No icon

22, செப்டம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு-சாஞா 2:17-20; யாக் 3:16- 4:3; மாற் 9:30-37

பணியாளராய் இருப்பவரே பெரியவர்!

நமது வாழ்க்கையில் பணம், பொருள், பட்டம் மற்றும் பதவி மட்டுமே நம்மை வானளவுக்கு உயர்த்தும் என்று நினைக்கிறோம். இவை இருந்தால்தான் அனைவரும் தன்னைப் பெரியவராக மதிப்பார்கள் என நினைக்கின்றோம். உலக நாடுகளில் அரசியல் நடத்துவோரையும், உலகை அடக்கி ஆள நினைத்துச் செயல்படுவோரையும் பார்க்கும்போது பணம், புகழ், பதவி இவையெல்லாம் நிரந்தரமாக இருந்து, இறந்த பின்னும் கூடவே வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு உள்ளதோ என்று அஞ்ச வைக்கின்றது.

இன்று சாதாரண மக்கள் அதிகமாகத் துன்பப்படுவதற்கு முக்கியக் காரணங்கள் பதவி ஆசையும், பண ஆசையும்! பதவியும், பணப் பதுக்கலும், ஆதிக்கவெறியும் நாற்காலிகளைப் பிடிப்பதிலே கவனம் செலுத்துகின்றன. புகழ், பணம் பதவி எதுவுமே நிரந்தரமில்லை என்பதற்கு எத்தனையோ பேரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நாம் இந்த உலகை விட்டுப் பிரியும்போது பதவியும் பணமும் பொருளும் நம்முடன் வராது. நாம் அமர்ந்திருக்கும் நாற்காலியில் அமர்வதற்கு நூறு பேர் வரிசையில் நிற்பர். எனவே, நிரந்தரமில்லா வாழ்வில், நிலையில்லா ஆசைகளையும், போட்டி மனப்பான்மைகளையும் துறந்து இயேசுவின் பணியாளராய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

மாற்கு நற்செய்தியின் ஒன்பதாவது அதிகாரம் இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளைப் பற்றிக் கலந்துரையாடுகின்றன. இரண்டாம் முறையாகத் தம் பாடுகளையும் சாவையும் முன்னறிவிக்கும் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம்.

இயேசுவின் இறையாட்சிப் பணியில் துன்பங்கள் தவிர்க்க முடியாதவை. இயேசுவின் பாடுகளும் இறப்பும் அவரது இறையாட்சிப் பணியின் விளைவுகளே. இதே பணியும் இதே விளைவுகளும் தம்மைப் பின்தொடர்பவர்களுக்குக் குறிப்பாக, சீடர்களுக்கும் நமக்கும் இருக்கும் என்ற உண்மையை இயேசு இன்று கற்றுத்தருகிறார்.

ஏற்கெனவே, முதன்முறை தம் பாடுகளை இயேசு அறிவித்தபோது, அதை எதிர்த்த பேதுருவைக் கடுமையாகக் கடிந்துகொண்டார் இயேசு. சீடர்களின் எதிர்பார்ப்புகள் இயேசுவின் இப்புதிய வெளிப்பாடுகளால் தவிடுபொடியாகிவிட்டன. இருப்பினும், சீடர்களின் பலவீனத்தை நன்கு அறிந்த இயேசு, அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, தம் பாடுகளுக்கும், இறப்பிற்கும் பின் வரவிருந்த தமது வெற்றியை உருமாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார். அவரது வெற்றிகரமான தோற்றத்தில் பெருமகிழ்ச்சி கொண்ட பேதுரு, அதே தோற்றத்தில் இயேசு நீடித்திருக்க வேண்டும் என விரும்புகிறார். வெற்றி வாகை சூடும் இயேசுவையே மீண்டும் நாடும் பேதுருவின் அறியாமையை நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.

