No icon

அருள்பணி. s. பூபதி லூர்துசாமி ​​​​​​​செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு

விடுதலை அளிக்கும் தலித் விடுதலை ஞாயிறு

தலித் விடுதலை ஞாயிறு ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தலித் கிறித்தவர்களுக்கு விடுதலை முழுமையாக கிடைக்கவில்லை. பட்டியலினத்தார் உரிமைகளை பெறுவதற்கும் திருஅவையில் சம உரிமை பெறுவதற்கும் போராட்டங்கள் தொடர்கின்றன. இயேசுவின் பாடுகளோடு இணைந்து விடுதலைக்காக போராடும் மக்களுக்கு அவர் உயிர்த்தது போல் உயிர்ப்பும் முழுவிடுதலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலித் கிறித்தவர் விடுதலைப் பயணம் தொடர்கிறது.

தலித் ஒடுக்குமுறை

இந்திய சமூகம் சாதிய அமைப்பின் மீது கட்டப்பட்ட சமூகம் ஆகும். இச்சாதியம் சமயம் கடந்து எங்கும் பரவியுள்ளது. இந்திய வரலாற்றில் வர்ணத்திலிருந்து வளர்ந்த சாதியம் கி.மு. 1500 ஆம் ஆண்டிற்குப்பின் ஆரியர்களால் புகுத்தப்பட்டது. அவர்கள் தலைமையை தக்க வைக்க இந்தப் பொய்யான படிநிலையை சாதி அமைப்பு கடவுளின் படைப்பு என்று கூறப்பட்டது. வேத நூல்கள் அதை புனிதம் ஆக்கியது. சாதி அமைப்பை தர்மம் என்று ரிக் வேதம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது ( 90.12). இந்த நான்கு வர்ண (hயவரச ஏயசயே) அமைப்புக்குள்ளும் வராத மக்களை சாதிக்குப் புறம்பானவர்கள் என்று தள்ளி வைத்தனர். மனு தர்ம சட்டம் மண்ணின் மைந்தர்களை அடிமைகள் (தாசர்கள்) பஞ்சமர்கள் (ஐந்தாவது பிரிவினர்) சாதிக்கு புறம்பானவர்கள், சண்டாளர்கள் என்று பெயரிட்டது. மண்ணின் மைந்தர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர்.

விடுதலை அளிக்கும் அரசு உரிமைகள்

 ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவதற்கு உரிமைகள் அளிக்கப்பட்டது. இந்திய அமைப்புச் சட்டம் 15, 16 இவைகளில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்கு சிறப்பு உரிமைகளையும், ஒதுக்கீட்டையும் அரசு அளித்தது.

அரசியல் சாசன பிரிவு 15(4) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தார் மற்றும் பழங்குடியினர் இவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு சட்டங்களை அரசு உருவாக்குவது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் உரிமைகளைத் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தார் மற்றும் பழங்குடி மக்களுக்கு சமூக நீதி அடிப்படையில் அரசு அளிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அமைப்பு ஆகியவைகளில் ஒதுக்கீட்டு உரிமையும், சட்ட பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. பட்டியலினத்தாருக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் மதம் மாறிய பட்டியலின கிறத்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தலித் கிறித்தவர் நிலை

 இந்திய சமூகம் ஒரு மனிதனின் உயர்வு தாழ்வை பிறப்பிலேயே நிர்ணயிக்கக்கூடிய சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பினால் தலித்துகளாகிய மண்ணின் மைந்தர்கள் பல்வேறு அடக்கு முறைக்கும், ஒடுக்குதலுக்கும், தீண்டாமைக்கும் உட்படுத்தப்பட்டு மனித மாண்பை இழந்து தவிக்கின்றனர். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படை விழுமியங்களாக கொண்ட இந்திய திருஅவையும் சாதி பாவமான ஆதிப்பாவத்தின் கட்டுக்களில் சிக்கித் தவிக்கின்றது. இதன் விளைவாக தலித் கிறித்தவர்கள் அடக்குமுறைக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டு மனித உரிமை மறுக்கப்பட்டு தவிக்கின்றனர். தலித் கிறித்தவ மக்கள் சமூகம், திருஅவை, மற்றும் அரசியல் ஆகிய மூன்று நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். தலித் கிறித்தவ மக்கள் இன்றைய நிலை மற்றும் அவர்கள் அதிகாரப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை இந்திய ஆயர்கள் பேரவைதலித் கொள்கை வரைவுஎன்ற 2016 பிரகடனத்தில் தெளிவாக அளிக்கிறது.

தமிழக திருஅவையில் தலித் கிறித்தவர்களுக்கு எதிரான தீண்டாமை நூற்றுக்கும் மேற்பட்ட நிலைகளில் உள்ளன என்பதை அருள்பணி. முனைவர் அந்தோணிராஜ் சே.. அவர்களின் "தமிழ்நாட்டில் தலித் கிறித்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகள்" என்ற ஆய்வு (1990) உறுதிசெய்கிறது. தமிழக திருஅவையில் தலித் கிறித்தவர்கள் 65 விழுக்காடு இருந்தும் தலித் தலைமை 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது. தலித் கிறித்தவர்களின் இறைஅழைத்தல் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. இருபால் துறவற சபைகள், மறைமாவட்டங்கள் மற்ற அனைத்து தளங்களிலும் சாதிய தீண்டாமை மற்றும் பாகுபாடுகள் உள்ளன என்பதை கொள்கை வரைவு ஏற்றுக்கொள்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தலித் மக்களுக்கு அளிக்கின்ற பட்டியலினத்தார் உரிமைகளை மதம் மாறிய தலித் கிறித்தவர்களுக்கு 1950 குடியரசு தலைவர் ஆணை (பத்தி 3) மறுக்கிறது. சம உரிமை பெறுவதற்கு ஒட்டுமொத்த திருஅவையும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்காத காரணத்தினால் தலித் கிறித்தவர்களுக்கு சமநீதி மறுக்கப்பட்டு வருகின்றது. தலித் கிறித்தவர்களுக்கு பட்டியல் இனத்தார் உரிமை மறுக்கப்பட்டதால் சட்டப் பாதுகாப்பும் ஒதுக்கீட்டு உரிமையும் இன்றி ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து தலித் கிறித்தவர் விடுதலை இயக்கம் மற்றும் பல அமைப்புகள் தலித் சம உரிமைக்காக போராடி வருகின்றன. தமிழகம் மட்டுமல்ல; இந்திய தேசமெங்கும் ஒடுக்குமுறையை எதிர்த்து சம உரிமைகளுக்காக தலித் போராட்டம் நடந்து வருகிறது.

