No icon

18, ஆகஸ்டு 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு - நீமொ 9:1-6; எபே 5:15-20; யோவா 6:51-58

நிலைவாழ்வு தரும் உணவு நற்கருணை

கடவுள் மனிதருக்கு உணவளித்து வாழ வைக்கின்றார். மனிதரைப் படைத்த கடவுள் முதல் செயலாக அவர்களுக்கு உணவு அளிக்கிறார் (தொநூ 2:9). பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவும், காடை இறைச்சியும் உணவாக அளித்து அவர்களைக் காத்தார் (விப 16:2). ஞானத்தின் ஊற்றாம் இயேசு தம் பணிவாழ்வில் உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இயேசு செய்த வல்ல செயல்கள், மனமாற்றங்கள், அறிவுரைகள், உவமைகள் யாவும் உணவு வேளையில்தான் நிகழ்ந்தன.

பாலைநிலத்தில் தம் வார்த்தைகளுக்குச் செவிமடுத்த மக்களுக்கு வயிறார உணவு அளித்தார் (மாற் 6:42). தொழுகைக்கூடத் தலைவர் யாயீரின் மகளை உயிர்த்தெழச் செய்தபோது, அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார் (லூக் 8:55). மீன் பிடிக்கச் சென்ற தம் சீடர்கள் களைப்புடன் திரும்பிய போது, அவர்களுக்காக உணவு தயாரித்துக் கொடுத்தார் (யோவா 21:12).  வரி தண்டுபவர்கள், பாவிகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் இல்லங்களைத் தேடிச் சென்று, அவர்களோடு உணவு உண்டு, அவர்களுக்கு மனமாற்றத்தையும் மீட்பையும் வழங்கினார் (மத் 9:9-10; லூக் 11:37; 14:1). இதனால் இயேசுவுக்குக் கிடைத்த பட்டம் - “பெருந்தீனிக்காரன், குடிகாரன்” (மத் 19:11).

இயேசு பிறந்தது பஞ்சு மெத்தையில் அன்று; கால்நடைகளுக்கு உணவு வைக்கின்றதீவனத் தொட்டியில்’ (லூக் 2:12). ஏழ்மை, எளிமை, தனிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை... இவற்றில் ஏழையாகப் பிறந்த இயேசு உணவின் அருமையை அறியாதிருப்பாரோ? ஒன்பது மணிக்கு வந்தவருக்கும், ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கு வந்தவருக்கும்ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரேவிதமான ஊதியம் கொடுக்கும் இயேசுவின் செயல் ஒரு வேளை நமது பார்வையில்   அநீதியாகத் தெரியலாம் (மத் 20:1-16); ஆனால் இயேசு ஒவ்வொருவரின் பசியைப் பார்க்கிறார். “உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை” (மத் 15:32) எனும் இயேசுவின் பரிவுமிக்க உணர்வுதான் இங்கேயும் வெளிப்படுகிறது. யோவான் நற்செய்தி 6 -ஆம் அதிகாரம், கடவுள் மனிதருக்குத் தரும் மூன்று வகையான உணவுகளைப் பற்றிப் பேசுகிறது. உடல் உணவு (1-15); இறைவார்த்தையாய் உள்ள உணவு (35-50); கிறிஸ்தவச் செயல்பாட்டிற்கான நற்கருணை உணவு (51-58). கடந்த மூன்று வாரங்களாக உடலுக்கு இன்றியமையாத உடல் உணவு பற்றியும், உள்ளத்திற்குத் தேவையான இறைவார்த்தை உணவு பற்றியும் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று, நற்கருணை உணவைப் பற்றிச் சிந்திப்போம்.