இயேசு தமது இறப்பை இரண்டாவது முறை முன்னறிவிக்கிறார். இயேசு தம்மைப் பற்றியும், தமது சீடத்துவத்தைப் பற்றியும் அறியாமையில் இருக்கும் சீடர்களுக்குத் தொடர்ந்து விளக்கிட முயல்கிறார். பாஸ்கா மறைபொருளின் மூன்று முக்கியக் கூறுகள்: 1. மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; 2. அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; 3. கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் எனக் கற்பிக்கிறார் (வச 31). ஆனால், சீடர்களோ இயேசுவை அதிகம் புரிந்துகொள்ளவில்லை. இதை மாற்கு இவ்வாறு விவரிக்கின்றார்: “இயேசு சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை, அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்” (வச 32).

இயேசு சிலுவையைப் பற்றிப் பேசியது சீடர்களுக்கு ஏன் விளங்கவில்லை? காரணம், சீடர்களிடையே பதவி மோகம் தலைதூக்கியது. இயேசு இவ்வுலகில் ஓர் அரசை நிறுவப்போகிறார்; அதில் நமக்குப் பெரிய பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அவர்கள் சிந்தனையை நிறைத்திருந்தன. எனவேதான் தங்களுள் யார் பெரியவர்? என்பதைப் பற்றி விவாதித்தனர் (33-34). தம்முடைய சிந்தனையிலிருந்து வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்த சீடர்களின் மன ஓட்டத்தைப்  புரிந்து கொண்ட இயேசு, ‘வழியில் என்ன பேசினீர்கள்?’ என்ற கேள்வியைக் கேட்கிறார். அவர்கள் பேசாதிருந்தார்கள் என்று நற்செய்தி சொல்கிறது (வச. 34). ஏன் அந்த அமைதி? காரணம், அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை அல்லவா! தங்களோடு இருந்தவர்கள், பழகியவர்கள் இன்னுமா தம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் இயேசுவுக்குள்  இருந்தாலும், சலிப்படையாமல் மீண்டும் அவர்களுக்குத் தம் எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார். அவர்தான் உண்மையான குரு!

பதவிக்கு அல்ல, பணிக்காகவே சீடர்கள் முன்வர வேண்டும் என்ற எதார்த்தமான உண்மையை இயேசு எடுத்துரைக்கிறார். “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (வச. 35) என்ற மிக முக்கியமான போதனையை இயேசு வழங்குகிறார். இயேசுவிற்கே மிகவும் தனித்துவமான போதனையாக இது அமைகிறது. பொதுவாக இன்று உயர்ந்த இடத்தையும், உயர் பதவியையும், அதிகாரத்தையும் எட்டிப் பிடிக்க ஆட்சியாளர்கள் முயலும்போது, இந்த உலக முறையை மாற்றித் தம்முடைய அரசு இவ்வுலக அரசுகளைப் பின்பற்றாது என்பதை இயேசுவின் வாழ்வுமுறை நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு இயேசு அமைக்கும் இறையாட்சிக் குழுமம் ஒரு மாற்றுச் சிந்தனைக்கானது; இதில் சீடராயிருப்பது என்பது இயலாத நிலையிலும், வறுமையில் வாடுகின்றவர்களுக்கு உதவிகள் செய்வது. இயேசு தமது புதிய அணுகுமுறையை வலியுறுத்த ஒரு சிறு பிள்ளையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார்.

