No icon

13, அக்டோபர் 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு-சாஞா 7:7-11; எபி 4:12-13; மாற் 10:17-30

வாழ்க்கை என்பது பெறுவது மட்டுமல்ல, கொடுப்பதும்!

நாம் வாழும் இந்த வாழ்வின் அழகு, நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதில் அல்ல; ‘என்னால் இத்தனை பேர் மகிழ்ச்சியடைகின்றனர்என்பதிலேயே அடங்கியிருக்கிறது. ஆம், மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை; மாறாக, பிறருக்குக் கொடுப்பதில்தான் அமைகிறது. “நல்வாழ்க்கை என்பது நம்மிடம் இருப்பதைப் பொறுத்தது அல்ல; மாறாக, கடவுளுடன், மற்றவர்களுடன், மேலும் குறைவாகப் பொருள் உள்ளவர்களுடன் நாம் கொண்டுள்ள அணுகுமுறையைப் பொறுத்தே அமைகிறது” (திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி, 24.01.2024).

சிலர் இறைவனிடம்இறைவா, எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுஎன்று வேண்டுகின்றனர். ‘உனக்கு ஏன் கொடுக்க வேண்டும்? நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்டால், என்ன பதில் சொல்வது? அதற்காகவாவது நாம் அறம் செய்ய வேண்டும். தர்மமே அறம்!

ஏழைகளுக்கு உதவி செய்யும்போது உதவி பெற்றவர்கள்நீ நீடூழி வாழணும் சாமிஎன்று இரு கைகூப்பி வேண்டுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் கடவுளை நோக்கி எழுப்புகின்ற இந்த வேண்டுதலை, இறைவன் ஒருபோதும் நிராகரிப்பதில்லை. ஏன் தெரியுமா? உதவுகின்றவர்களால் ஏழைகளுக்கு உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஏழைகளுக்கான வாழ்வாதாரத்தைக் கடவுள் இப்படியும் நிறைவு செய்வாரன்றோ!

ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறுபொருள் தேடும் இவ்வுலகில்மற்றவரிடமிருந்துஎதைப் பெறுவேன்?’ என்ற சிந்தனையில் எந்நேரமும் மூழ்காமல், ‘என்னால் மற்றவருக்கு எதைக் கொடுக்க முடியும்?’ என்று சிந்திக்க நம்மை அழைக்கிறது.

இன்றைய நற்செய்தியில்நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” (மாற் 10:17) என்ற வேட்கையுடன் இயேசுவைத் தேடிவந்த செல்வரிடம், இயேசு கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார். அவரோ, கட்டளைகளைத் தான் கடைப்பிடித்து வந்துள்ளதாகவும், அதற்கும் மேல் என்ன செய்வது என்று கேட்கும்போது, “நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்” (10:21) என்கிறார். அந்தச் செல்வர் சற்றும் எதிர்பாராத இந்தச் சவாலைக் கேட்டதும்அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார்; ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது’ (10:22) என்று வாசிக்கிறோம். அவர் தேடிவந்த நிலைவாழ்வை விட, அவருடைய சொத்துகள் அவரை அதிகமாய்ப் பற்றியிருந்ததால், இயேசு விடுத்த சவாலான அழைப்பை அவரால் ஏற்க முடியவில்லை.

இறையாட்சிக்கும் இறையாட்சிப் பணிக்கும் தேவையான எளிமை, ஏழ்மை, செல்வத்தில் பற்றற்ற தன்மை போன்ற மதிப்பீடுகளை ஏற்க முடியாமல் செல்வம் அந்தச் செல்வரைத் தடுத்தது. எந்தப் பொருள்மீது மனிதனுக்கு அளவற்ற பற்று ஏற்படுகிறதோ, அந்தப் பொருளால் அடையக்கூடிய துன்பங்கள்தான் மிகுதியாகும். எவற்றிலிருந்து நாம் பற்றறுந்து விலகி நிற்கிறோமோ, அவற்றினால் வரும் துன்பங்களிலிருந்தும் அப்போதே விலகி விடுகிறோம் என்பதுதான் வாழ்வின் பேருண்மை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் (குறள் 341)

என்கிறார். இந்த மாபெரும் பேருண்மையை எப்படியேனும் செல்வருக்குப் (நமக்கும்) புரிய வைக்க முயல்கிறார் இயேசு. இயேசு அவரை அன்பொழுகக் கூர்ந்து நோக்கியும், இயேசுவின் பார்வையில் தன் பார்வையைச் செல்வர் பதிக்க முன்வரவில்லை. பாவம்! செல்வத்தைச் சேர்த்து, அச்செல்வங்களுக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டார் போலும்.

