No icon

உலக முதியோர் தினம்

அக்டோபர் 01 உலக முதியோர் தினம்

தொடக்கமாக

அன்று மாலை நான் என் நண்பர்களோடு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். ஏழு வயது நிரம்பத்தக்க ஒரு குட்டி சிறுவன் அவன் தாத்தாவோடு எங்களுக்கு எதிர் திசையில் நடந்து வந்துகொண்டிருந்தான். அந்த தம்பி, ‘தாத்தா கைய புடிச்சிக்கிட்டு வர்ரது க்யூட்டா இருக்குல’ என்று என் நண்பர்கள் சொல்ல ‘வாருங்கள் அவர்களிடம் பேசுவோம்’ என்று நான் சொன்னேன். நாங்கள் அவர்களிடம் சென்றோம். ‘ஹாய் தம்பி’ என்று நாங்கள் எல்லாரும் சொல்ல, ‘அண்ணன்களுக்கு ஹாய் சொல்லு’ என்று அந்த தம்பியின் தாத்தா அவனிடம் சொன்னார். அவனும் எங்களுக்கு ஹாய் சொன்னான். அப்படியே பேசிக்கொண்டிருக்கையில், ‘இங்க யாருக்கு யார் துணை?’ என்று நான் கேட்க, ‘தாத்தாவுக்கு நான் தான் துணை’ என்று சொன்னான் அந்த சிறுவன். என்னுடைய நண்பர்கள் நமட்டுச் சிரிப்புச் சிரிக்க, ‘நீ சின்ன பையன்டா தம்பி! நீ எப்படி துணையாய் இருக்க முடியும்?’ என்று கேட்க, ‘அம்மாதான் சொன்னாங்க தாத்தாவுக்கு நான்தான் துணையா இருக்கனும்னு. சின்ன வயசுல துணையா இருந்தாதான் பெரிய வயசுலயும் தாத்தாவுக்குத் துணையாய் இருக்க முடியும்னு சொன்னாங்க’ என்று பதில் கூறினான். மென்மையான புன்முறுவலோடு தன் பேரனின் தலையைக் கோதினார் அந்த தாத்தா. அந்தச் சிறுவனின் பதில் என்னில் பல கேள்விகளை எழுப்பியது.

கேள்விகளும் தெளிவுகளும்

நம்மில் எத்தனை பேர் நம் வீட்டில் மற்றும் நாம் பணிபுரியும் இடங்களில் இருக்கும் முதியவர்களுக்குத் துணையாய், உதவியாய், பக்கபலமாய் இருக்கிறோம்? நம்முடைய வாழ்க்கையைப் பார்த்து பார்த்து செதுக்கிய சிற்பிகள் இன்று கேட்பாரற்றுக் கிடப்பதேன்? நம்முடைய உடனிருப்பையும் அன்பான வார்த்தைகளையும் மட்டுமே எதிர்ப்பார்க்கக்கூடிய நம் தாத்தாக்கள் பாட்டிகள் தனிமையில் தவிக்கவிடப்படுவதேன்? கொடுத்து கொடுத்து பழகிய கைகள் இறுதி நேரங்களில் ஒருவாய் சோற்றுக்கு கையேந்துவதேன்? மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் நமக்கு அரணாக இருந்து நம்மைப் பாதுகாத்தவர்கள் இன்று அடைக்கலத்திற்காக முதியோர் இல்லம் செல்வது அல்லது சேர்க்கப்படுவது ஏன்? இத்தகைய கேள்விகளுக்கு பதில்களைத் தேடி நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க உலக முதியோர் தினம் (அக்டோபர் 01) நம்மை அழைக்கிறது.

