
ஞாயிறு விருந்து 10, டிசம்பர் 2023
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) எசா 40:1-5; 9-11 2பேது; 3:8-14 மாற் 1:1-8
இறைவன் வருகிறார், சந்திக்கத் தயாராகுங்கள்!
கிறிஸ்து பிறப்பின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம் இந்தத் திருவருகைக் காலம். இது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம். திருவருகைக்கால முதல் ஞாயிறன்று ‘விழிப்பாயிருத்தல்’ எனும் மையச் சிந்தனையில் சிந்தித்தோம். திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு, நம் உள்ளக் குடிலில் பிறக்கவிருக்கும் மெசியாவின் வருகைக்கான ‘அண்மைக்கால தயாரிப்புகள்’ எவை என்பது பற்றிச் சிந்திக்க அழைக்கின்றது.
இன்று நாம் விளம்பர, வியாபார உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பொதுவாக, விழாக் கொண்டாட்டங்களானது சுய விளம்பரங்கள், வெளி ஆடம்பரங்கள் போன்ற உலகமயமாக மாறிவிட்டன. இந்த விளம்பர, வியாபார உலகம் சொல்லும் வழிகளில்தான் நாமும் விழாக்களைக் கொண்டாடப் பழகிவிட்டோம். விழாக்கால விளம்பரங்களே அதிக ஓசையோடு நம் செவிகளில் ஒலிக்கும் போதனைகளாக மாறிவிட்டன. எந்த நாளையும் விழா நாள்களாகப் பார்க்கும் கண்ணோட்டம் கொண்டவர்கள் வியாபாரிகள். இலாபங்களுக்காக அவர்கள் இந்தக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு விழாவுக்கும் வியாபார, விளம்பர உலகம் எவ்வளவு மும்முரமாகத் தயாரிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
உரோம் நகரிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு வர்த்தக ரீதித் தயாரிப்புகள் அக்டோபர் மாதத்தின் இறுதியிலே துவங்கிவிடுகின்றன. நம் நாட்டில் தீபாவளி முடிந்த கையோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவுக்கான தயாரிப்புகளும், அவற்றுக்கான விளம்பரங்களும் வந்துவிடுகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை முடிவதற்குள், பொங்கல் ஆரம்பித்துவிடும். பொங்கல் முடிவதற்குள், அடுத்த விழாக்கள் என வியாபார உலகைப் பொறுத்தவரை, எல்லாத் திருநாள்களும் முன்னதாகவே வந்துவிடும்.
ஒவ்வொரு விழாவுக்கும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இவர்களின் தயாரிப்பு, சிந்தனை ஓட்டம் ஆரம்பித்துவிடும். கடந்த ஆண்டு கூறுவதையே மீண்டும் கூறுவதில்லை. வருவதென்னவோ அதே கிறிஸ்துமஸ், தீபாவளி என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் ஒரு புது கண்ணோட்டம் நாம் வெடிக்கும் பட்டாசுகள், அணிந்துகொள்ளும் ஆடைகள், ஒளியூட்டும் வண்ண விளக்குகள் என அனைத்திலும் கையாளப்படும். புதிய விளம்பரத் தள்ளுபடிகள் நம் இதயங்களை இதமாக்குகின்றன; கண்களைக் குளிர்விக்கின்றன. விழாக்கள், கொண்டாட்டங்களுக்காக இந்த வியாபார உலகமும், அதற்குத் துணை நிற்கும் விளம்பர உலகமும் செய்யும் தயாரிப்புகளுக்கு முன்னால், நமது ஆன்மிகத் தயாரிப்புகள் அனைத்தும் தோற்றுவிடும். வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில், நூறில் ஒரு பங்கு நாம் நமது திருநாள்களுக்கு ஆன்மிக வழிகளில் தயாரிக்க ஆர்வம் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாட உலகம் முழுவதும் எல்லா ஆலயங்களிலும், பல்வேறு நிறுவனங்களிலும், இல்லங்களிலும் தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. டிசம்பர் மாதம் துவங்கியவுடன் சாலைகளும், கடைகளும் மின் விளக்குகளால் மின்னுகின்றன. வீட்டு அலங்காரம், புத்தாடைகள், வண்ண விளக்குகளுடன் கூடிய விண்மீன்கள், கிறிஸ்மஸ் மரம், பரிசுகள் என்று வியாபார உலகம் காட்டும் வழியில் இந்தத் திரு வருகைக் காலத்தை நாம் இந்நேரம் ஆரம்பித்திருந்தால், அவற்றைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு, உண்மையான கிறிஸ்து பிறப்பின் பொருளை உணர்வதற்கு நம்மை அழைக்கும் இன்றைய ஞாயிறு வாசகங்களுக்கு நம் இதயம் திறப்போம்.
