No icon

21, ஏப்ரல் 2024 (இரண்டாம் ஆண்டு) நல்லாயன் இறையழைத்தல் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு - திப 4:8-12; 1யோவா 3:1-2 யோவா 10:11-18

மந்தையின் மணம் அறிந்த மேய்ப்பர்களாக! 

டைட்டானிக்என்ற புகழ்பெற்ற கப்பல், 1912-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15-ஆம் நாள் அட்லாண்டிக் கடல் நடுவே பனிப் பாறையில் மோதி, கடலில் மூழ்கியது. அக்கப்பலில் Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila என்னும் மூன்று அருள்பணியாளர்கள் பயணித்தனர். இவர்களுக்கு உயிர் காக்கும் படகுகளில் தப்பித்துச் செல்ல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவ்வாய்ப்புகளை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருள்சாதனம் வழங் கியபடி, அவர்களும் அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி கடலில் மூழ்கி இறந்தனர். இம்மூவரில் ஒருவரான அருள்பணி Thomas Byles  அவர்கள், இங்கிலாந்தில் பங்குத் தந்தையாகப் பணிபுரிந்து வந்த புனித ஹெலன் கோவிலில் இவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள வண்ணக் கண்ணாடி சன்னலில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்!

உயிர்ப்புக் காலத்தின் 4-ஆம் ஞாயிறைநல்லாயன் ஞாயிறுஎன்று சிறப்பிக்கின்றோம். இந்த ஞாயிறை இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளாகவும் கொண்டாடுகின்றோம். 1963-ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் நல்லாயன் ஞாயிறை இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளாக உருவாக்கினார். இந்த ஆண்டு இறையழைத்தலுக்குச் செபிப்பதற்கான 61-வது உலக நாளைக் கொண்டாடுகிறோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்அமைதியைக் கட்டியெழுப்பவும், நம்பிக்கையின் விதைகளை விதைக்கவும் அழைப்புப் பெறுகிறீர்கள்என்ற மையக்கருத்தை முன்வைத்துள்ளார்.

நல்லாயன் என்றதுமே இயேசு ஓர் ஆட்டுக்குட்டியைத் தம் தோள்மீது அல்லது மார்போடு அணைத்துச் சுமந்து செல்லும் அமைதியான உருவம்தான் முதலில் நம் உள்ளங்களில் பதிகின்றது. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் இயேசுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட முதல் உருவம் நல்லாயன் உருவம் என்பது வரலாற்று அறிஞர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் உரோமைப் பேரரசால் கொலை செய்யப்பட்ட வேளையில், அவர்கள் உருவாக்கிய நிலத்தடிக் கல்லறைகளில், கிறிஸ்து நல்லாயனாக வரையப்பட்டுள்ளார்.

3-ஆம் நூற்றாண்டையொட்டி உருவாக்கப்பட்ட இந்தக் கல்லறைகளில், அடிக்கடி தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்தது இயேசுவின் நல்லாயன் உருவம்தான்.

ஆடுகளும் ஆயனும்திருவிவிலியத்தில் மிக முக்கிய உருவகங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆபேல்தான் திருவிவிலியத்தில் முதல் ஆயனாக அல்லது ஆடுகளை வளர்ப்பவராகக் காட்டப்படுகிறார் (தொநூ 4:2). இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் பார்த்தால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள் ஆடுகளைப் பேணிக் காத்தவர்கள் என்பதை அறியலாம். தாவீது மந்தை மேய்ப்பவராக இருந்து, பின்னர் இஸ்ரயேலின் ஆயராக மாறினார் (2சாமு 7:8). திருவிவிலியமும் மக்களின் தலைவர்களைமேய்ப்பர்கள்என்றே அடையாளம் காட்டியது (1அர 22:17; எரே 10:21; 23:1-2).

இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்புப் பெற்றிருந்த ஆயர்கள் படிப்படியாகத் தங்கள் மதிப்பை இழந்தனர். ஆயர்கள் - தலைவர்கள் நல்லவர்களாக இல்லை. அவர்கள் ஆடுகள் மீது கவலையற்ற ஆயர்களாக இருந்தனர் (எசே 34:3-4). தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக்கொண்டனர் (34:7-8). திருவிவிலியமும் பல கறுப்பு ஆயர்களை அடையாளம் காட்டத் தவறியதில்லை (எரே 10:21, 22:22, 23:1-4). இவர்கள் தம் மந்தையை முறையாக மேய்க்காததால், இறைவன்தாமே தம் மந்தையை மேய்க்கப் போவதாகக் கூறுகிறார் (எசே 34:11-31). ‘என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்என்று வாக்குக் கொடுக்கிறார் (எரே 3:15) கடவுளால் வாக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற, தலைசிறந்த, தன்னிகரற்ற ஆயர் இயேசு கிறிஸ்து. ‘இயேசுவே நல்லாயன்என முன்மொழியும் யோவான் இன்றைய நற்செய்தியில் நல்லாயனுக்குரிய தனிப்பண்புகளை முன்னிலைப்படுத்துகிறார்.

முதலாவதாக, ஓர் ஆயன் தன் மந்தையை அறிதல் அவசியம். நூற்றுக்கணக்கான ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றையும் அறிந்து, பாசமாய்ப் பெயரிட்டு அழைப்பதும், தன்னைப் பின் தொடரும் ஆடுகளுக்கு முன்சென்று வழிகாட்டுவதும் நல்ல ஆயனின் முக்கியக் குணங்கள். திருவிவிலியப் பார்வையில்அறிவதுஎன்பது உள்ளார்ந்த உறவு நிலையைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதரின் பெயரை அறிந்து, அழைப்பது (10:3) என்பது மக்களை முழுமையாக அறிந்திருப்பதையும், அவர்களோடு உள்ள உறவையும் குறிக்கிறது. எனவே, நல்ல ஆயன் முதலில் தன் மந்தையோடு நல்லுறவைப் பேண வேண்டும். 2013-ஆம் ஆண்டு புனித வியாழனன்று காலை திருத்தைல அர்ச்சிப்புத் திருப்பலியில் பங்கேற்ற 1600-க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களை நோக்கி, ‘உங்கள் ஆடுகளின் நறுமணத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (Be shepherds with the smell of sheep) என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பம் தொடர்ந்து நம் காதுகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்!

இரண்டாவதாக, பாதை தெளிவாய்த் தெரிதல் அவசியம். தன்னைப் பின்தொடரும் ஆடுகளை நேரிய வழியில் பாதுகாப்பான பாதையில் தெளிவாய் வழிநடத்தத் தெரிய வேண்டும். அதிகமான நேரங்களையும், தங்கள் வாழ்நாள்களையும் இவற்றுக்காகவே பாலைநிலங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் செலவளிக்க வேண்டும். உணவும், நீரும் உள்ள நல்ல மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மொத்தத்தில் தன் மந்தையைக் குறையேதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் (திபா 23).

மூன்றாவது, பாதுகாக்க முன்வருதல் மிக அவசியம். மக்கள் பாதிக்கப்படும்போது தலைவர் மக்களைப் பாதுகாக்க வல்லவராக இருக்க வேண்டும். ஆடுகளுக்கு ஓநாயாலும், திருடர்களாலும் பாதிப்பு ஏற்படுவதுபோல (1சாமு 17:34-35), மக்களைத் தாக்கும் ஆபத்துகளையும், தீய சக்திகளையும் இனம் கண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இவ்வாறு மக்களைக் காக்கும் நல்ல ஆயர் அல்லது தலைமைக்கும் ஆபத்து ஏற்படலாம். சில நேரங்களில் தீய சக்திகள் தலைவரின் உயிரையே பறிக்கலாம். ஆனால், தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில் முக்கியமாக, அவர்களின் துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்பவரே உண்மையான ஆயர். தேவைப்பட்டால் நல்ல தலைவர் தம் மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மக்களின் துன்பத்தை, அவல நிலையைப் போக்க இறப்பதற்கும் துணிந்தார். இவர் நற்செயல் புரிகின்ற நல்லாயனாக (முதல் வாசகம்), அன்புள்ளம் கொண்ட நல்லாயனாகத் (இரண்டாம் வாசகம்) திகழ்ந்தார்.

