ஆசிரியர் தினம் - செப்டம்பர் 05
- Author --
- Tuesday, 07 Sep, 2021
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 05
அருள்சகோ. யா. ஜான் ரிச்சர்டு சே.ச
அருள்கடல், சென்னை
யார் நல்லாசிரியர்?
2018 ஆம் ஆண்டு, ஜூன் 21 ஆம் நாள், திருவள்ளூர் மாவட்டத்தில், வெளியகரம் என்னும் ஊரில் அமைந்திருக்கும் அரசு உயர் நிலை பள்ளியில் நடந்த, மனதை வருடிய ஒரு நிகழ்வை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஏனென்றால், திரு. பகவான் என்ற ஆங்கில ஆசிரியரின் பள்ளி இடமாற்றத்தைக் கேள்விப்பட்டதும், மாணவர்கள், ஆசிரியரை பள்ளியைவிட்டு வெளியேறவிடாமல் கட்டிப் பிடித்துக்கொண்டு, “எங்கள் ஆசிரியரை நாங்கள் விடமாட்டோம், அவர் இங்கே தான் இருப்பார்” என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகமெங்கும் ஒரு மிகப் பெரிய அதிர்வலையை எழுப்பியது. செய்தியாளர் ஒருவர், மாணவர்களின் அளவுகடந்த அன்புக்கும் பாசத்திற்கு காரணம் என்ன? என்று ஆசிரியரைக் கேட்டபோது, “பாடங்களை அவர்களுக்கு ஏற்ற வகையில், மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் கற்றுத் தருவேன். ஆசிரியர் பணியையும் கடந்து அவர்களுடைய பின்னணியையும் வளர்ந்து வரும் சூழலையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஒரு நல்ல பெற்றோராக, நண்பராக, சகோதரராக இருப்பேன்” என்று கூறினார். ஓர் ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திரு. பகவான் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆசிரியர் தினம்: கேள்விகளும் தெளிவுகளும்
நாம், ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்நாள் தங்களுக்கு உணர்த்தும் செய்தி என்ன? மாணவர்கள் தங்களைப் பெருமைப்படுத்தும் தினம் என்ற எண்ணம் மட்டும்தானா? மாணவர்களை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றவும் முடிவெடுக்கும் தினமா? ஆசிரிய- மாணவ உறவுகளை வலுப்படுத்த இன்னும் பல முன்னெடுப்புக்களுக்கான உறுதியெடுக்கும் தினமா? என்ற கேள்விகளை ஒவ்வொரு ஆசிரியரும் தங்களைக் கேட்டு பதில் தேடும் தினம் இது.
ஆசிரியப் பணியின் மேன்மை
ஆசிரியப் பணி என்பது அன்பு, அறம், அர்ப்பணம், அக்கறை மற்றும் உன்னதம் நிறைந்த ஓர் உயர்வானப் பணியாகும். இந்தப் பணியானது சாதாரண மனிதரையும்கூட சரித்திரம் படைக்க வைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. மேலும், திக்கும் திசையும் தெரியாமல் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் நபர்களை எத்திக்கும் எத்திசைக்கும் புகழ்பெற வைக்கும் ஆற்றலை ஆசிரியர்களில் பலர் தன்னகத்தே கொண்டவர்களாக உள்ளனர். இவர்களின் பணி வாழ்வின்மூலம் புதிய சமுதாயம் படைக்க மாணவர்களைத் தயார் செய்கின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சட்டம், பொருளாதாரம், வேளாண்மை, மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படையாக அமைவது ஆசிரியப் பணியே!