இன்றைய நற்செய்தியில் நாம் கவனிக்க வேண்டியது, மாற்கு தரும் சிறுபிள்ளை (வச. 36, 37) என்ற சொல் யாரைக் குறிக்கிறது? வயதில் சிறியவர்களையா? அல்லது சமூக, பொருளாதார நிலையில் தாழ்ந்தவர்களையா? மாற்கு நற்செய்தியாளர் பொருளாதார நிலையில் தாழ்ந்தவர்களைத்தான் குறிப்பிடுவதாகக் காண்கிறோம். ஏனென்றால், மாற்கு தரும் பாடத்தில்தொண்டுபற்றியும், சிறுபிள்ளையைஏற்றுக்கொள்வதுபற்றியும் கூறப்படுகிறது. இயேசு குறிப்பிடும் சிறுபிள்ளை, இயலாத நிலையில் உள்ள மக்களுக்கு ஓர் அடையாளம். சிறுபிள்ளை என்பது வயதில் சிறியவர் என்பதைவிட கடவுளையே நம்பி தாழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழையரைக் குறிக்கும். சிறியோரையும், சமூகத்தில் விளிம்புநிலை மக்களையும் ஏற்று அவர்களுக்குச் செய்யும் பணி என்பது இயேசுவையும், அவரை அனுப்பிய இறைத் தந்தையையும் ஏற்றுப் பணி செய்வதற்குச் சமம் என்பதை விவரிக்கின்றார் (வச. 36-37)  இப்பணியில்தான் ஒருவர் பெரியவர் என்றும், சேவை வழிதான் நாம் துன்புறும் இயேசுவுக்குச் சீடர் ஆகிறோம் என்றும் விளக்கம் பெறுகிறோம். எனவே, அத்தகைய மக்கள் பணிக்குச் சீடர்கள் முதலிடம் தந்து, அதனால் வரும் இடர்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே இன்று இயேசு தரும் முதன்மைப் பாடம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் சீடத்துவப் பணி வாழ்வில் இருக்கின்ற சில நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிட்டு விளக்க முயல்கிறார் யாக்கோபு. சீடத்துவத்தில் அன்றும் இன்றும் இருக்கின்ற முக்கியமான பிரச்சினைபொறாமையும் மனக்கசப்பும்.’ இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், சுயநலம் என்பது இன்று மட்டுமல்ல, என்றுமே தீமைகள் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. இதுபேய்த்தன்மைவாய்ந்தது. இது சாத்தானின் செயல்பாடு! பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் எல்லாக் குழப்பங்களும் கொடுஞ்செயல்களும் நடக்கும். கட்சி மனப்பான்மையும், பதவி ஆசையும் பிளவுகளை உருவாக்க முயலும். எனவே, இவற்றைத் தவிர்த்து, விண்ணிலிருந்து அருளப்படும் ஞானமான தூய்மை, அமைதி, பொறுமை, இணங்கிப்போகும் தன்மை, இரக்கம், நடுநிலை தவறாமை, வெளிவேடமற்ற செயல் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதே சமுதாயத்தில் நன்மை விளைவிப்பதாகும் என யாக்கோபு கூறுகிறார்.

யாக்கோபு பட்டியலிட்ட விண்ணக ஞானத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்களே இறைப்பற்றுள்ளவர்கள். இவர்களைநீதிமான்கள்என்றும், ‘ஞானிகள்என்றும் அழைக்கலாம். இவர்கள் கடவுளை மட்டுமே சார்ந்திருப்பவர்கள்; உலக ஞானத்தில் அக்கறை காட்டாதவர்கள். ஆனால், இதற்கு மாறாக பணம் மற்றும் பதவி வெறியில் மூழ்கித் திளைப்பவர்கள் இறைப்பற்றில்லாதவர்கள். இவர்கள்அறிவிலிகள்என அழைக்கப்பெறுகிறார்கள். இவர்களே பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தக்கூடியவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்வு என்பது முற்றிலும் இந்த உலகைச் சார்ந்தது; பதவியும் பணமும் நாற்காலியும் அவர்களைச் சார்ந்தது. எனவே, பணமா? பதவியா? புகழா? எது நிரந்தரம்? நம்மையே கேட்டுப்பார்ப்போம்.

சிந்தித்துச் செயல்பட...

ஏழைகளிடம் இயற்கையாகவே இருக்கின்ற எளிமை, தாழ்ச்சி, கபடற்றத் தன்மை, திறந்த மனம், நம்பகத்தன்மை போன்ற குணநலன்கள் நம்மை இயேசுவின் சீடர்களாக்கும்.

சிலுவையைத் தூக்கி எறிந்துவிட்டு அதிகாரத்தை அரவணைக்கும் சீடர், இறையாட்சியில் பெரியவர் ஆகிவிட முடியாது. பணியாளராய் இருப்பவரே பெரியவர்; கடைசியானவரே முதல்வர்.

பணம், பொருள், பதவி இவற்றின்மீது ஆசை இருந்தால், நம்மை அறியாமலேயே நம்மிடம் ஆணவமும் அகங்காரமும் பொறாமையும், கட்சி மனப்பான்மையும் வந்துவிடும்.

Comment