ஆன்மிக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் வழியாக விடைகள் தேடுவோம்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 40:1-5,9-11), இரண்டாம் எசாயா நூலின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனம் இன்றைய வாசகத்தின் பின்புலமாக அமைகிறது. யூதா நாடு நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு, எருசலேம் மக்கள் அனைவரும் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். துன்பமும், அழுகையும், அங்கலாய்ப்பும், கூக்குரலும் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையில் பல கட்டங்களில் நிகழ்ந்தன. “எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றுமில்லை. குடியிருக்க மண் இல்லை, வழிநடத்த மன்னன் இல்லை; நடமாட நாடு இல்லை; வழிபட கோயில் இல்லை; பின்பற்ற சட்டம் இல்லை; மனதில் நம்பிக்கை இல்லை” என வாழ்வின் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர் இஸ்ரயேல் மக்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி, நம்பிக்கை தரும் விடுதலைச் செய்தியை வழங்குகின்றார்.
கடவுள் தம் மக்களை விடுவித்து, அவர்களது சொந்த வீடான எருசலேமில் புது வாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார்; அவர்கள் வருவதற்கான வழியை ஆயத்தம் செய்வார் என்று இறைவாக்கினர் எசாயா முழக்கம் செய்கிறார். வரலாற்றில் ஆண்டவர் கடவுளே என்பதும், இஸ்ரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு அழுத்தமாக வலியுறுத்தப் பெறுகின்றன. “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” எனும் சொல், ‘நம் கடவுள் நம்மோடு இருக்கின்றார்; நம் அருகில் இருக்கின்றார்; அவர் நம்மீது அக்கறை கொண்டுள்ளார்; அவர் நம்மை விட்டுத் தொலைதூரத்திலோ அல்லது நாம் காணக்கூடாத இடத்திலோ இருப்பதில்லை. அவர் நம்மோடு வாழ்கிறார், நம்மோடு தங்குகிறார், நம்மைக் காண்கிறார், நம்மைக் காக்கிறார், நமக்குத் துணை செய்கிறார்’ என்கின்ற ஆறுதலும், நம்பிக்கையும் தருகின்ற வாக்குறுதிகளாக அமைகின்றன.
இது எப்படிப்பட்ட ஓர் ஆறுதல்? இதை எசாயா இறைவாக்கின் பின்னணியில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிலையான ஆறுதலை மனிதர்களால் என்றுமே கொடுக்க முடியாது. நிலையான ஆறுதலை (அமைதியை) வழங்குபவர் யாவே ஒருவரே! பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு, போராட்டத்தால் புரையோடிப்போன தம் மக்களின் உள்ளத்து உணர்வுகளையும், வேதனையையும் கடவுள் நன்கு அறிந்துள்ளார் (விப 3:7). அவர்கள்மீது தாம் கொண்டுள்ள எல்லையில்லா அன்பை (ஓசே 11) அவர்கள் அருகிலிருந்து முழுமையான மற்றும் நிலையான ஆறுதலைத் தருவதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
எசாயா மக்களின் இதயத்தோடு இனிமையாய்ப் பேசி, எல்லா வகையான துன்பங்களையும் மிகக் கொடுமையான முறையில் அனுபவித்த அவர்களுக்கு ‘இனி துன்பமே இராது’ என்பதை அறிவிக்கின்றார். எசாயா மக்களை நோக்கி, ‘கடவுள் ஆறுதலை உங்களுக்குத் தருவார்; அந்த இறைவனை நோக்கி வாருங்கள். தவறான பாதையில் நடப்பதை விட்டுவிட்டு, போலித் தெய்வங்களை வழிபடுவதை விட்டுவிட்டு, உண்மை தெய்வத்தை நோக்கி வாருங்கள். அந்தக் கடவுளே உங்களை விடுவிக்கிற கடவுள்’ என்று சொல்லி, புதிய விடுதலைப் பயணத்துக்கான பாதையைத் தயார் செய்கிறார். ஆண்டவர் நம் உள்ளத்தில் பயணிக்க வேண்டிய பாதையைச் சரிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் நம்முடைய வாழ்வைத் திருத்திக்கொள்வது, நம்முடைய வாழ்வில் இறைவனுக்கு மாறுபட்டதை, இறைவனுக்கு முரண்பட்டதைத் திருத்தி, நேர்மையானதாக, நலமானதாக, இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்வதுதான் இறைவனுக்காக வழியைத் தயார் செய்வது. இறைவனை விட இந்த உலகத்தை, நம் புலன்களுக்கு இந்த உலகம் தருகின்ற இன்பத்தைப் பெரிதாக மதிப்பதால் ஏற்படுகின்ற வெறுமையான பள்ளத்தாக்கு எல்லாம் இறைநம்பிக்கையைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். மலைகளாய், குன்றுகளாய் மனித மனங்களில் குவிந்து கிடக்கும் ஆணவ-அகந்தை மனநிலைகள் தாழ்ச்சியான மனநிலை கொண்டு சரிசெய்யப்பட வேண்டும்.
