
17, செப்டம்பர் 2023 - ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு
(முதல் ஆண்டு) சீஞா 27:30-28:7; உரோ 14:7-9 மத் 18:21-35
மன்னிப்பு செபமாகட்டும்; செபம் மன்னிப்பாகட்டும்!
மன்னிப்பு என்பது மாபெரும் சக்தி! இது சுமைகளிலிருந்தும், வலிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் திறவுகோல். பிறரை மன்னிப்பதைவிட அரிய செயல் வேறெதுவுமில்லை; பிறரை மன்னிப்பவரை விட உயர்ந்த மனிதர் வேறொருவரும் இல்லை.
தவறுவது மனித இயல்பு; மன்னிப்பது இறையியல்பு. கோபமும், பழிவாங்கும் எண்ணமும் அரக்கப் பண்புகள்; மன்னிக்கும் மனநிலையே தெய்வத்தின் பண்புகள். பகையைக் கொண்டு பகையை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? மன்னிப்பு வழியாகவே பகைமையை முடிவுக்குக் கொண்டுவர முடியும். மன்னிப்பு என்பது மனக் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்து. அடுத்தவர்களுக்கு மன்னிப்பை அளிக்கும்போது, நம் மனங்களில் இருக்கும் காயங்கள் தானாகவே ஆறிவிடும்!
இயேசு தம்முடைய தனிப்பட்ட வாழ்வில் மன்னிப்பை வாழ்ந்து காட்டினார். தம்மைப் பின்பற்றும் அனைவருக்குமே மன்னிப்பின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார். தாம் போதித்த போதனைக்கும், தாம் வாழ்ந்த வாழ்வுக்கும் நூலளவு இடைவெளி இல்லாது, மன்னிப்பை வாழ்வாக்கினார். மரணத்திலும் தெய்வீக மன்னிப்பை முழுமையாகக் ’கழுவாயாக’க் கொடுத்தார் (1யோவா 2:2). தமக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட துன்ப நிலையிலும், ஏன் எல்லாரோலும் கைவிடப்பட்டு, குற்றவாளியாகச் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோதும், ‘தந்தையே, இவர் களை மன்னியும்; ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ (லூக் 23:34) என்று எல்லோரையும் மன்னிக்கும் மனநிலையில் இறைத்தந்தையை நோக்கி மன்றாட்டை எழுப்பினார்.
இயேசு தம் சீடர்களுக்கு ஒரே ஒரு செபத்தை மட்டும்தான் கற்றுக்கொடுத்தார். அந்தச் செபத்தையே ‘இயேசு கற்றுத் தந்த செபம்’ என்கிறோம். இதை ‘ஆண்டவரின் செபம்’ என்றும் கூறுகின்றோம். ‘ஒட்டுமொத்த நற்செய்தியின் சுருக்கம்’ எனப்படும் இச்செபத்தில், ‘மன்னிப்பு’ முதன்மையான ஓர் உட்பிரிவாக அமைகிறது. ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்’ (மத் 6:12) என்றே செபிக்கக் கற்றுத் தந்துள்ளார். எனவே, கிறிஸ்தவ வேண்டல் என்பது ‘பகைவரையும் மன்னிப்பதில்’ அமைந்துள்ளது. ஆகவே, இயேசுவின் சீடராக இருக்கும் நாம் குற்றம் செய்தோரை மன்னிக்க முன்வர வேண்டும்.
மன்னிப்பு எனும் இந்த உயர்ந்த பண்பையே கடவுள் நம் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றார். இந்தப் பண்பை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப் பரிவு கலந்த அன்புடன் இன்றைய வாசகப் பகுதிகள் வழியாக நம்மை அழைக்கின்றார்.