ஆசிரியர்களின் முதன்மைப் பணிகள்
ஆசிரியர் = ஆசு + இரியர் என்ற வார்த்தைகளின் இணைவே ஆசிரியர் என்ற வார்த்தையாகும். ‘ஆசு’ என்றால் குற்றம் எனவும் ‘இரி’ என்றால் களைதல் மற்றும் போக்குதல் எனவும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு, ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைகிறவர் என்ற புரிதலே சரியானதொன்றாகும். ஓர் ஆசிரியர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை கடமை, கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நம்பிக்கை ஆகிய நற்பண்புகளில் வளர்த்து, அவர்களிடமிருக்கும் தீய எண்ணங்களைக் களைந்து, அவர்களுடைய மனங்களைப் பக்குவப்படுத்தி, அவர்களைச் சமுதாயத்தில் நல்ல குடிமக்களாக வாழ வைக்க, அர்ப்பண உணர்வுடன் செயல்பட அழைக்கப்படுகின்றார். மாதா, பிதா, குரு தெய்வம் என்ற சமஸ்கிருதப் பழமொழியில் பெற்றோருக்கு அடுத்தப்படியாக குரு இருக்கிறார். தன்னிடம் வரும் ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டாவது பெற்றோராக வாழ நிர்பந்திக்கப்படுகிறார். மாவீரன் அலெக்ஸாண்டர், “நான் இந்த உலகிற்கு வந்ததற்குக் காரணம் என் பெற்றோர்கள். ஆனால், இந்த உலகம் என்னிடம் வந்ததற்கு காரணம் என்னுடைய ஆசிரியர் அரிஸ்டாட்டில்” என்று சொல்லி அவருடைய வாழ்க்கையில் ஆசிரியரின் பங்கையும் மகத்துவத்தையும் எடுத்தியம்புகிறார். மாணவர்கள் தங்கள் மாணவப் பருவத்தில் பெரும்பாலான நேரத்தைப் பள்ளியில் மற்றும் கல்லூரியில் தான் செலவழிக்கிறார்கள். இதைத்தான் முன்னாள் காவல் துறை மேலதிகாரி திரு. கலியமூர்த்தி, “பள்ளியின் வகுப்பறை தாயினுடைய கருவறைப் போன்றது. குழந்தைகள் தாயின் கருவறையில் தான் பிறக்கிறார்கள். ஆனால், வகுப்பறையில் தான் வளர்கிறார்கள்” என்று கூறுகிறார்.
ஆசிரியப் பணி வாழ்வும் சவால்களும்
ஒவ்வொரு ஆசிரியரும் தங்களோடு பயணிக்கும் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதோடு வேலை முடிந்துவிட்டது என்றில்லாமல், அவர்களுடைய குடும்பத்தைச் சந்தித்து, அவர்களின் குடும்பப் பின்னணியையும், வளர்ந்து வரும் சூழலையும் புரிந்து கொண்டு அவர்களை மதித்து அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்களுடைய கற்பித்தலில் ஆர்வம் ஏற்படும் வகையில் கற்பிக்க முயல வேண்டும். அவர்களிடம் குடிகொண்டிருக்கும் திறமைகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சீர்படுத்த வேண்டும். அவர்களுடைய திறமைகளில் மென்மேலும் வளர ஊக்கம் கொடுக்க வேண்டும். படிப்பைத் தவிர, மாணவப் பருவத்தை மகிழ்ச்சியுடன் வாழ அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்காக சில சவால்களைப் பொறுமையோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்பதை ஆசிரியர்கள் உவகையோடு உணர வேண்டும். ஏனென்றால், ஆசிரியப் பணி என்பது மாணவர்களை உருவாக்கும் பணி மட்டும் அல்ல; மாறாக ஒரு புதிய உலகத்தைக் கட்டமைக்கும் பணி ஆகும்.
களையப்பட வேண்டிய சில அசிங்கங்கள்
ஆசிரியப் பணியை அர்ப்பண உணர்வோடு பலர் செய்தாலும், சிலர் அதை வியாபார நோக்கோடும், சுய இலாபத்தோடும் அணுகுவது வருத்தம் தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பள்ளியில் பாடங்களைச் சரியாக கற்பிக்காமல், வருமானம் ஈட்டும் நோக்குடன், தனியாக டியூசன் வைத்து பாடங்களைக் கற்பிப்பது, டியூசனுக்கு வராத மாணவர்களைப் பள்ளியில் மட்டம் தட்டி தரக்குறைவாகப் பேசுவது, அவர்களுடைய செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைப்பது, தன்னிடம் டியூசன் வராமல் மற்றொரு ஆசிரியரிடம் சென்றால் அவர்களைப் பழிவாங்குவது. மாணவிகளிடம் தவறான எண்ணத்தோடு அணுகுவது மற்றும் பயமுறுத்துவதுபோன்ற அநாகரீகமானச் செயல்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் தினந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த பிரச்சனைகளைக் களைய, வேரறுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
தீர்க்கப்பட வேண்டிய முரண்பாடுகள்
எப்படியாவது அல்லது பணம் கொடுத்தாவது அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ வேலை வாங்கிவிட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், சிலர் வேலை கிடைத்தவுடன் பாடம் கற்பிப்பதில் ஆர்வம் காட்டாமல், மாத இறுதியில் கிடைக்கும் பணத்தை எண்ணுவதில் மட்டுமே விருப்பம் கொள்வது மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, தனியார் பள்ளியில் பணிபுரியும் அர்ப்பணமிக்க ஆசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவாக இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒற்றை நோக்கமான, மாணவர்களை உருவாக்கும் பணியைச் செய்யும் தனியார் மற்றும் அரசு சார் ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் ஏன் இந்த பாகுபாடு? பொருளாதாரச் சமத்துவத்தை நாம் எப்படி நிலைநாட்ட போகிறோம்?
