் திரும்பக் கிடைக்குமோ! ஆம், உலகம் இன்று சுருங்கிவிட்டது- சுயநலத்தால்! கசப்பும், வெறுப்பும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது - பகைமை உணர்வால்!

நமக்குள் ஏற்படும் சண்டைச் சச்சரவுகளும், அன்றாடக் கோபங்களும் உடனே வடிந்துவிட வில்லை. அவை அடுத்த நாளுக்கும் கடத்திச் செல்லப்படுகிறது. ‘பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்’ (எபே 4:26) என்கிறார் புனித பவுல்.

மனிதன்என்பதற்கான பொருளையே மறந்து விடுகிறோம். அரபி மொழியில் மனிதனுக்குஇன்சான்என்று பெயர். ‘இன்சான்என்ற சொல்உன்ஸ்என்ற துருக்கியச் சொல்லிலிருந்து பிறந்தது. ‘உன்ஸ்என்பதற்கு அன்பு செய்தல், உறவு பாராட்டுதல், நட்பு கொள்தல், தோழமை காட்டுதல், ஒருவருடன் நெருங்கிப் பழகுதல் என்று பொருள். எனவே மனிதன் என்றாலே உறவோடு வாழ்பவன் என்றுதான் பொருள்ஆனால், இன்று போலி உறவுகளைப் பார்க்கும்போது, ‘உறவிலே வேகிறதை விட, ஒரு கட்டு விறகிலே வேகலாம்!’ என்று மனம் சொல்கிறது. வாழ்வுக்கு வலுசேர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட உறவுகள் இன்று களையிழந்து, நலமிழந்து இருப்பதுதான் வேதனை. உறவோடு வாழ்வதே இன்று மிகப்பெரிய சவால்! இந்தச் சூழலில் ஆண்டின் பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு, பகைமையைக் களைந்து, உறவால் மனம் ஒன்றித்திருக்க நம்மை அழைக்கிறது.

திரு அவையில் நிலவும் உறவுச் சிக்கல்களைச் சரி செய்து, உறவோடு வாழ சில தெளிவான வழிமுறைகளை இயேசு நமக்குச் சொல்லித் தருகின்றார். ஒரு சகோதரர் தவறு செய்தால், தனிப்பட்ட வகையில் அவரைச் சந்தித்துக் குற்றம் நீங்க உதவி செய்ய வேண்டும். அவர் திருந்தினால் அக்குடும்பத்திற்கு நன்மை பயக்கும். அவர் திருந்தாவிட்டால், சமூகத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூடி, குற்றம் இழைத்தவரை நல்வழிக்குக் கொணர வேண்டும். அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை என்றால், திரு அவையின் தலைவர்கள் தலையிட்டுக் குற்றத்தைப் புரிய வைக்க வேண்டும். தவறு செய்தவர்கள் எப்படியேனும் தன் தவற்றை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, மீண்டும் சமூகத்தோடு இணைத்துவிட வேண்டும் என்பதுதான் முக்கிய எண்ணமாக மேலோங்கி நிற்பதை உணர முடிகிறது. எனவே, பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரத்தைக் கையில் எடுக்கக்கூடாது. மாறாக, அன்பையே கையில் எடுக்க வேண்டும் என்பதே இயேசுவின் மையப்போதனை.

திரு அவையில் தொடக்கத்தில் ஏற்பட்ட பல உறவுச் சிக்கல்களைத் தீர்க்க அன்பையே கருவியாக எடுத்துப் போதித்தவர் திருத்தூதர் பவுல். கொலோசை நகரிலிருந்த முக்கிய கிறிஸ்தவரும், செல்வருமான பிலமோன் என்பவரிடமிருந்து தப்பியோடிய ஒனேசிம் தலைவரின் நண்பரான பவுலின் உதவியை நாடுவார். ஒனேசிமுக்கு உரோமைச் சட்டப்படி மரணத் தண்டனையே கொடுக்கலாம். ஆனால், பவுல்என் இதயத்தையே அனுப்புகிறேன்என்று சொல்லி ஒனேசிமை ஏற்றுக்கொள்ள பிலமோனுக்குக் கடிதம் எழுதுவார் (பில 1:12). இங்கே பிலமோனுக்கும், பவுலுக்கும் இடையே இருக்கும் நட்பினால், ஓர் அடிமை சகோதரராக மாறிவிட்டார்! அன்பு என்றுமே நிலைத்திருக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த சான்று.