“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” (மத் 18:21) என்ற பேதுருவின் கேள்வியோடு நகர்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
“ஏழு முறை மட்டுல்ல; எழுபது தடவை ஏழு முறை...” (மத் 18:22) என்பது இயேசுவின் உடனடிப் பதிலாக அமைகிறது. 7, 70 என்ற எண்களை வைத்து கூட்டல், பெருக்கல் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டாம். இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல; கணக்கைக் கடந்த வாழ்வுக்கான பாடம்! அதாவது, மன்னிப்பில் ‘நிபந்தனையோ, வரைமுறையோ’ இருக்கக்கூடாது. அது ‘கடவுளின் செயலாக’ அமைந்திருக்க வேண்டும். மனம் திரும்பி வந்து மன்னிப்புக் கேட்கும் சகோதர-சகோதரிக்கு எவ்விதத் தயக்கமுமின்றி, தொடர்ந்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்பது இயேசு கற்றுத்தரும் முதல் பாடம்.
‘ஏழு முறை மன்னிக்கலாமா?’ என்ற பேதுருவின் கேள்வியைத் தொடர்ந்து, ‘எப்படிப்பட்ட தவற்றை மன்னிப்பது?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்வது போல் அமைவதுதான் இயேசு கூறும் ‘மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை’. மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இந்த உவமை, எல்லைகள் ஏதுமின்றி, மன்னிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. எத்தனைப் பெரிய தவறாக இருப்பினும், மன்னிக்க வேண்டும் என்ற கருத்தைப் புரிந்துகொள்ள, இந்த உவமையில் பயன்படுத்தியுள்ள கடன் தொகைகள் உதவியாக உள்ளன.
இந்த உவமையில் அரசரிடம் பணியாளர் பட்ட கடன் ‘பத்தாயிரம் தாலந்து’ என்றும், உடன் பணியாளர் பட்ட கடன் ‘நூறு தெனாரியம்’ என்றும் இயேசு குறிப்பிடுகிறார். இயேசுவின் காலத்தில் தாலந்து என்பது வெள்ளியிலும், பொன்னிலும் இருந்தது. வெள்ளி தாலந்தை அடிப்படையாகக் கொண்டு கணக்குப் பார்த்தால், ஒரு வெள்ளி தாலந்து என்றால், 6000 திராக்மா அல்லது தெனாரியத்துக்கு ஈடான தொகையாகும். ஒரு தெனாரியம் அல்லது திராக்மா என்பது, அன்றைய காலக்கட்டத்தில் ஒரு தொழிலாளியின் ஒரு நாள் கூலியாகும். அப்படியெனில், ஒரு நாள் கூலி என்ற அளவுகோல் கொண்டு பார்த்தால், ‘பத்தாயிரம் தாலந்து’ என்ற எண்ணிக்கை 60,000,000 நாள்கள் (அறுபது கோடி) அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித்தொகை ஆகும். அப்படியெனில், ஆயுள் காலம் முழுவதும் உழைத்தாலும், அவரால் இக்கடனை அடைக்கவே முடியாது. தலைமுறை தலைமுறையாக அவர் அடிமைப்பட்டுக் கடனாளியாகவே இருப்பார். இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்ட கடன் நூறு தெனாரியம், அதாவது வெறும் 100 நாள் கூலிக்கு இணையானது.
‘அறுபது கோடி தெனாரியம்’, ‘நூறு தெனாரியம்’ என்ற இவ்விரு கடன் தொகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரசரிடம் பணியாளர் பட்ட கடன், ஒரு கடலளவு தண்ணீர் என்றும், மன்னிக்கப்பட்ட பணியாளரிடம் உடன் பணியாளர் பட்ட கடன் ஒரு கையளவு தண்ணீர் என்றும்தான் சொல்ல வேண்டும். கடலளவு கடனில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக் கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, வெளியில் கொணர்ந்து, அப்பணியாளரும், அவரது குடும்பத்தாரும் வாழும் வண்ணம் மன்னிப்பு என்ற உயிர்மூச்சை வழங்கினார். ஆனால், அந்தப் பணியாளரோ தனக்கு அரசர் வழங்கிய உயிர் மூச்சை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்தும் முயற்சியாக, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது, நம் மனம் பதை பதைக்கிறது. தான் பெற்ற மன்னிப்பை, அடுத்தவருக்குத் தர மறுத்தபோது, பணியாளர் பெற்ற மன்னிப்பு விலைமதிப்பற்றுப் போனது. எனவே, அப்பணியாளன் வதைப்போரிடம் ஒப்புவிக்கப்படுகிறான்.
