No icon

25, ஆகஸ்டு 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு - யோசு 24:1-2,15-17,18; எபே 5:21-32; யோவா 6:60-69

நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?’

வாழ்வில் போராட்டங்கள், பிரச்சினைகள், துயரங்களைச் சந்திக்கும்போது வருத்தம், ஏமாற்றம், இயலாமை, கோபம் போன்ற பல உணர்வுகள் நம்மில் எழுகின்றன. இந்தப் பிரச்சினைகளோடு வாழ்க்கை தொடர்பான பல சவால்கள் நிறைந்த கேள்விகளும் நம்மை வாட்டுகின்றன. சில சமயம் வாழ்க்கையில் நாம் நசுக்கப்படலாம்; கையறு நிலைக்குத் தள்ளப்படலாம்; இறைவன்மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையில் தடுமாறலாம். அந்நேரங்களில் நாம் இயேசுவை விட்டு விலகிச் செல்லாமல், அவர் கரம்பிடித்து நடக்கையில் நம்மைச் சுற்றி நிகழ்பவை அனைத்தும் நலமானதாகவே அமையும் எனும் நம்பிக்கையை விதைக்கிறது இன்றைய திருவழிபாடு.

கடந்த நான்கு வாரங்களாகவே நாம் யோவான் 6-ஆம் அதிகாரத்திலிருந்து நற்செய்திப் பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இயேசு 5000 பேருக்கு அப்பம் பலுகச் செய்த நிகழ்வோடு யோவான் ஆறாம் அதிகாரம் தொடங்குகிறது. இயேசு வழங்கிய வியப்புக்குரிய விருந்தில் பங்குகொண்ட மக்கள், தங்கள் வயிற்றுப் பசியைத் தீர்க்க, இயேசுவை மீண்டும் தேடிவருகின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையினால் அல்ல; மாறாக, அழிந்துபோகும் உணவையே தேடினர் (யோவா 6:26). தொடர்ந்து யூதர்களுடனான விவாதத்தில் நற்கருணை பற்றிய பல இறையியல் உண்மைகளை இயேசு விளக்கிக் கூறினார். பல கடினமான சவால்களை முன்வைத்தார். அழியாத உணவை அவர் தருவதாகக் கூறியதும், இயேசுவைப் பின்தொடர்ந்தவர்களுள் பலர் அவருடைய பேச்சினை ஏற்றுக்கொள்வது கடினம் எனவும் (6:60), அவருடைய போதனை நம்ப இயலாததாக உள்ளதாகவும் கூறி அவரை விட்டுப் பிரிந்து செல்கின்றனர் (6:66). ஆனால், இயேசுவைப் பின்சென்றவர்களில் சிலரோ, அவர்மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அவரது போதனைகளை ஏற்றுக்கொள்கின்றனர் (6:69).

இயேசுவின் சீடர்கள் அவரை விட்டு விலகிச் செல்வதற்கான காரணங்கள் சில:

முதலாவதாக, “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது” என்று இயேசு கூறியபோது, “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?” (6:42) என்று கூறி இயேசுவை நிராகரிக்கின்றனர். தங்களுக்கு அறிமுகமான ஒருவரை, மிகச் சாதாரணமான ஒரு மனிதரை, இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருந்தது அவர்களுடைய ‘முற்சார்பு எண்ணங்கள்.’

இரண்டாவது, யாரெல்லாம் உலகத்தின்மீது தீராத பற்றும், உலகப் பொருள்களின்மீது அளவில்லாத ஆசையும் கொண்டிருந்தார்களோ அவர்களாலும் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்ல இயலவில்லை. எடுத்துக்காட்டாக, ‘செல்வம் துறந்து வாழ்தலே என்னைப் பின்தொடர்வதற்கான  எளிய வழி’ என்று இயேசு கூறியபோது, உலகப் பொருள்களின்மீது பற்று கொண்டவர்கள் இயேசுவோடு உடன் பயணிக்க இயலாமல் போனது (மத் 19:21,22).