முதியோர்களின் மேன்மை

முதியோர்கள் தங்களுடைய வயதில் மட்டும் முதிர்ச்சியைப் பெற்றவர்கள் அல்ல; மாறாக தங்களுடைய சிந்தனைகளில, செயல்களில் மற்றும் அனுபவங்களில் முதிர்ச்சித் தன்மையையும் ஞானத்தையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வருகின்ற பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் மற்றும் நல்ல பண்புகளையும் நமக்கு கற்பித்தவர்கள் முதியவர்கள். நம் குடும்பத்தைக் கட்டி எழுப்புவதற்கு இரவு பகல் பாராது கடுமையாய் உழைத்தவர்கள். குடும்பத்தில் இருக்கும் தங்களது பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தங்களையே முழுமையாகத் தியாகம் செய்தவர்கள். நாம் ஒரு செயலை முன்னெடுத்து நடத்துகிறபோது சிறந்த அறிவுரைகளையும் வழிநடத்துதல்களையும் கொடுத்து அதைச் சிறப்பாகச் செய்ய நம்மைத் தூண்டுபவர்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மற்றொரு பெற்றோர்கள். குழந்தைகள் தவறு செய்கிறபோது கனிவு கலந்த கண்டிப்பைக் கொடுத்து நல்ல மற்றும் ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்ப்பவர்கள். அறநெறிக் கதைகளையும் நீதிநெறிக் கதைகளையும் சொல்லி, அவர்களை மனப்பக்குவத்திலும் மனத்திடத்திலும் வளர்ப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் என்றால் அது மிகையாகாது. மேலும் சமுதாய வளர்ச்சிக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல் பிறரையும் அவ்வாறு நடக்க ஊக்கம் கொடுப்பவர்கள். இத்தகைய உயரியப் பணிகளைத் தங்களுடைய வாழ்வில் தங்களால் முடிந்த மட்டும் சீராகவும் சிறப்பாகவும் செய்த முதியோர்களின் நிலை இன்று எப்படி இருக்கிறது?

முதியோர்களின் தற்போதைய நிலை

சிலர் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்களை நன்றாக கவனித்துக் கொண்டாலும், பலர் அவர்களை மதிக்காமல் மரியாதைக் கொடுக்காமல் அவர்களுடைய அறிவுரைகளையும் அனுபவங்களையும் உதாசீனப் படுத்துவது இயல்பாகிவிட்டது. பல சமயங்களில் வீட்டில் உள்ளோர் முதியவர்களுக்கு உதவுவதை ஒரு கடினமான செயலாகப் பார்ப்பதோடு ஒரு சுமையாகவே கருதும் சூழல் உருவாகியிருக்கிறது. ஒருவேளை அவர்களைச் சகித்துக்கொண்டு வாழ்ந்தாலும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் கடைக்குச் சென்று வாருங்கள், தண்ணீர் எடுத்து வாருங்கள், நியாயவிலைக் கடைக்குச் சென்று, பொருள்கள் வாங்கி வாருங்கள் என்று பல்வேறுப் பணிகளைச் செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்துவது மனிதத் தன்மையற்ற ஒரு செயலாகவே அதைப் பார்க்க தோன்றுகிறது. தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துபோன வீட்டுப் பெரியோர்களுக்கு மருத்துவ செலவு செய்வதை ஒரு வீண் செலவாகப் பார்ப்பது நன்றி கெட்டதனத்தின் உச்சமாகவே பார்க்க முடிகிறது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டிருக்கும் நாம், முதியோர்களால் எந்த பயனும் இல்லாதபோது தீய வார்த்தைகளால், செயல்களால் அவர்களை துன்புறுத்துவது, வீட்டை விட்டு துரத்துவது, சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதுபோல் அழைத்துச் சென்று அவர்களை அங்கே தனியே விட்டுவிடுவது, தங்களுடைய அடையாளத்தை மறைத்து, அவர்களை அனாதை ஆசிரமங்களில் சேர்த்துவிடுவது போன்ற செயல்கள் மனிதக் கொடூரத்தின் உச்சமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் முதியோர் இல்லம் ஒரு வரம் என்றே நினைக்கவும் பிள்ளை மனம் கல்லாய் போனதோ என்று சிந்திக்கவும் தோன்றுகிறது.