செல்வத்திற்கு முதலிடம் தரும் யாராலும் இறைவனுக்கும் இறையாட்சிக்கும் முதலிடம் தர முடியாது என்பதை இந்தச் செல்வரின் முடிவு நமக்கு உணர்த்துகிறது. ஒருவர் செல்வராய் நிலைத்திருப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் குவித்துவிட்டால், இறையாட்சி எனும் கொடையை அவர் கண்டுகொள்ளாமலும், அதை அடைய முயற்சி எடுக்காமலும் போய்விடலாம்.

செல்வப்பற்று மிக்கவர்கள் கடவுளைத் தேடுவதில்லை. நிலைவாழ்வில், மீட்பில் அக்கறையற்றவர்களாகவே இருப்பர். செல்வத்தை மையமாக வைத்துச் செயல்படுவோர் நிறைவு பெறமுடியாது. செல்வம் சேரச் சேர மீண்டும் அதிகமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆசையே அதிகமாகும். ‘உலகச் செல்வத்தால் எதையும் செய்ய எங்களால் இயலும்என்ற சுயநம்பிக்கையில் வளர்வர். செல்வம் அவரது வாழ்வில் கடவுளைவிட முன்னுரிமையாக மாறிவிடும். செல்வத்தை அதிக ஆர்வத்தோடு நாடுவது சுயநலத்தின் வெளிப்பாடு; சுயநலம் இறையாட்சிக்கு எதிரானது. எனவேதான் இயேசு, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” (10:24) என்கிறார்.

இயேசு செல்வத்திற்கோ, செல்வருக்கோ எதிரானவர் அல்லர். செல்வத்தால் ஒரு மனிதருக்கு வரக்கூடிய தீமைகள், ஆபத்துகள் குறித்து எச்சரிக்கிறார். செல்வத்தின் மீதிருக்கும் நீங்காத பற்று ஒருவரை நிரந்தர அடிமையாக்கி விடுகிறது. முதலில் ஒரு பொருளின்மீது ஆசை; அந்த ஆசை அதிகமாகும்போது அது பற்றாகப் பரிணமிக்கும். அந்தப் பொருளை எப்படியேனும் தன்னுரிமையாக்கத் துடிக்கும் வேட்கை ஒரு மனிதரைத் தூக்கம் மறக்கச் செய்யும். ஒருவேளை விரும்பிய பொருள் கிடைக்கவில்லையெனில், அந்த ஏக்கம் உயிரை வாட்டும் (சில நேரங்களில் உயிரையே எடுக்கும்!). விரும்பிய பொருள் கிடைத்துவிட்டால் கைநழுவி விடுமோ என்ற அச்சம் கவலைகொள்ளச் செய்யும். நாள்பட்ட கவலை கோபமாக மாறும். கோபம் பகையை உருவாக்கும்; நிம்மதியைக் கெடுக்கும். ஆகவே, அனைத்துக்கும் அடித்தளம் பணம், பொருள், செல்வம்... இவற்றின்மீது மனிதர்கள் கொள்ளும் பற்றே. எனவேதான் இயேசு சொல்கிறார்: “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:15). இந்தக் கூரிய சிந்தனை நமக்கும் தேவைதானே!

