No icon

​​​​​​​முனைவர்  இ. தேவசகாயம்

நடு நிலை எம் வழி அன்று

நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், சுதந்திரம் பெற்ற இந்தியாவின் பண்பு (Idea) எதுவாக இருக்க வேண்டும் என்ற கருத்தில், சுதந்திரத்தின் முன்னோடிகள் தெளிவாக இருந்தார்கள். சுதந்திரம் பெற்ற மறுநாள் இத்தலைவர்கள் அமர்ந்து இப்பண்பை உருவாக்க முனையவில்லை. இந்திய தேசியம் முழுமையாகக் கருக்கொள்ளா நிலையிலேயே இந்திய தேசியம் ஓர் உள்ளடங்கிய தேசியமாக இருத்தல் வேண்டும் என்றும், மத அடிப்படையிலான பாகிஸ்தானுக்கு வழிவிட்ட நிலையிலும் எஞ்சிய பகுதியை அதாவது, இந்தியாவை ஒரு சமய சார்பற்ற நாடாகத்தான் ஏற்க வேண்டும் என்ற கருத்தில் தேசியத்தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெருவாரியான, பெரும்பான்மை மதம் சார்ந்த உயர் சாதி வகுப்பினராயிருந்தாலும், இக்கொள்கையில் உறுதியாக இருந்தனர். இவர்களின் உறுதிப்பாட்டில் எந்தவித சமரசமும் காட்டப்பெறவில்லை.

இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகி வருகின்ற வேளையிலே, இந்து வலதுசாரி தீவிரவாத இயக்கமும் உடன் வளர்ந்தது என்பதனை வரலாறறியும். சமய நல்லிணக்கத்தை விரும்பிய மகாத்மாவின் காலத்திலேயே தான் சாவர்க்கரும் வாழ்ந்தார். ஹெட்கேவரும் வாழ்ந்தார். இந்து வகுப்புவாத இயக்கம் ஒன்றிற்கு கருத்துரு கொடுத்த கோல்வால்க்கரும் வாழ்ந்தார். நெகிழ்ச்சியே இல்லாத வலுவான சாதிய கட்டமைப்பும், சமூகக் கட்டமைப்பும் மிக்க சமூகத்தில், மேற்கண்டோர் தந்த அழுத்தங்களையெல்லாம் பற்றிக் கவலைகொள்ளாது, காந்தியை கொலைசெய்கின்ற அளவுக்கு வெறியூட்டப்பட்ட ஓர் இயக்கம், வெளிப்படையாக வளர்ந்துவிட்ட நிலையிலும், இந்தியப் பண்புக்கு சேதம் வராமல் காத்து நின்றவர்கள் நம் தலைவர்கள்.

எவரேனும் மதத்தின் பெயரால் மற்ற ஒருவர் மீது கையைத் தூக்கி எதிர்ப்பைக் காட்டுவாரானால், நான் அரசில் பணியாற்றினாலும் சரி, அரசுக்கு வெளியே இருந்தாலும் சரி என் கடைசி உயிர் மூச்சுவரை அவரை எதிர்த்துப் போரிடுவேன் பண்டிதர் நேரு, மதவாதிகளுக்கு எதிராக எழுப்பிய குரல் இது. மதங்களின் நாடு இந்தியா! மதரீதியான (Religiosity) கொள்கையில் வேரூன்றிய  நாடு இந்தியா, இந்த இந்தியாவில் அமையும் அரசு மதச் சார்பற்ற அரசாகவே இருக்கும் என்று அறிவித்து, அதற்கான அரசியல் சாசனத்தையும் உருவாக்கித் தந்தனர்.

காந்தியும், நேருவும் கண்ட கனவுகள் தகர்ந்திடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலையாக, ஒரு மத அடிப்படைவாத அரசு உருவான பின்பும், மதத்தின் பெயரால் மக்களை அணிதிரட்டி, மதப் பெரும்பான்மைவாத அரசு உருவான பின்பும், மதவாதமும், சனநாயகமும் ஒன்றிற்கொன்று முரணானவை என்பதே உண்மையாக இருந்த பின்பும், முன்னோர் முயற்சியில் உருவான அரசியல் சாசனத்தின் மீது கைவைத்து உறுதிமொழி எடுப்பதும், அரசியல் சாசனத்தை வேதம் என்று புகழுரைப்பதும், எவர் வாயில் வரக்கூடாத வார்த்தைகள் என்று எண்ணுகிறோமோ, அங்கிருந்து சாத்தியமாகியச் சூழலுக்கு எது காரணம்?

சுதந்திரம் பெற்று 70 ஆண்டளவாகியும், அரசியல் சாசனக் கனவுகள் பொய்த்துப் போகுமோ என்று அச்சம் எழுந்துள்ள சூழலிலும், இன்னும் சாசன மதிப்புகள் பெருஞ்சேதத்தில் காட்டப்படாத நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றமைக்கு என்ன காரணம்?

