No icon

குறும்பனை சி. பெர்லின்

மீனவர் குரல் - 10

மீனவர் குரல் - 10

உரிமம் கேட்டு உரிமைக்குரல்!

குறும்பனை சி. பெர்லின்

மத்திய கப்பல்துறை பயிற்சி “கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு விசைப்படகுகளை இயக்கப் பயிற்சி அளித்து உரிமம் வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாததால் மத்திய அரசின் கப்பல்துறையின் பயிற்சி நிறுவனமான சிப்நெட் (CIFNET)  மூலம்மீனவர்களுக்குப் பயிற்சி அளித்து மத்திய அரசின் கப்பல்துறையே சான்றித ழும், ஓட்டுநர் உரிமமும் வழங்கச் செய்யும் விடயம் அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் பதில் தந்துவிட்டு அந்தக் கோப்புகளை கிட்டதட்ட ஓராண்டாகக் கிடப்பில் போட்டு விட்டது.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் தொழில் செய்யும் மீனவர்களிடம் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் சுங்கத்துறை, நேவி, கோஸ்ட் கார்டு போன்றவற்றின் அதிகாரிகள் விசைப்படகு களைப் பிடிப்பதும், ஓட்டுநர் உரிமம் கேட்டு தொந்தரவு செய்வதும், அபராதம் விதிப்பதும், பிடித்துப் பதப் படுத்தப்பட்ட மீன்களைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இன்னும் பொறுக்க முடியாது என்ற நிலையில் விசைப்படகு மீனவர்கள் போராட்டக்களம் கண்டனர்.

நெய்தல் மக்கள் இயக்கம், கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு, ஃபாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழி லாளர் யூனியன் போன்றவை பல்வேறு வழிகளில் தமிழக அரசை யும், மீன்வளத்துறையையும், அத்துறையின்  அதிகாரிகளை யும், அமைச்சரையும், சிப் நெட், பயிற்சி நிறுவனத்தையும் நேரடி யாக சென்னை சென்று சந்தித்து இப்பிரச்சினைபற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

ஏன் வேண்டாத வேலை?

கடலில் விசைப்படகு களில் மீன்பிடிக்கச்சொல்லும் மீனவர்கள் ஓட்டுநர் உரிமம் கேட்டு போராட்டமும் நிர்பந்தமும் செய்ய ... விசைப்படகு யூனியனின் ஒருசில நிர்வாகி களும், சில கடற்கரை அரசியல் தலைவர்களும் விசைப்படகு ஓட்டுநர் உரிமம் கேட்பது வேண்டாத வேலை என்று விமர்சனம் செய்தனர். அதற்கு நியாயமான காரணமும் இருந்தது.

“ எங்குமே விசைப்படகு களுக்கு ஓட்டுநர் உரிமம் இதுவரை வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது இல்லாத ஒன்றை நாம் என் கேட்க வேண்டும். அப்படிக்கேட்டால் லைசென்ஸ் கொடுக்க 10 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை வைப் பார்கள். 10 ஆம் வகுப்பு படித்தவர்தான் விசைப்படகு ஓட்ட முடியுமென்றால் இப்போது பாரம் பரிய அறிவில் விசைப்படகு ஓட்டுபவர்கள் எல்லாரும் வேலை இழப்பார்கள். அல்லது கூலி வேலைக்குத்தான் செல்லமுடியும். அப்படி ஒரு நிலைமையை நாமே ஏன் கேட்டு வாங்கவேண்டும்.

படித்த இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுபோல் மீனவர்களுக் கும் மாதக்கணக்கில் பயிற்சி கொடுத்தால் அவர்கள் பயிற்சி மையங்களில் தங்கி யிருந்து படிக்க முடியுமா? இந்தப் பயிற்சி களுக்கு வயது வரம்பு வைத்திருப்பார் கள். அனுபவசாலிகளுக்கு இந்தப் பயிற்சியும் கிடைக்காது; லைசென்சும் கிடைக் காது. அதனால் இருக்கிறதுபோல் இருக்கட்டும். அபராதம் விதித்தால் கட்டிவிட்டுப்போகிறோம். அல்லது அரசு மீனவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் டிரைவிங் லைசென்ஸ் இல்லாவிட்டாலும் கடலில் மீன்பிடித் தொழில் செய்யலாமென்று ஒரு சட்டம் கொண்டுவரச் சொல்லுங்கள் போதும்” என்றார்கள், அவர்கள் பக்க மிருந்துபார்த்தால் அதுதான் கள யதார்த்தம். ஆனால்...