இன்று நல்லாயன் இயேசுவைப்போல, தன்னை நம்பி இருக்கும் மக்களாகிய ஆடுகளைக் காப்பாற்ற எத்தனை ஆயர்கள், தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள்? பார்வையும், பாதையும் தெளிவில்லாத தலைவர்களும், அகந்தை, தன்னலம், பேராசை, பதவி மோகம், பழிவாங்கும் வெறி போன்ற தீயக் கொள்கைகளுக்காக மக்களைப் பலி கொடுக்கும் தலைவர்களும்தாம் மனித வரலாற்றின் பக்கங்களை அன்றும், இன்றும் நிரப்பி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் நல்ல வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, தலைவர்களாகப் பொறுப்பேற்ற பிறகு தங்களை நம்பிப் பின்தொடரும் ஆடுகளை (மக்களை) வேட்டையாடும் போலித் தலைவர்களை நாம் உல கெங்கும் சந்தித்து வருகின்றோம். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவியைத் தக்கவைத்துக் கொண்டாலே போதும் என்று நினைப்பவர்கள்தாம் அதிகம். விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், வாகனங்கள், பொருள்கள், விளம்பரங்கள் இவற்றில்தான் அவர்களின் ஒட்டுமொத்தக் கவனமும் செல்கின்றது. எளிமை, ஏழ்மை, இரக்கம், பிறரன்பு, தியாகம் ஆகியவற்றை அவர்களிடத்தில் அதிகம் பார்க்க முடிவதில்லை.

இன்று பசுத் தோலைப் போர்த்திக்கொண்டு ஆடுகளை அநியாயமாக வேட்டையாடும் புலிகளை, ‘கூலிக்கு மேய்க்கும்போலித் தலைவர்களை அடையாளம் காண்போம். வெறும் பணம், பதவி, அதிகாரம் எனும் போதைகளில் வாழும் மனிதர்களை மதிப்பதைத் தவிர்ப்போம்; அவர்கள் பின்னால் செல்வதை அறவே ஒழிப்போம். நல்ல மனிதநேயமுள்ள ஆயர்களின் குரல் கேட்போம். துன்புறும் மக்களைக் காக்கவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும், அவர்களுக்காக நம் வாழ்வையே தியாகமாக்கவும் நல்ல ஆயர்களாக நாம் முன்வருவோம்.

மந்தையின் மணமறிந்த மேய்ப்பர்களாக...

தன் ஆடுகளின் பெயர் அறிந்தவராக, அவற்றை வழிநடத்தும் பாதை தெரிந்தவராக, ஆபத்து காலங்களில் அவர்களைப் பாதுகாக்க வல்லவராக, எதிர் சக்திகளை எதிர்த்துப் போராடுபவராக, வறுமை ஒழித்து உணவூட்டுபவராகச் செயல்படுபவரே நல்லாயன்.

சமுதாயத்தில் அடையாளமிழந்து, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் மணம் அறிந்து, அவர்களோடு தன்னையும் அடையாளப்படுத்தி, அவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் அளவிற்கு அன்பும், அக்கறையும் நிறைந்தவரே நல்லாயன்.

தன்னிடம் இருக்கும் ஆடுகளிடம் கொள்ளும் கரிசனையைத் தன் கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளுக்கும் காட்டி, கூலிக்காக மேய்ப்பவர்களின் கைகளில் சிக்கித் தவித்து, சிதறுண்டு போகும் மந்தைகளையும் தன்னோடு இணைத்துக்கொள்பவரே நல்லாயன்.

நிறைவாக, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் இந்த நாளில் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து, நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றி, இறைப்பணிக்குத் தங்களையே வழங்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம். இன்றைய மற்றும் நாளைய வருங்காலத் தலைவர்கள் நல்லாயன் இயேசுவைப்போலமந்தையின் மணம் அறிந்து செயல்படமன்றாடுவோம்.

Comment