மூன்றாவதாக, இயேசுவின் சவாலான போதனைகள். எடுத்துக்காட்டாக, தமது உடல், இரத்தம், நிலைவாழ்வு, நற்கருணை பற்றி இயேசு போதித்தபோது, “இதை ஏற்றுக்கொள்வது  மிகக்கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” (6:60) என்று சொல்லி சீடர்கள் பலர் இயேசுவிடமிருந்து விலகிச் சென்றனர்.

இயேசுவையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவரை விட்டுப் பலர் பிரிந்து சென்ற சூழலில், இயேசு பன்னிரு சீடர்களிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” (6:67) என்று கேட்கிறார். திருத்தூதர்கள் இயேசுவின் போதனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அல்லது இயேசுவைப் பற்றி இன்னும் முழுமையாக அறிந்திராவிட்டாலும், பேதுரு அனைவர் சார்பாகவும் “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” (6:68) என உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறார்.

பேதுரு மற்றும் திருத்தூதர்களின் இந்த முடிவு ஒரு சாதாரண முடிவு அல்ல; மரணத்தை விரும்பி ஏற்கும் முடிவு. எனவே, அவர்களின் முடிவு அவர்களை இறப்புவரை அழைத்துச் சென்றது. இருப்பினும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை; இயேசுவை விட்டு விலகிச் செல்லவுமில்லை. இயேசுவுக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணமாக்கியதால் சக்திமிகுந்த சாட்சிகளாக அனைவரும் மாறினர். தங்களையே இயேசுவுக்கு முழுமையாக அர்ப்பணித்தனர்; சரணடைந்தனர். இதுவே உறுதியான நம்பிக்கை; உண்மையான சீடத்துவம். பேதுரு தனது நம்பிக்கை அறிக்கை வழியாகத் திருத்தூதர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியதுபோல, இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா தனது நம்பிக்கை அறிக்கை வாயிலாக இஸ்ரயேல் மக்களை ஒன்றிணைத்து வழிநடத்துவதைக் காண்கிறோம்.

மோசேவுக்குப்பின் இஸ்ரயேல் மக்களைத் திறம்பட வழிநடத்தி, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வந்தவர் யோசுவா (இச 34:9). ஓர் இறைவாக்கினரைப்போல் யோசுவா ‘ஆண்டவரின் ஊழியராக’ இருந்து மக்களை வழிநடத்தியவர். வாக்களிக்கப்பட்ட நாட்டைக் கைப்பற்ற நடந்த போரிலும், மேற்கொண்ட தடைகளிலும் யாவே இறைவன் ஆற்றிய வியத்தகு செயல்களைக் கண்டவர். யாவேயின் கட்டளைப்படி, கைப்பற்றப்பட்ட நாட்டுப் பகுதிகளை வெவ்வேறு இஸ்ரயேல் குலத்தினருக்கும் பங்கிட்டுக் கொடுத்தவர் (யோசு 13:1).

மோசேயின் மூலமாக வழிநடத்திய இறைவன், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் இஸ்ரயேல் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளியதை நினைவூட்டும் யோசுவா, மக்கள் பிற இனக் கடவுள்களை விட்டு விட்டு, யாவே கடவுளை மட்டும் பற்றிக்கொள்ள அழைக்கிறார் (23:8). பிற இனக் கடவுள்களைப் பின்செல்லாமலும், அவற்றை வணங்காமலும், “ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் ஊழியம் புரிய மக்களிடம் விண்ணப்பிக்கிறார் (24:14). யோசுவாவின் விண்ணப்பத்தைக் கேட்ட மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” என ஆண்டவர்மேல்  தாங்கள் கொண்டிருந்த பற்றுறுதியையும், நம்பிக்கையையும் அறிக்கையிடுகின்றனர் (24:18).