மீனவர்களின் உரிமை

“சாலைகளில், தரையில், ஆகாயத்தில் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் அவசியம் என்று கட்டாயச்சட்டம் இருப்பதுபோல் கடலில் வாகனங்களை இயக்கவும் உரிமம் தேவை என்பதுதான் சட்டம். ஒரு கட்டம்வரை இயக்கப்படும் கப்பல்கள்தான் இயந்திரங்களைப் பொருந்திய வாகனம் என்றிருந்தன. அதற்குப் பயிற்சி அளிக்கப் பட்ட மாலுமிகள் பயன்படுத்தப்பட்டார்கள். பாரம் பரிய மீனவர்கள் கட்டுமரங்களைத் தொளவை வைத்தும், பாய்மரக் கலங்களை வைத்தும் பாரம் பரிய அனுபவ அறிவின் மூலம் தொழில் செய்ததால் இயந்திரங்களை இயக்குவதற்கான உரிமம் தேவைப்படவில்லை. ஆனால் இப்போது மீன் பிடித்தொழில் இயந்திரமயமாகிவிட்டது வெளிப் பொருத்தும் இயந்திரம் கொண்ட கண்ணாடி இழைப்படகுகள், சிறிய வகை வளிவலை ஒரு கோடி, ஒன்றரை கோடி மதிப்பிலான போட்டுகளுக்கு,  மீனவர் கள் மாறி விட்டார்கள். அதனால் இயந்திரங்களை இயக்குவதற்கான உரிமம் கட்டாயம் என்பதே தற்போதையச் சட்டம். ஆனால்...

மத்திய அரசும், மாநில அரசுகளும் விசைப்

படகு ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க

வேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்க வில்லை. பாரம்பரிய மீனவர்களை ஒரு மக்கள்

சமூகமாக கணக்கில் எடுக்காததால்தான் இது போன்ற உரிமங்கள் வழங்கவில்லை.

இருப்பதுபோல் இருக்கட்டும் என்றால் மீனவர்களைச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்பார்கள். பல வெளிநாடுகளிலும், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நம் அண்டை நாடுகளிலும் எல்லை மீறுவதாகச் சொல்லப்படும் சம்பவங்களில் விசைப்படகுகளைப் பிடிக்கும் போது படகையும், ஓட்டுநரையும் மட்டும் பிடித்து வழக்குப்போடுவார்கள் என்பது நாம் காணும் சம்பவங்கள். எனவே, இன்று இல்லையென்றாலும் நாளை சட்டத்தின்படிதான் எல்லாம் நடக்கும். அதனால் ஓட்டுநர் உரிமம்பெறுவது நமது உரிமை என்பதை அரசுக்கு உணர்த்தவேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதியில் விலக்குபெற்று வயது வரம்பில் விலக்குபெற்று பயிற்சிக் காலத்தை ஐந்து நாள்களாக்கி மத்திய அரசு சான்றிதழும் ஓட்டுநர் உரிமமும் வழங்கவேண்டும். என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் பெர்லின் நீண்ட விளக்கம் அளித்ததும் அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அன்றிலிருந்து விசைப்படகு ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம், வழங்கவேண்டும் என்ற கட்டாயம் மத்திய - மாநில அரசுகளுக்கு ஏற்பட்டது.  

மீன்வளத்துறை  செயலாளர், அமைச்சர்,  மீன்வளத்துறை  இயக்குநர்  திருமதி.  பீலா ராஜேஷ் இ.ஆ.ப. இராயபுரத்தில் இருக்கும் சிப்நெட் (Central Institute of Fisheries Nautical and Engineering Technology - CIFNET)  பயிற்சி மைய அதிகாரிகளை நேரில் சென்று பலமுறை வலியுறுத்தினோம். மீனவர்களின் கோப்புகளுக்குப் பின்னாலே பயணித்து அதை நிறைவேற்றும் முயற்சியில் இரண்டு அதிகாரிகளின் பங்கு மிகமுக்கியமானது. சென்னையில் மீன் வளத்துறை இயக்குநர் அலுவலகத்தின் துணை இயக்குநரான திரு. ஆன்றனி சேவியர், சென்னை மீன் வளர்ச்சிக் கழகத்தின் மேலாளராக இருந்த திரு. ஜீடு ஆம்ஸ்ட்ராங்க் ஆகிய இருவரும்தான்.

ஆறுமாதம் பயிற்றுவிக்கப்படும் பயிற்சியை ஐந்து நாள்களாகக் குறைத்து பயிற்சித் திட்டங்கள் தயாரித்தது, ஏதாவது ஒரு மீனவர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அடிப்படை யில் பயிற்சி வழங்கத் தகுதி ஏற்படுத்தியது, வயது வரம்பில்லை என்று நிர்ணயம் செய்தது, சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் வடிவமைத்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் அந்த உரிமம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிப்நெட் கொச்சின் தலைமை அலுவலகத்திலிருந்து உரிமம் வழங்குவது என்று ஒவ்வொன்றை யும் தமிழக அரசின் பிரதிநிதிகளாக இருந்து மத்திய அரசின் கப்பல் துறையுடன் இணைந்து நடைமுறைப் படுத்துவதில் தங்கள் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டனர்.

(குறைகள் தொடரும்...)

Comment