கடந்த வார நற்செய்திப் பகுதியின் இறுதி வசனத்தில் இயேசு, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்” (6:51) என்பார். இது இயேசுவுக்கும் யூதருக்கும் இடையே ஒரு விவாதத்தை உருவாக்கியது. “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” (6:52) எனும் வினா, நற்கருணையைப் பற்றி இன்னும் ஆழமாக விளக்கிச் சொல்ல இயேசுவுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இயேசுவின் சதையை உண்பதும், அவருடைய இரத்தத்தைக் குடிப்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத செயல்களாக யூதருக்குப் பட்டன. என்ன காரணம்? யூத மரபிலே தசையை உண்ணுதல் என்பதற்கு வெறுத்தல், பழித்தல் என்ற பொருளுண்டு (திப 27:2; செக் 11:9). உணவு தொடர்பான பல சட்டங்களும் யூதர்களுக்கு இருந்தன. தடைசெய்யப்பட்ட உணவுகள் இருந்தன. இரத்தம் பிரிக்கப்படாத விலங்குக் கறியை உண்ணக்கூடாது என்பது மிக முக்கியமான ஓர் உணவுச் சட்டம். “இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதீர்கள்என்பது ஒரு முக்கியமான சட்டம் (தொநூ 9:4). இரத்தத்தைக் குடிப்பது என்பது ஓர் அருவருக்கத்தக்க செயல். அது யூதர்களின் வாழ்வில் தடைசெய்யப்பட்ட ஒரு செயல் (லேவி 3:17; இச 12:23). எனவே, அதை அருந்தக்கூடாது என்பது கடவுளின் கட்டளை (லேவி 17:10-14; திப 15:29).

கடவுளுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆட்டினை எவ்வாறு உண்ணவேண்டும் என்பது குறித்து இணைச்சட்ட நூல் இவ்வாறு கூறுகிறது: “ஆட்டின் இரத்தத்தை உண்ணவேண்டாம். தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிடு” (15:23). யூதர்களைப் பொறுத்தவரை உயிர் என்பது இரத்தத்தில் இருப்பதாக நம்பினார்கள். உயிர் கடவுளுக்குச் சொந்தமானது; எனவே கடவுளுக்குச் சொந்தமானதை மனிதர்கள் எப்படி உண்ணமுடியும்? இயேசு கூறிய கூற்றை நேரடிப் பொருளில்தான், அதாவது, ‘சதையை உண்ணல்எனும் பொருளில்தான் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இயேசுவின் இரத்தத்தைக் குடிக்க இயேசு கூறுவதாகப் புரிந்துகொண்டு, “இதை ஏற்றுக்கொள்வது கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” (6:60) எனக் கூறி முணுமுணுத்தார்கள்.

யூதர்களின் முணுமுணுப்புக்காக இயேசு தம் கூற்றைச் சற்றும் மாற்றிக்கொள்ளவில்லை. “மானிட மகனுடைய சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய வாழ்வு அடையமாட்டீர்கள்என மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் (6:53). இயேசு சொன்னசதை’, ‘இரத்தம்என்ற இந்த இரு வார்த்தைகளும் மக்களை  நிலைகுலையச் செய்தன. ‘அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தம் சதையையும் இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே...’ என்று மக்கள் தடுமாறினர். இருந்தாலும், மீண்டும் உறுதிபடச் சொல்கிறார்: “எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” (6:54). எனவே, இயேசு நற்கருணையில் தருவது வெறும் வாழ்வு அல்ல, நிலைவாழ்வு. பழைய ஏற்பாட்டு மக்கள் திருச்சட்டத்தையும், மன்னாவையும் பெற்றுமடிந்துபோகும்வாழ்வுதான் வாழ்ந்தனர். ஆனால் இயேசு தரும் உணவை உண்பவர்நிலைவாழ்வுபெறுவார் (6:58).

யோவான் நற்செய்தி முழுவதிலுமே இயேசு தம்மை நிலைவாழ்வு அருள்பவராகவே வெளிப்படுத்துகிறார் (3:17, 10:27, 5:24, 6:39, 17:3).

இயேசு குறிப்பிடும் நிலைவாழ்வு என்பது அவரின் வருகையோடு தொடங்குகிறது. இயேசுவை நம்பி அவரில் திருமுழுக்குப் பெறுபவர்கள் நிலைவாழ்வுக்கு உட்படுகிறார்கள் (உரோ 6:4). இந்த நிலைவாழ்வு இயேசுவால் நமக்குக் கொடுக்கப்படும் புதுவாழ்வு (1கொரி 4:11). கடவுளுக்கு மட்டுமே உரித்தான நிலைவாழ்வில் பங்குகொள்ள நாம் பேறுபெற்றுள்ளோம். சுருங்கக்கூறின், காலத்திலும் காலம் கடந்தும் (விப 3:14) கடவுளோடு, கடவுளுக்குள் ஒன்றித்து அவர் வாழ்வில் பங்குபெறுவதேநிலைவாழ்வு’.