குறுக்கு வழியில் நடந்து, குறுகலான சிந்தனைக்கு ஆட்பட்டு, சுயநலங்களான பல்வேறு விருப்பங்களுக்கு உடன்பட்டு, மனித நலன்களை மேம்படுத்தாமல் சுயநலத்தையே மேம்படுத்துகிற கோணலான பாதையை உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், இரக்கம் போன்ற இறைவனுடைய மதிப்பீடுகளால் சரிசெய்யப்பட வேண்டும். கடவுளின் பாதை நேரானதாகவும், சமமானதாகவும், தடைகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக ‘மனமாற்றம்’ தேவைப்படுகிறது. அதைத்தான் திருமுழுக்கு யோவான் தன்னுடைய மீட்பருக்கான பணியாக, பாதைகளைச் செம்மைப்படுத்துகிற பணியாக, வழிகளை அமைக்கக்கூடிய பணியாக அவர் செய்கிறார் என்பதை இன்றைய மாற்கு நற்செய்தியில் (மாற் 1:1-8) வாசிக்கிறோம்.
‘மனமாற்றம்’ என்பது வெறுமனே குற்றங்களுக்காக மனம் வருந்துதலை மட்டும் குறிப்பிடுவதில்லை; அது முழுமையான மாற்றத்தைச் சுட்டுவது; அது மனத்தை முழுவதும் திருப்புவது; சிந்தையைப் புதிய வழியில் திருப்புவது; அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வது. இன்று அதே மனந்திரும்புதல் நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் மெசியாவுக்காக மீண்டும் காத்திருக்கும் நாம் நிரப்ப வேண்டிய பள்ளங்கள், தாழ்த்தப்பட வேண்டிய குன்றுகள், நேராக்கப்பட வேண்டிய கோணல்கள், சமதளமாக்கப்பட வேண்டிய கரடு முரடானவை எவையெவை என்பதை இன்றைய நாளில் கண்டுகொள்வோம்.
இந்த ஞாயிறு நமக்குக் கற்றுக்கொடுப்பவை:
● சமுதாய மாற்றம் ஏற்படுவதற்கு மிக மிக உறுதுணையாக இருப்பது நம் மனமாற்றம். தற்பெருமையில் பூரித்துப் போய், ஆணவம் மிகுந்து வாழும்போது உள்ளத்தில் மலைகள் தோன்றும். பாவங்களாலும், பலவீனங்களாலும் உள்ளங்களில் பள்ளங்கள், பள்ளத்தாக்குகள் உருவாகும். சில வேளைகளில் பெரும் பாதாளங்கள் உருவாகும். இந்த மலைகளைத் தாழ்த்தி, பள்ளங்களை நிரப்புவதற்குத் தேவையான ஆயுதம் நம்மிடம் இருக்கும் தாழ்ச்சியும், இறைநம்பிக்கையுமே.
● நம் இதயம் கடவுள் வாழும் ஆலயம் என்பதை உணர்ந்து, அதில் இறைமகன் பிறப்பதற்கு, நம் மனங்களில் கறைபடிந்துள்ள அழுக்குகளைக் கழுவி, தூசுகளை ஒட்டடை அடித்து, தூய்மைப்படுத்த வேண்டிய தருணம் இது. கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள முறையில் சிறப்பிக்க முதலில் நம் மனங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்; முறிந்த உறவுகள் சரிசெய்யப்பட வேண்டும்; புண்படுத்தியவர்களை மன்னிக்க வேண்டும்; நம்மால் காயப்பட்ட உள்ளங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போதுதான் அமைதியின் அரசராம் இயேசு நம் உள்ளங்களில் பிறப்பார். இவைதான் திருவருகைக் கால தயாரிப்பின் ஒரு பக்கம்.
● நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வியாபார உலகம், அதைவிட விளம்பர உலகம் நம்மீது பல எண்ணங்களைப் புகுத்திக்கொண்டே இருக்கின்றது. திணிக்கப்படும் எண்ணங்களை விட, நாமாகவே இந்த உலகங்களிலிருந்து தேவையான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் நம்மைத் தேடி வருகிற புனிதக் காலத்தில், நம் வாழ்வைச் சீர்படுத்தி, பாதைகளைச் செம்மையாக்கி, இறைவனைச் சந்திக்கப் புறப்படுவோம்.
“இறைவன் வருகிறார். சந்திக்கத் தயாராகுங்கள்” என்ற தொனியில் ஒலிக்கும் திருமுழுக்கு யோவானின் குரல் இன்று நம் செவிகளுக்கும் எட்டட்டும்!
Comment