எனவே, கடனையே திருப்பி அடைக்க முடியாத அளவுக்கு இருந்த பணியாளனின் கடனை மன்னித்த அந்த அரசனைப்போல, நாமும் நம் வாழ்வில் சகோதரர்-சகோதரிகள் செய்யும் குற்றங்களையும் மன்னிக்க முயல வேண்டும். நாம் வழங்கும் மன்னிப்பினால், மற்றவர்கள் பெறும் நன்மையை விட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை Jonathan Lockwood Huie எனும் ஆங்கில எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்: ‘Forgive others, not because they deserve forgiveness, but because you deserve peace.’ அதாவது, ‘மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு; அவர்களுக்கு மன்னிப்புத் தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால்’. இதே கருத்தில் அமெரிக்க நாட்டைச் சார்ந்த Harriet Nelson இவ்வாறு கூறுகிறார்: ‘Forgive all who have offended you, not for them, but for yourself.’ ‘உங்களைப் புண்படுத்திய அனைவரையும் மன்னியுங்கள், அவர்களுக்காக அல்ல; உங்களுக்காக’. ‘ஒருவரை மன்னிக்க மறுப்பது என்பது நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்’ எனும் கூற்று நினைவுக்கு வருகின்றது.
இன்றைய எதார்த்தமான சூழலில், அவ்வளவு எளிதாக ஒருவரை மன்னித்துவிட முடியுமா? ஒரு மனிதரால், ஒருவர் செய்த தீமைகளையும், பாவங்களையும் மிக எளிதில் மறந்துவிட முடியுமா? உணர்ச்சியாலும், அறிவாலும் உந்தப்படும் மனித இயல்பு, எப்போதுமே மன்னிப்பதற்குத் தடையாகவே இருக்கும். ஏனென்றால், நம்மைப் பொறுத்தவரை அநீதி என்பது கண்டிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இரக்கமின்றித் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் நம் மனம் சொல்கிறது. முழுமையாக மன்னிப்பது சாத்தியமா? மனித இயல்பால் முடியாது; முயற்சி செய்வோம், மன்னிப்பு என்பது இறைவன் நமக்குக் கொடுக்கும் அருள்; அவரிடம் கேட்டுப்பெற வேண்டிய அருள்!
‘இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில் சோர்வடைவதில்லை. மன்னிப்புக் கேட்பதில் நாம்தான் சோர்வடைகின்றோம்’ எனும் திருத்தந்தை பிரான்சிஸின் உணர்வுப்பூர்வமான வரிகளை நினைவில் கொள்வோம். சிந்திக்க!
இறையியல்பில் மன்னிப்பது என்பது, ஒருவர் செய்த தீமைகள் அனைத்தையும் முற்றிலும் மறப்பது அல்லது நினைவில் கொள்ளாமலிருப்பது. “நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?” (திபா 130:3).
பிறரை மன்னிக்காத உள்ளம், பிறருக்கு இரக்கம் காட்டாத உள்ளம் இறைவனது இரக்கத்தைப் பெற, மன்னிப்பைப் பெற முடியாதபடி கதவை அடைத்துக் கொள்ளும். “மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்” (சீஞா 28:2). உறவுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உண்டு என்றால், அது மன்னிப்பு என்ற செயலால் மட்டுமே முடியும். மன்னிப்பு நம் செபமாகட்டும்; செபம் மன்னிப்பாகட்டும்! ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல...’ (மத் 6:12). நிறைவாக, ‘இறைவன் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை’ (திபா 103:10).
Comment