ஆகவே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், ‘ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்என வலியுறுத்துகிறார். ‘அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அன்பே திருச்சட்டத்தின் நிறைவுஎன்கிறார். ஆம்! கடவுள் அன்பாக நிலைத்திருக்கும் வரை அன்புக்கு அழிவே இல்லை. இந்த வார்த்தைகளின் பின்புலத்தில்தான் புனித அகுஸ்தின், ‘இறைவா எடுத்தருளும்! எல்லாம் உமதே! எனது ஒன்றும் இலதே! உடலும் உமதே! உயிரும் உமதே. அறிவும் உமதே! ஆயுளும் உமதே!’ என்று கூறி அனைத்தையும் ஆண்டவருக்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆண்டவரின் அன்பை மட்டும் கேட்டார். அந்த அன்பு வறுமை வடிவில் வந்தாலும், வெறுமை வடிவில் வந்தாலும், நோய் வடிவில் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார்என இறைவனை நோக்கி வேண்டினார்.

ஆக, நம்மிடத்தில் அன்பு இருக்குமேயானால், அந்த அன்பு பிறருக்குத் தீங்கு நினைக்கவோ, இழிவானதைச் செய்யவோ விரும்பாது. மாறாக, அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும் (1கொரி 13:5,7). தன் சொந்தச் சகோதரன் மீது அன்பு செலுத்த இயலாததினால்தான் ஆபேலைக் கொன்றான் காயின். அன்பு இல்லாததினால்தான்முதல் கொலைஅரங்கேறியது. ‘உன் சகோதரன் ஆபேல் எங்கே?’ என்று ஆண்டவர் காயினிடம் கேட்டதற்கு, அன்பு இல்லாததினால்தான்எனக்குத் தெரியாது, நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?’ (தொநூ 4:6) என்பான்.

ஆனால், உண்மையிலேயே நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்குக்காவலாளிஅல்லதுபொறுப்பாளர்தாம். மற்றவருக்கான காவலாளியாகத் தன்னையே அடையாளப்படுத்தும் ஒருவரால்தான், உறவு தொடரும். உறவு தொடரும் அந்த இடத்தில்தான், இறைவன் இருப்பார். உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் இருக்கிறார் அன்றோ! ‘ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்’ (மத் 18:20) என்றே இயேசு உறுதிபடக் கூறினார்.

இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கொண்ட அன்பினால் அல்லது உறவினால்தான், யாவே எசேக்கியேலை இஸ்ரயேல் மக்களின் காவலாளியாக நியமிக்கின்றார். தவறிழைத்தவர்களைக் கடவுளின் பெயரால் எச்சரித்தும், பாவத்திலிருந்து மனந்திரும்ப மனமாற்றத்திற்காக அழைப்பு விடுப்பதுமே இறைவாக்கின் நோக்கம். எனவே, ஒருவர் மனந்திரும்புவதால் அழிவு தவிர்க்கப்படுகிறது. நன்மையை வளர்ப்பதும் தீமையைத் தடுப்பதும்தானே இறைவாக்குப் பணி. எனவே, இஸ்ரயேல் மக்களுக்கு எசேக்கியேலைக் காவலாளியாக நியமித்து நல் வாழ்வுக்கான வழியை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பது என்பது அம்மக்கள் மீது இறைவன் காட்டும் பேரன்பு எனப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, இன்றைய நாளில் உறவோடு வாழ இறைவனை வேண்டுவோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, சுவர்களை அல்ல; மாறாக, திறந்த மனத்தோடும், இதயத்தோடும் உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புவோம். அன்பு, பிறரன்பு, சேவை, பொறுமை, நன்மைத் தனம், கனிவு ஆகிய அழகான செல்வங்களை நாம் சேகரிப்போம். இறைச்சமூகத்தில் குற்றமிழைத்த எவரையும் ஒதுக்கித் தள்ளிவிடாமல், குற்றங்களைத் தனியாகவோ, சாட்சிகளுடனோ அல்லது திரு அவையின் உதவியுடனோ சுட்டிக்காட்டி இறைச்சமூகத்தில் இணைத்துக்கொள்வோம்.

கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’, ‘பழிக்குப் பழிஎன்ற வன்முறைக் கலாச்சாரத்துக்குத் துணை போகாமல், பகைவர்களையும் அன்பு செய்யும் மனிதநேயக் கலாச்சாரத்தை உருவாக்குவோம்.

இறுதியாக, உறவை நீடிக்கச் செய்ய வேண்டுமெனில், நம் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதிருப்போம் (திபா 95:8).

Comment