பந்தயக் குதிரைகள் அல்ல, ஆசிரியர்கள்!
(Burn out) எரிந்து போதல் நோய்க்கு ஆளாகும் ஆசிரியர்கள்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. சுழற்சி முறையில் மாணவர்களும், ஞாயிறு தவிர்த்து ஏனைய ஆறு நாட்கள் ஆசிரியர்களும் பந்தயக் குதிரைப்போல் கற்பித்தலில் ஓடிக்கொண்டிருந்த தருணத்தில், மீண்டும் ஒமைக்ரான் மிரட்டுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளின் காட்சி. என்று முடியும் என்கிற ஏக்கம் நிறைந்த ஒருவித கையறு நிலையே தொடர்கிறது.
எரிந்து போதலுக்கு பலியாகும் ஆசிரியர் சமூகம்
தற்போதைய கற்றல் இடைவெளியால் மாணவர்களின் எதிர்காலம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதோ, அதற்கு இணையாய் வாரத்தில் ஆறு நாட்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் மற்றும் ஆன்லைன் வகுப்புகள், ஆசிரியப் பெருமக்களின் உடலையும், மனதையும் வெகுவாகப் பாதிக்கிறது. பாதிப்பின் எண்ணிக்கை நாளும் ஏறுமுகத்தில் உள்ளது. இதனை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பல மணிநேர கற்பித்தலுக்கும், சிறப்பு வகுப்புகளுக்காக கூடுதல் நேரம் செலவிடும் சூழலுக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் என்ன இயந்திரங்களா? ஓடிக்கொண்டேயிருக்கும் பந்தயக் குதிரைகளா? அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள், உறவுகள் உண்டு. நல்லது கெட்டதிற்கு செல்லும் ஆசையும் எண்ணமும் உண்டு. அனைத்திற்கும் மேலாய் உடலும், உணர்வும் உண்டு. இதனை ஏன் நம் சமூகம் ஏற்க மறுக்கிறது?
மிகவும் அர்ப்பணிப்போடு பணி செய்த தனியார் பள்ளி பெண் ஆசிரியை ஒருவர் சமீபத்தில் தனது பணியை ராஜினாமா செய்தார். வீட்டில் உள்ளவர்கள் காரணம் வினவியதற்கு அவரிடமிருந்து பதில் ஏதுமில்லை. எனக்கு நன்கு அவரை தெரிவதால் குடும்பத்தினர் என்னிடம் விசயத்தைக் கூற, நான் விபரம் வினவினேன். ‘சமாளிக்க முடியல்ல’ என்றார். ‘யாரை’? என்றேன். ‘மாணவர்களையும், நிர்வாகத்தையும்’ என்று ஒற்றை வரிக்குள் முடித்துக்கொண்டார். இன்னொருவர், ஆசிரியரான தன் மனைவியின் செயல்பாடுகள் குறித்து என்னிடம் இப்படி முனங்கினார். முன்னையப் போல இப்ப அவ இல்ல. எப்பப்பார்த்தாலும் எரிச்சல்படுறா, சின்ன விசயத்துக்கும் கோபம் பொத்துக்கிட்டு வருது, பிள்ளைகள எதற்கு திட்டுறா? ஏன்னே தெரியல?
மற்றுமொரு ஆசிரியர், அவருடைய சுறுசுறுப்பு, சக ஊழியர் உறவு, கற்பிக்கும் விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்பொழுது அவர் அப்படியில்லை. அதிகம் பேசமாட்டார், எப்போதும் களைப்போடும், சோகத்தோடும் இருக்கிறார். எரிச்சல் உச்சம் காண்கிறது. இவரா அவர்? என்ன ஆச்சு இவருக்கு? என்றே பலரும் பேச ஆரம்பித்தனர். விஷயம் என் காதிற்கு வந்ததும் அலைபேசியில் அவரை தொடர்புகொண்டேன். “எப்பவும் டார்ச்சர், இயல்பாகவே பாடம் நடத்த இயலவில்லை. பாடத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்கிற கட்டாயம், சென்டம் வாங்க வேண்டும் என்கிற நிர்வாகத்தின் அழுத்தம், எல்லாம் வெறுத்து போயிற்று” என்று சலிப்போடு சொன்னார். அனைத்து உரையாடல்களும் உரைக்கும் வேதனைகள் ஆயிரமாயிரம். ஆசிரியர் - மாணவர் - பள்ளிக்கூடம் இவற்றிற்கிடையிலான நீண்ட இடைவெளி மாணவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. கட்டுப்பாடுகள், மரியாதை, விழித்திருப்பது, கீழ்ப்படிதல் போன்ற நற்காரியங்களை மாணவர் சமூகம் சரிவர கடைபிடிக்க கொஞ்ச அவகாசம் தேவைப்படுகிறது. மாணவர்களை எப்படி தங்கள் வழிக்குள் கொண்டு வருவது என்று சிந்திப்பதே பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சவாலாக உள்ளது. கூடுதலாக, தனியார் பள்ளிக்கூடங்களில் குறைந்த சம்பளம் அல்லது சம்பளக்குறைப்பு, ஆசிரியர்களைக் கறவைமாடாய் பயன்படுத்தும் போக்குகளும் தேவையற்ற விரக்திகளை ஏற்படுத்துகிறது. இதனால் இன்று ஆசிரியர்கள் பலர் எரிந்து போதல் மனநிலைக்கு ஆட்பட்டுள்ளனர்.