இளையோர் செய்ய வேண்டியவை

வளரும் குழந்தையை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொள்ளுகிறோமோ அதேபோல் நம்மை வளர்த்த இந்த முதிர்குழந்தைகளையும் பேணிக்காப்பது நமது தலையாயக் கடமை ஆகும். பெற்ற அன்புக் கடனை திருப்பி செலுத்த ஓர் அரிய வாய்ப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ‘மூத்தோர் சொல்லும் முழுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும், பிறகு இனிக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, அவர்களுடைய அறிவுரைகளை வெறும் அறிவுரையாகப் பார்க்காமல் அது அவர்களுடைய வாழ்க்கை நடைமுறை என்பதை ஆழமாக உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். நம்முடைய வீட்டில் உள்ள முதியோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அறுசுவை உணவையோ, ஆடை அணிகலன்களையோ அல்ல; மாறாக கனிவான மற்றும் ஆறுதல் தரக்கூடிய வார்த்தைகளை மட்டுமே. நாம் குழந்தையாக இருந்தபோது அவர்களுடைய ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் நம்முடைய வளர்ச்சியை மெருகேற்றியது போல அவர்களுடைய வாழ்க்கையை மகிழ்வோடும் நிறைவோடும் வாழ நாம் உற்சாகமூட்டும் வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும்.வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர்களையும் இணைத்து அவர்களின் இருப்பை உணர்த்த வேண்டும். அவர்களைத் தனிமையில் விடாமல் அவர்களோடு முடிந்த அளவு தங்களுடைய நேரத்தை செலவிட முன்வர வேண்டும். முடியாத சூழலில் தங்களின் குழந்தைகளோடு நேரம் செலவிட அவர்களை அனுமதிக்க வேண்டும். முதியோர்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் மேற்கூறியவை அனைத்தும் சாத்தியமே.

முதியோர்கள் செய்ய வேண்டியவை

விரைவாகச் செல்லக்கூடிய ஓர் உலகத்திலே பயணித்துக் கொண்டிருக்கிற முதியோர்கள் வீட்டிலும் சமுதாயத்திலும் உள்ளவர்களைப் புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தில் வளர வேண்டும். அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச்செய்ய முன்வர வேண்டும். “வயது தங்களுடைய முதிர்ச்சியைக் காட்டினாலும் உள்ளத்தில் நாங்கள் இளமையாக இருக்கிறோம்” என்ற லியிலா அகிடாவின் பொன்மொழியை வாழ்வாக்க முயல வேண்டும். அமெரிக்கா தொடங்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு வரை நாடுகளையும் மாநிலங்களையும் வழிநடத்தி வருகிறவர்களில் பெரும்பாலானோர் முதியர்வகளே. திருவிவிலியத்தின் முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியவர்களில் அதிகமானோர் முதியவர்களே. பவுலும் பர்னபாவும் தங்களது காலத்தில் இருந்த ஒவ்வொரு திருச்சபைக்கும் தலைவர்களாக நியமித்தது முதியவர்களையே என்று திருத்தூதர் பணிகளில் (14:23) வாசிக்கின்றோம். இன்று திருஅவையின் தலைவராக இருந்து கொண்டு நூற்று இருபது கோடி இறைமக்களையும் இறைப்பாதையில் வழிநடத்தி வரும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களும் 84 வயது  ஒரு முதியவரே என்பதை அறிந்தவர்களாய் முதியோர்கள் இக்கால இளையோர்களுக்குத் தொடர்ந்து நம்பிக்கையையும் வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் கொடுத்து அவர்களுடைய வாழ்வைச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.தங்களால் எதுவும் செய்ய இயலாத நேரங்களில் தங்கள் குடும்பத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் செபிக்க வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி, முந்தைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் உலகை நல்வழிப்படுத்துவதில் பெரும்பாலானோரின் நற்செயல்களைவிட முதியோர்களின் ஆழமான செபமே பயனுள்ளதாக இருக்கிறது என்று சொல்கிறார்.

இறுதியாக

பிசிராந்தையார் தன்னுடைய அறுபத்தைந்து கால நண்பரான கோப்பெருஞ்சோழனைப் பார்க்க வந்தபோது, அருகிலிருந்தவர்கள் அறுபத்தைந்து வயதுக்கு மேலாகியும் ஒரு முடி கூட நரைக்கவில்லையே என்று பிசிராந்தையாரைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர். அதற்கு பிசிராந்தையார், நல்ல மனைவியும்; என் சொல்லைத் தட்டாத மக்களும், முதியோர் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கின்ற மனிதர்களும் வாழுகின்ற இடத்திலிருந்து வருகிறேன். ஆகவே இன்னும் இளமையான தோற்றத்துடன் மகிழ்வோடும் மனநிறைவோடும் இருக்கிறேன் என்றாராம். இத்தகையச் சூழலை நாம் உருவாக்க முடியாவிட்டாலும் நமக்காக வாழ்நாள் முழுவதும் தங்களையே முழுமையாக அர்ப்பணித்த முதியோர்களுக்கு வாழப் போகின்ற சில காலங்களிலாவது அவர்களுக்குத் துணையாய் இருந்து அவர்களை மகிழ்வோடும் மனநிறைவோடும் வைத்திருக்க இந்நாளில் உறுதியெடுப்போம். நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்போம்.

Comment