இயேசுவுக்குள் ஒன்றித்து எவ்வாறு வாழ்வது? இயேசுவின் சதைஉண்மையான உணவு’. இயேசுவின் இரத்தம்உண்மையான பானம்’ (6:55). இந்த உண்மையான உணவை உண்டு, உண்மையான பானத்தைப் பருகுபவர்கள் வெறும் வாழ்வையல்ல, நிலைவாழ்வைக் கொண்டிருப்பர். அது மட்டுமன்று, இயேசுவை உண்ணும்போது இயேசுவுக்கும், அவரை உண்பவருக்குமிடையே ஒரு நெருக்கமான உறவு பிறக்கிறது (1கொரி 10:16).

இந்த உறவு பிரிக்க முடியாத ஓர் உறவு! இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில்எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்என்கிறார் (6:56). தந்தையும் மகனும் கொண்டிருக்கும் ஒரே இறை உயிரில் நற்கருணை வழி நாமும் பங்குபெறுகிறோம்.

இறுதியாக, இயேசு தமது தந்தையைவாழும் தந்தைஎன அழைக்கிறார். ‘அவரே என்றும் வாழ்பவர்’ (தொநூ 21:33); ‘காலத்திற்கு அப்பாற்பட்டவர்’ (உரோ 16:26); ‘அவர்தான் என்னை அனுப்பினார்என்கிறார் (6:57). அவரால் தாம் வாழ்வதைப் போல், தம்மை உண்போரும் தம்மால் வாழ்வர் என்கிறார். தமக்கும், தம் தந்தைக்கும், தம் உடலை உண்போருக்குமான பிரிக்க முடியாத உறவை எடுத்துக்காட்டுகிறார். தங்களின் சட்டங்களாலும், கடைப்பிடிக்கும் விருத்தசேதனத்தாலும், தங்கள் யூதப் பிறப்பாலும் தாங்கள் கடவுளோடு இணைந்திருக்கிறவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த யூதர்களுக்கு இயேசு கூறியதைக் கேட்பதற்குக் கடினமாகத்தான் இருந்திருக்கும். இயேசுவை விடுத்து தந்தை கடவுளை நாம் அடைய முடியாது; அவரது உடலை உட்கொள்ளாமல் நாம் நிலைவாழ்வில் பங்குபெற முடியாது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.

நம் வாழ்வின் மையமாக இருக்கும்நற்கருணைநமக்குக் கடவுளின் கொடைகளைத் தருகிறது. யாருக்கும் கிடைக்காத சிறப்பு என்னவெனில், நற்கருணையில் கிறிஸ்துவையே (கடவுளையே) உணவாகப் பெறுகிறோம். இந்த நற்கருணையில் இறைவனின் அளவு கடந்த அருளை நாம் பெறுகிறோம்.

நற்கருணைக்குஇறைவனின் அணைகடந்த அருள்என்று பொருள் தருகிறார் வீரமாமுனிவர். “அழியா வாழ்விற்கு அருமருந்தாகவும், சாவுக்கு ஒரு மாற்று மருந்தாகவும் இயேசுவோடு என்றும் வாழ நம்பிக்கையாகவும் இருப்பது நற்கருணைஎன்கிறார் புனித அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார். “நற்கருணை முன் என்னையே மறக்கிறேன்; அவர் எனக்குள் வந்து விடுகிறார்என்கிறார் புனித அன்னை தெரசா. எனவே, இயேசுவின் உடலாம் நற்கருணையை ஒவ்வொரு நாளும் சுவைத்துப் பார்ப்போம் (திபா 34).

இயேசுவின் உடலைச் சுவைத்துப் பார்ப்பதால்,

நாம் அவரோடு இணைந்து உயிருள்ள ஆலயமாய், பலியாய், பலி பொருளாய் மாறி தம்மையே ஒப்புக்கொடுக்கிறோம்!

நாம் அவரது வார்த்தையைக் கேட்பதிலும், அதை அன்றாடம் வாழ்வாக்குவதிலும் முனைப்போடு செயல்படுகிறோம்!

நாம் அவரின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேவையில் உள்ள நம் சகோதர-சகோதரிகளுக்காக நம் வாழ்வையே கையளிக்க முன்வருகிறோம்!

Comment