திருஅவையின் தலித் விடுதலை திட்டங்கள்

தமிழக தலித் கத்தோலிக்க ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தமிழக ஆயர் பேரவை 1990 ஆம் ஆண்டு 10 அம்ச செயல் திட்டத்தினை அறிக்கையிட்டது. அதனை தொடர்ந்து 2004 இல் தலித் கத்தோலிக்க கிறித்தவர்களை அதிகாரப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான எட்டு அம்சத் திட்டம் ஒன்றை அறிவித்தது. ஆனால், முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பட்டியலினக் கத்தோலிக்கரின் அதிகாரப்படுத்தலுக்கான கொள்கை வரைவை 2016 - டிசம்பர் 26 இல் பிரகடனம் செய்தது. இதில் 12 தலைப்புகளில் 56 செயல்திட்டங்களைக் கத்தோலிக்க திருஅவையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்தி தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையிடப்பட்டது. இதன் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பு நிறைந்த இறையாட்சி சமூகத்தை இம்மண்ணில் மலரச் செய்வதாகும். 5 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இத்திட்டங்கள் செயலாக்கம் பெறவில்லை. ஆகவே, கீழ்கண்ட தலித் கொள்கை வரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும்.

1. தீண்டாமை சாதி பாகுபாடுகளை ஒழித்து சமத்துவ சமுதாயம் உருவாக்குதல்.

2. அரசியல் தளத்தில் சம உரிமைப் பெற மக்கள் அமைப்புகளோடு இணைந்து செயல்படுதல்.

3. பங்கேற்பு அமைப்புகளில் ஆளுமையோடு பங்கேற்று தலைமையேற்க செய்தல்.

4. பொதுநிகழ்வுகளில் தலித் கலை, பண்பாட்டுக் கூறுகளை இடம் பெறச் செய்தல்.

5. உயர்கல்வி, தொழில் நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கல்வி அளிக்க வேண்டும்.

6. இளைஞர்கள் நுண்திறன்கள், ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு நல்ல தலைவர்களாக உருவாக செய்தல்.

7. அனைத்து நிலைகளிலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு பயிற்சி அளித்தல்.

8. பெண்கள் சம பங்கேற்பு, பங்களிப்பு மற்றும் தலைமையேற்க வழிசெய்தல்.

9. திருஅவை, சமூகம், அரசியல் தளங்களில் தலைமையேற்க தொடர் பயிற்சித் திட்டங்கள்.

10. ஒடுக்கப்பட்டோருக்கு உரிமையளிக்கும் வலுவுள்ள மக்கள் அமைப்புகளை அமைத்தல்

11. குறை தீர்ப்பு மையம்

12. கண்காணிப்புக் குழு

தலித் விடுதலைக்கு அரசு உரிமைகள்

1921 ஆம் ஆண்டிலிருந்து வகுப்புவாரி ஒதுக்கீட்டு ஆணையின் அடிப்படையில் இந்திய கிறித்தவர் என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கீட்டு உரிமைகளை பெற்று வந்தனர். 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்து பட்டியல் சாதியினர்க்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 ஜனாதிபதி ஆணை 3 வது பத்தி நீக்கப்பட்டு, சமூக நீதி தலித் கிறித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறு என்ற கருத்துடன் கடைபிடிக்கப்பட்டது. இப்போராட்டம் சமநீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவை தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாக பேரணி மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய மாநில தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இச்சமூக நீதி பிரச்சனை அரசியல் ஆக்கப்பட்டு தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

தலித் கிறித்தவர்களை பட்டியல் சாதியினர் ஒதுக்கீட்டிற்குள் பகிர்ந்து கொள்வதற்கு பட்டியலில் தலித் இயக்கங்கள் SC/ST M.P. forum, SC/ST, IAS / IPS Forum National Commission SC/ST  போன்ற அமைப்புகள் தடைபோடுகின்றன. அரசியல் கட்சிகளும் (SC) பட்டியல் இன ஓட்டு வங்கியை இழக்க விரும்பவில்லை. தலித் கிறித்தவர்களுக்கு SC ஒதுக்கீட்டுக்கு வெளியில் ஒதுக்கீடு அளிப்பதற்கு உச்சநீதிமன்ற ஒதுக்கீடு 50ரூ மேல் கூடாது என்ற தீர்ப்பு உள்ளது. தற்போது பா... அரசு எதிராக உள்ளது.

மத்திய அரசு மே 2007 முதல் 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி SC பட்டியலில் சேர்க்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2004 முதல் 17 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு (WP 180/2004) விசாரணைக்கு பா.. அரசு உடனே பதில் தரவேண்டும். நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும். தலித் விடுதலை ஞாயிறு செயல்பாடுகள் திருஅவையில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு சம உரிமைகளையும் அரசின் பட்டியலின உரிமைகளையும் தலித் கிறித்தவர் பெறுவதற்கு அனைத்து மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்

Comment