No icon

திருவழிபாடு

திருமதி. I. ஆலிஸ் மேரி, தாமஸ் மவுண்ட், சென்னை-மயிலை.
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு குறிப்பிட்ட நெறிமுறைகளோடு அனுமதிக்கப்பட்டாலும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்க இறைமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். வழக்கம்போல தொலைக்காட்சி, வலையொளி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக திருப்பலி காண்பதையே விரும்புகின்றனர். ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்பதற்கும் ஊடகங்கள் வழியாக திருப்பலியில் பங்கேற்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? இது அதற்கு ஈடாகுமா?
இதற்கு நேரடியாக பதில் அளிப்பதற்கு முன்பாக, நாம் காணும் இணையவழி, காணொளி, தொலைக்காட்சி திருப்பலியின் வழியாக நாம் பெறும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வது இங்கே சற்று அவசியம் எனத் தோன்றுகின்றது. கடந்த 5 மாதமாக நம் ஆலயங்கள் எல்லாம் மூடப்பட்டு இருந்த நிலையில் நம் மக்களின் நம்பிக்கை, ஆன்மிக வாழ்வு இருண்டுபோய்விடுமோ என்று பயந்து இருந்த மக்களுக்கு வெளிச்சமாக, ஒளியாக இருந்தது நாம் கண்ட தொலைக்காட்சி திருப்பலிகளே. தொலைக்காட்சி வழியாக திருப்பலி, செபமாலை, ஆராதனை, தியானம், அருங்கொடை வழிபாடு என நம் நம்பிக்கை வாழ்க்கை சிறிதும் தளராமல், கடவுளின் அருளை, ஆசீரை இல்லந்தோறும் நமக்கு கொண்டு வந்தவை தொலைக்காட்சியும், இணைய தளமும்  சமூக ஊடகங்களுமே. இவற்றின் மூலம் இறைவார்த்தைப் பகிர்தலைக் கேட்டோம்; ஊட்டம் பெற்றோம்; சமூக விலகலிலிருந்தாலும், திருப்பலி கொண்டாடிய குருவின் செயல்களில், செபங்களில் ஆன்ம ரீதியாக ஒன்றித்திருந் தோம். இது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நமக்கு ஒரு பெரிய ஆசீராக இருந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னோம். 

அதே வேளையில், ஒரு சிறிய தெளிவு ஏற்படவே இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் நமக்கு அவசியம் எனப்படுகிறது. ஆன்ம நற்கருணை நமக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தாலும் நாம் நேரில் திருப்பலியில் பங்கேற்று கிறிஸ்துவினுடைய உடலையும் இரத்தத்தையும் பெறுவதுபோல் இது ஆகாது. மேலும், இந்தக் கொரோனா காலத்துக்கு ஏற்ற நமக்கு ஆறுதல் தரும் ஒரு தற்காலிக மாற்றுவழியே ஆகும். யார் திருப்பலியில் நேரிடையாக பங்கேற்கின்றார்களோ அவர்களே பொருள் உணர்ந்தும் செயல்முறையிலும் முழுமையாகவும் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.

அதாவது, “அவர்கள் ஆர்வமிக்க நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் அன்புடனும் உள்ளத்தாலும் உடலாலும் செயல்முறையிலும் முழுமையாகவும் இக்கொண்டாட் டத்தில் பங்கு கொள்வதைத் திருஅவை மிகவே விரும்புகின்றது; இது கொண்டாட்டத்தின் இயல்புக்கே இன்றியமையாதது. இது திரு முழுக்கினால் கிறிஸ்தவ மக்களின் உரிமையும் கடமையும் ஆகின்றது (திவ, 14).

இதையே ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று, நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைக்காட்சி திருப்பலி பார்ப்பது குறித்தும் ஆன்ம நற்கருணை குறித்தும் நமக்கு ஞாபகப்படுத்தினார்: “இந்தத் துன்பமான காலத்தில் கடவுள் இதை திருஅவை யில் அனுமதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எப்போதும் மக்களோடும், அருளடையாளங்களோடும் சேர்ந்து இருப்பதே திருஅவையின் நோக்கம் ஆகும்.”
இதிலிருந்து நமக்கு தெளிவுபடுவது தொலைக்காட்சி, காணொளி, இணைய தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நாம் காணும் காணொளி திருப்பலிகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரு குரு ஒப்புக்கொடுக்கும் திருப்பலிக்கு இணையாகாது. எனவே தொலைக் காட்சி,  இணைய வழி காணும் திருப்பலி முதன்மையாக ஒரு ஆன்மிகச் செயலே ஒழிய, நேரில் சென்று திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்கு இணையாகாது.

இன்றைய நெருக்கடி காலத்தில் இது ஒரு தற்காலிக முன்னேற்பாடே. இப்போது ஆலயங்கள் திறந்து பொது வழிபாடுகள் ஆரம்ப மாகிவிட்டதால் இணையவழி திருப்பலியில் மக்களின் ஆர்வம்குறையும் என்பது திருஅவையின் மீது தாகம்கொண்ட அனைவரின் ஆவலாக இருக்கின்றது.                  
(தொடரும்...)
அடுத்தவார கேள்வி: ஆன்ம நற்கருணை என்றால்
என்ன? அதன் வரலாறு என்ன? ஆன்ம நற்கருணையின் பலன் என்ன? ஆன்ம நற்கருணை மன்றாட்டு தமிழில்உள்ளதா? அதனை எப்போது, எப்படி ஜெபிக்கவேண்டும்?
திருமதி. இலா. எஸ்தர் மேரி, நகர், 
கும்பகோணம் மறைமாவட்டம்
 

Comment