‘எரிந்து போதல்’ (Burn Out) என்பது
இடைவெளியின்றி தொடர்ந்து வேலை செய்வதால், பணிச்சூழல் ஏற்படுத்தும் சுமையால் உளவியல் ரீதியாக ஒருவரிடம் ஏற்படும் உணர்வு நிலையே ‘எரிந்து போதல்’ (Burn Out). இது மன மற்றும் உடல் சோர்வு நிலைசார் உணர்ச்சி. WHO (உலக சுகாதார அமைப்பு) இந்த நோய்க்குறியை “வெற்றிகரமாக நிர்வகிக்கப்படாத பணியிட மன அழுத்தம்” என்று வரையறுக்கிறது. இவ்வித பணியிட மன அழுத்தம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வையும், உடல் நலனையும் வெகுவாகவே பாதிக்கும். சப்பானிய மொழியில் இதனை ‘கரோஷி’ என்கிறார்கள். அதற்கு, ‘அதீத வேலை காரணமாக இறப்பது’ என்று அர்த்தம். உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி உலகெங்கும் ஆண்டொன்றுக்கு அதீத வேலைக் காரணமாக சுமார் 7.50 லட்சம் பேர் இறக்கிறார்கள். கரோஷி இறப்புகள் நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா காலக் கட்டத்தில் இவ்வெண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பலவித உள் மற்றும் வெளிக்காரணிகளே ஆசிரியர்கள் எரிந்து போதல் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பணியில் தீவிர அர்ப்பணிப்பு, திணிக்கப்பட்ட உயர் சுயதர நிலைகள், இலட்சியவாதத்தின் உயர் நிலைகள், பரிபூரண வாதம், அதிகப்படியான எதிர்பார்ப்புகள், இல்லை என்று சொல்வதில் சிரமம், வேலைச்சுமை, போதிய பாராட்டும் அங்கீகாரமின்மை, அதீத கட்டுப்பாடு போன்றவை... இவற்றுள் ஒன்றோ, ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களோ ஒருவரை உருகுலைந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஓரிரு நாட்களில் இந்நோய் யாரையும் பாதிப்பதில்லை. மாறாக, மெதுவாக கொல்லும் நஞ்சிது! எப்படி இந்நோய் பாதிப்பைக் கண்டறிவது? எரிந்து போதலுக்கு ஆட்பட்டவர்களிடம் ஒருவித சோர்வு உணர்வு, வேலைக்குறித்த எதிர்மறை உணர்வு, குறைந்த உற்பத்தித்திறன், நாள்பட்ட எரிச்சல், தலை வலி, தூக்கக் கோளாறுகள், பதற்றம், இரைப்பை - குடல் கோளாறுகள், இதய படபடப்பு என பல்வேறு உபாதைகள் வெளிப்படும்.
தீர்வு தான் என்னென்ன?
எரிந்து போதலால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தாங்களாகவே அதிலிருந்து வெளிவருவதற்கு சில காரியங்களை கையாளலாம். போதிய ஓய்வு, மன அழுத்தத்தை கையாளும் மேலாண்மை, சுய கவனிப்பு, சுய ஏற்பு, ஆரோக்கியமான வாழ்வுமுறை, சக பணியாளர்களின் ஆதரவு, தேவைக்கேற்ப தொழில் முறை உதவிகளைத் தயக்கமின்றி நாடுவது, நேர மேலாண்மையும் திட்டமிடுதலும், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை குறைப்பது, வேலை வாழ்க்கை சமநிலை, தேவையான உளவியல் ஆலோசனைகள். இவற்றை சுயமாகவும் அல்லது குடும்ப நண்பர்கள் உதவியோடும் மேற்கொள்ளலாம்.