அச்சம், சினம், போட்டி, பொறாமை, பேராசை, பற்று... இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமெனில் இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுவதுபோல ஞானத்தைக் கண்டடைய வேண்டும். செல்வத்திற்கும் மேலானது ஞானம். அதை விரும்பித் தேடவேண்டும். ஞானத்தோடு ஒப்பிடும்போது, செல்வம் என்பது ஒன்றுமே இல்லை. செங்கோலும் அரியணையும்கூட ஞானத்தின் முன்னால் வெறுமையே. இந்த உண்மையை உணர்ந்ததாலேஉனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கடவுள் கூறியபோது, “ஆண்டவரே, ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்” (1அர 3:9) என சாலமோன் வேண்டிக்கொண்டார். ஆண்டவர் அவருக்கு ஞானத்தோடுகூட செல்வங்களையும், நீடிய ஆயுளையும் தருகிறார். ஆக, ஞானத்தோடு ஒப்பிடும்போது பொன்னும் சிறிதளவு மணலே. பொன்னுக்கு நிகராகக் கருதப்பட்ட வெள்ளி வெறும் களிமண்ணே. ஒளிகூட மங்கக்கூடியது, ஆனால், ஞானம் மங்காதது. ஞானத்தைப் பெறுபவர் அனைத்தையும் பெறுகிறார். ஞானம் தனிமையாக வராமல், அனைத்துச் செல்வங்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறது. அதாவது, ஞானத்தைப் பெறுகிறவர் உண்மையாகவே செல்வராகிறார். ஞானமே இயேசு - இறைவார்த்தையே ஞானம்!

ஏழைகள் யார்? அவர்கள் நம்மைப் போன்றவர்கள்; நம்மோடு வாழ்கின்றவர்கள். அவர்கள் ஏழைகளாக இறைவனால் படைக்கப்பட்டவர்களல்லர். அநீதியான சமூக அமைப்புகளாலும், மனிதப் பேராசைகளாலும், பெரும் பணக்காரர்கள் மேலும் வாழ சமனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்காக ஏழையரின் வாழ்வாதாரம் சுரண்டப்படுவதாலும், ஏழைகள் நம் சமூகத்தில் அன்றாடம் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு உரியவற்றையும் உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். இவர்களுக்கான மனித மாண்பும் மரியாதையும் மறுக்கப்படுகின்றன. இவர்கள் ஏழைகளாக வாழ்வது இயேசுவின் விருப்பமல்ல; இயேசு வறுமையை வரவேற்பவருமல்லர். அவர்கள் வாழ்வு ஏற்றம்பெற்று, அனைத்து மக்களோடும் ஏற்றத்தாழ்வின்றிச் சமநிலையில் வாழவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். கடவுள் நமக்குக் கொடைகளையும், திறமைகளையும் கொடுத்திருக்கிறார் என்றால் அதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவே. ‘பகிரப்படாமல் பதுக்கும் செல்வம் யாவும் அநீதியானதுஎன்பதே இயேசுவின் நிலைப்பாடு.

புனித அன்னை தெரேசா இவ்வாறு சொல்வார்: “இரு கைகூப்பிக் கடவுளை வணங்குவதைவிட, ஒரு கை நீட்டி உதவி செய். இரு கை உன்னை வணங்கும் கடவுளாக. கொடுப்பது சிறிது என்று தயங்காதே. ஏனென்றால், அதைப் பெறுபவருக்கு அது பெரிது. வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; மாறாக, மற்றவர் மனத்தில் நீ  வாழும்வரை. நோய்களிலே மிகக்கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.” எவ்வளவு அற்புதமான வரிகள்!

கடவுள் இரு கரங்களை நமக்குத் தந்துள்ளார். ஒன்று, நமக்கு உதவவும், மற்றொன்று அடுத்தவருக்கு உதவவும். எனவே, ஒட்டிய வயிறோடும், கட்டிய கந்தல் துணியோடும் அன்றாட வாழ்வுக்கான உத்தரவாதம் இல்லாத எண்ணற்ற ஏழைகளுக்கு நம் கரத்தை நீட்டப் போகிறோமா? (சீராக் 7:32) அல்லது ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லாது முகம் வாடிய வருத்தத்தோடு சென்ற செல்வரைப்போல (மாற் 10:22) இயேசுவை விட்டு விலகிச் செல்ல விரும்புகிறோமா? இயேசுஅன்பொழுகநம்மைப் பார்க்கிறார். முடிவு நம் கையில்தான்!

Comment