பேதுரு மற்றும் யோசுவா ஆகிய இருவரும் வெளிப்படுத்திய நம்பிக்கை அறிக்கையைத்தான் நாமும் நம் திருமுழுக்கின்போதும், ஆண்டுதோறும் கொண்டாடும் பாஸ்கா திருவிழிப்பு போன்ற திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் அறிக்கை செய்ய அழைக்கப்படுகிறோம். நம்பிக்கை அறிக்கையின் இறுதியில், ‘தூய கத்தோலிக்கத் திரு அவையை நம்புகிறேன்’ என அறிக்கையிடுகிறோம். நமது நம்பிக்கையின் மிக முக்கியமான கூறு இதுதான்.

இறைவார்த்தையால் முன்னறிவிக்கப்பட்ட இறையாட்சியைப் போதித்து, இயேசு இவ்வுலகில் திரு அவையைத் தொடங்கி வைத்தார் (திருச்சபை எண்.5). இந்த இறையாட்சி நிலைபெற பன்னிரு திருத்தூதர்களைக் கொண்ட அமைப்பை நிறுவினார். தமது முதன்மைத் திருத்தூதரான பேதுருவின் தலைமையில் இத்திருக்கூட்டத்திற்குக் கட்டமைப்பை உருவாக்கினார்.

‘ஒரே ஆயனும் ஒரே மந்தையும்’ என்ற எதிர்நோக்கோடு கிறிஸ்தவ சமூகம் ஒரே தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் நோக்கம். எனவேதான் இயேசு நம்பிக்கை கொண்டோர் பிளவுபடா உள்ளத்தோடு ஒரே சமூகமாக இணைந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அந்த ஒன்றிப்பை உண்மையாக்க கிறிஸ்து பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியாரைத் தந்து உறுதிப்படுத்தினார்.

எனவே, நாம் சார்ந்திருக்கும் திரு அவை என்பது ஒரே திரு அவை, தூய திரு அவை, கத்தோலிக்கத் திரு அவை, திருத்தூது திரு அவை.

தந்தை-மகன்-தூய ஆவி ஆகிய மூவரும் தம்முள் ஒன்றாய் இருக்கின்ற காரணத்தால், அவரினின்று ஊற்றெடுக்கும் திரு அவையும் ஒன்றாய் இருக்கிறது. தந்தையோடும் தூய ஆவியோடும் இயேசு ஒருவரே தூயவர் என்பதால், அவர் நிறுவிய திரு அவையும் தூயதாக இருக்கிறது.

எல்லா இன, மொழி, நாட்டினரையும் ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து அனைவருக்கும் பொதுவானதாகவும், உரோமை ஆயரோடு கொண்டுள்ள உறவு ஒன்றிப்பினாலும் இத்திரு அவை கத்தோலிக்கத் திரு அவையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமது திரு அவை திருத்தூதர்களை அடிக்கல்லாகவும், இயேசுவை மூலைக்கல்லாகவும் கொண்டு கட்டப்பட்ட திருத்தூது திரு அவையாக இருக்கிறது.

இத்தகைய தன்மைகளும், பண்பு நலன்களும் நமது கத்தோலிக்கத் திரு அவைக்கு மட்டுமே உரியன. இத்தகு ஆழ்ந்த பொருள்செறிவும், இறையியல் கட்டமைப்பும் கொண்ட ஒரு திரு அவையின் உறுப்பினராக நாம் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவோம். கிறிஸ்துவிலும், அவரது திரு அவை மீதும் நம்பிக்கைக் கொள்வோம். ‘இயேசுவின் குத்தித் திறக்கப்பட்ட விலாவிலிருந்து பிறந்த இந்தத் தாய் திரு அவையை’ விட்டு விலகிச் செல்பவர்களுக்காகச் சிறப்பாக இன்று மன்றாடுவோம்.

நாம் இயேசுவை விட்டு, திரு அவையை விட்டு விலகிச் செல்லும்போது, இயேசு திருத்தூதர்களைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியை இன்று நம்மைப் பார்த்தும் கேட்கிறார்: “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” (6:67). இறைவனை நோக்கி யோசுவா, இயேசுவை நோக்கிப் பேதுரு கூறிய பதிலை நாமும் ஒரே குரலாக இயேசுவுக்குச் சொல்வோம்.

“நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” (யோசு 24:18); “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” (யோவா 6:68).

Comment