தாழ்ச்சியோடு கற்றுக்கொள்வோம்
“ஒவ்வொரு ஆசிரியரும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறபோது, தன் பாட அறிவைப் புதுப்பிக்கின்றபோது தான், அவர் சரியான தரமான கல்வியைக் கொடுக்க முடியும்” என்று தாகூர் கூறுகிறார். மாணவர்கள் தங்களுடைய அறிவை வளர்ப்பதற்காகப் புதுப்பிப்பதற்காகப் பலக் கேள்விகளைக் கேட்கிறபோது எத்தனை பேர் கேள்விகளுக்கான சரியான பதில்களைத் தருகிறார்கள்? பதில் தெரியாதபோது, ‘தெரியவில்லை பிறகு சொல்கிறேன்’ என்ற தாழ்ச்சி அவர்களிடம் இருக்கிறதா? அல்லது மாணவர்களை மட்டம் தட்டி, அளவுக்கு மீறி பேசக்கூடாது என்று வாயடைக்கிறார்களா? ஒவ்வொரு ஆசிரியரும் இத்தகைய கேள்விகளுக்கு பதில் தேடும் நேரம் இது.
புரிந்து செயல்படுவோம்
குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர் பெற்றோர்களையும்விட பெரும் மதிப்புக்கு உரியவர்கள் ஆவர். பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்களோ நல்வாழ்வு வாழும் கலையைக் கற்றுத் தருகிறார்கள் என்று மெய்யியல் அறிஞர் ஃபிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டிலும், தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியராலும் உருப்பட வேண்டியிருக்கிறது என்று தந்தை பெரியாரும், மாணவர்களுக்குச் சிறந்த பாடப் புத்தகம் அவருடைய ஆசிரியரே என்று மகாத்மா காந்தியடிகளும் சொல்வது, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களைப் பற்றி பெருமைப் பாராட்டுவது ஒருபுறம் இருந்தாலும், தற்கால ஆசிரியர்களை, தொடக்க கால ஆசிரியர்களைப் போல வாழ மற்றும் உழைக்க விடுக்கும் ஓர் அழைப்பாகவே ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அர்த்தப்படுத்துவோம்
ஒவ்வொரு ஆசிரியரும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களைத் தன் பிள்ளைப்போல் பாவித்து, அவர்களின் வளர்ச்சிக்காக முழுமையான அர்ப்பண உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுகிறபோது, ஒரு புதிய மற்றும் வளமான சமுதாயம் சாத்தியமே. அவ்வாறு உழைக்கும்போது உள்ளத்தில் ஏற்படுகின்ற உள்ளார்ந்த உணர்வுக்கும் மகிழ்ச்சிக்கும், எத்தனை நல்லாசிரியர் விருது வாங்கினாலும் ஈடாகாது. ஆசிரியர்களே ஆசிரியப் பணியை அர்த்தப்படுத்துங்கள், அதிகப்படுத்துங்கள், ஆழப்படுத்துங்கள். புத்துணர்வோடு புதிய உலகத்தைக் கட்டமைக்கப் புறப்படுங்கள்.
கல்வி நிறுவனங்களில் மிகுந்த அர்ப்பணிப்போடும் பொறுப்புணர்வோடும் தங்களின் சமூகக் கடமையை உணர்ந்து பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!
Comment