குடும்ப அங்கத்தினரின் அக்கறையான அணுகுமுறை மிகமிக அவசியம். பணியிட சுமைகளோடு வருபவர்கள், மீண்டும் வீட்டிற்கு வந்து சமையல் அல்லது ஏனைய வீட்டுப் பணிகளைச் செய்ய வேண்டிய சூழல், நம்
சமூகங்களில் தவிர்க்க இயலாததாய் உள்ளது. இதில் அதிகப் பாதிப்பு பெண்களுக்கே! பணிச்சுமைகளை குறைக்கும் விதமாய் கணவர், மனைவி, பிள்ளைகள் மற்றும் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து செய்வது ஆரோக்கியம் தரும்.
‘தி பில்கிரிமேஜ்’ என்கிற நாவலை எழுதிய ரசவாதி (The Alchemist) பாலோகோய்லோ அவர்கள் வாழ்வது எப்படி? என்று குறிப்பிடுகையில், “உங்கள் வேகத்தைக் குறையுங்கள். வழக்கமான வேகத்தை விட எதையும் பாதி வேகத்தில் செயல்பட முயற்சி செய்யுங்கள்...” என்கிறார். இது என்ன பெரிய விசயமா? என்று நீங்கள் கேட்கலாம். எப்போதும் பிஸியாக, வேகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வேகத்தைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தேவையற்ற வேகத்தைக் குறைக்கையில் நமது வாழ்க்கையில் வழக்கமாக புலப்படாத ஏராளமான நல்ல விசயங்கள் புலப்படும். மனைவி தயாரித்த இரசத்தின் வாசனை துவங்கி, வீதியில் பூத்திருக்கும் மல்லிகையின் நறுமணம் வரை வாழ்வில் வசந்தம் பாடும். எரிச்சல் படுவது, குறை படுவது, கோபப்படுவது, புறணி பாடுவது, உயர் இரத்த அழுத்தத்தை வருவிப்பது போன்றவைகள் தானாகவே மறைந்து போய்விடும்.
எரிந்து போதல் நிலையிலிருந்து ஆசிரியர் சமூகத்தைக் காப்பாற்ற அரசுக்கு அதிக கடமையுண்டு. அதிக நேர வேலை என்பதைவிட, குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தித்திறன் என்கிற விதத்தில் செயல்பட அரசு திட்டம் தீட்ட வேண்டும். கற்பித்தல் ஒருபோதும் மன அழுத்தத்திற்குரிய தொழிலாக மாறிப்போய்விடக் கூடாது. ஏனென்றால், இதனால் பாதிப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; மாறாக, வருங்கால சமூகத்திற்கே. கற்பித்தல் எதிர்கால சமூகம் சார்ந்த காரியம். கொரோனா பெருந்தொற்று மாணவர் - ஆசிரியர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகளை இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் தற்பொழுது மேற்கொள்கின்றன. வரும் நாட்களில் கற்றல் - கற்பித்தலை மேம்படுத்தவே இம்முயற்சி. இதுபோன்ற கள ஆய்வுகள் எதுவும் இங்கு நடை பெறவில்லை. இதில் அரசு அக்கறை காட்ட வேண்டும்.
எந்த பெருந்தொற்று வந்தாலும் மாணவர்களின் கல்வி தடைபடா வண்ணம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளை மேலைநாடுகள் அறிமுகப்படுத்துகின்றன. அத்தகு நிலைகள் இங்கும் முழுமையாய் வர வேண்டும். ஆனால், ஒருபோதும் இழந்த ஒன்றை ஈடுசெய்கிறோம் என்கிற பெயரில் மனிதர்களை இயந்திரங்களாக செயல்பட மேற்கத்திய நாடுகள் அனுமதிப்பதில்லை. வழக்கமான எல்லா விடுமுறைகளும் இங்கு விடுமுறைகளாகத்தான் தொடர்கின்றன. உடற்கல்வி நேரத்தைக் கடன் வாங்கி பாடம் பயிற்றுவித்த காரணத்தால் என்னவோ, இங்கு மட்டும் மாணவர்களின் இழந்து போன நாட்களை ஈடுசெய்ய ஆசிரியர்கள் புலியிடமிருந்து தப்பிக்கும் மான்போல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். இது சரியான அணுகுமுறையல்ல; சிறந்த தீர்வுமல்ல; எப்போதும் கற்பித்தல் சிறக்க உற்பத்தி திறன்கள் அதிகரிக்க போதிய விடுமுறைகள் அவசியம்.
Comment