இன்னும் வர்க்க முரண் பேசிய கட்சிகளின் போக்கில் சிறிய சரிவைச் சந்தித்தாலும், தேசியக் கட்சிகளின் சரிவு சகிக்க இயலா அளவுக்கு சென்றுவிட்டாலும், வகுப்புவாதக் கட்சிகளின் கருத்தியல் மக்கள் பொதுப்புத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நேரடி கருத்தியல் போன்று, வளர்ந்துவரும் தோற்றம் கொண்டிருந்தாலும், முற்றிலும் முரண்பட்ட கொள்கையுடைய இயக்கங்களே சனாதனாக்களுடன் சமரசம் செய்து கொள்ளும் அவலம் நடைபெறுவது சாத்தியமாகி விட்டாலும், இந்திய அரசியலமைப்பின் பொறிக்கப்பட்ட இந்தியப் பண்புகள் எவற்றிற்கும் எந்தப் பங்கமும் வராமல் காத்து நிற்கும் சக்தி எது?

காந்தியும் அவர்தம் சீடரும்நடுநிலைஎன்ற பெயரில், “சமரசம்என்ற பெயரில், “தன் வளர்ச்சிஎன்ற பெயரில் நிலை பிறழாது எடுத்த உறுதியான நிலைப்பாடு தேசியத் தலைவர்கள், மக்கள் நலன் கருதி எடுத்த நிலைபாட்டில் நடுவு நிலைமை என்ற சருக்கல் இல்லை. இவர்களின் உறுதியான நிலைப்பாட்டில் தான் இந்நாட்டின் மதச்சிறுபான்மையினர் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையோடு வாழ்கின்றனர். இவர்களின் நீதி பற்றிய தளரா கோட்பாட்டில்தான், இந்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் வாழ முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.

சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் முகம் கோணாமல் வைத்திருக்க வேண்டும் என்பது இவர்கள் நோக்கமல்ல; வரலாற்றுக் காலந்தொட்டு, பாகுபடுத்தப்பட்ட சமூகத்தின் ஒரு பிரிவினரை தூக்கிவிட முயன்று சில உரிமைகளை அளித்த போது, இன்னொரு சாராரிடமிருந்து எழுந்த முனகலை, எதிர்ப்பைக் கண்டு கொள்ளாமல், எடுத்த நிலைப் பாடுதான் இந்தியச் சமூகத்தின் சமூக நீதிக்கு வித்திட்டது. ஒரு சாரார்க்கு கிடைத்த நீதி இன்னொரு சாரார்க்கு எரிச்சலை தந்தது. அது இன்று வரை தந்து கொண்டிருக்கிறதுஒரு சிலரின் எதிர்ப்பு நடு நிலைப் போக்கிற்கு இட்டுச் செல்லவில்லை. ஒரு சார்புடையதே நீதி என்பது நிலைநாட்டப்பட்ட உண்மை. சமமானவர்களை சமமாக நடத்தல் சரியாகலாம். அதே வீச்சில் சமமற்றவர்களை சமமாக நடத்துதல் அநீதி என்ற தத்துவத்திற்கு உருகொடுத்தவர்கள், சமூக நீதிபால் தாகம் கொண்டவர்கள் மேற்கொண்ட ஒரு சார்பு நிலையே.

மேற்கண்ட பகுதியை இக்கட்டுரையின் முன்னுரையாக எடுத்துக் கொண்டால், நடுநிலை எனும் நிலைப்பாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ளலாமா? வர்க்க முரண்பாடுமிக்க சமூகத்தில், வர்க்கத்தின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கையில், வர்க்க ரீதியாக சுரண்டப்படும் மக்கள் சார்பாக நிற்பதே நீதி. இச்சூழலில் நடுநிலை என்பதும் அநீதிக்கு துணை நிற்பதும் ஒன்றே, சாதீய படிநிலை சமூக அமைப்பில், கடைசியாக இருக்கும் தலித் மக்கள் மீது சார்ந்து நிற்பது தான் நீதி, இங்கு நம் நிலைப்பாடு தலித் மக்களின் விடுதலையே. பாதிக்கப்பட்டோர் (victims) யார் என்று அடையாளங்கண்டு, அவர் பக்கம் நிற்பது தான் நீதியெனில், இங்கு நடு நிலையின் இடம் எங்கே.

நடுவு நிலை என்பது ஓர் அறமல்ல; அறம் உறுதியானது: அறம் சமரசம் செய்யாது. ஓர் மனிதனின், ஒரு நிறுவனத்தின் இருப்பு என்பது, அது அறத்தின் பால் கொண்ட உறுதியே மாறி வருகின்ற சூழலில், அறம் காக்க மேற்கொள்ளும் சூழல் மாறலாம்.

மதங்களின் நிலைப்பாடு

நிறுவனமயமான சமயங்கள் எப்போதுமே நடு நிலையை அல்லது அமைதி காப்பதையே அறமாகக் கருதுகின்றன. திருச்சபை தன் நெடிய நீண்ட வரலாற்றில் இருக்கின்ற சமூக அமைப்புகளை அவை எவ்வளவு கொடியதாக இருந்தாலும் நியாயப்படுத்தியே (Legitimise) வந்துள்ள வரலாற்றையும் மறந்து விடக்கூடாது. சமயங்கள் இயல்பிலேயே ஒடுக்கும் தன்மையுடையதல்ல; ஆனால், சமயத்iத் ஆள்வோர் சமயத்தை ஒடுக்குமுறை கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர், சமயங்களின் இயல்பான விடுதலைப் பண்பை (Liberating ) நாம் கண்டு கொள்வதில்லை. இயேசு கண்ட கிறித்தவம் கண்டு கொள்ளா சமயமாக, மௌனிக்கும்  சமயமாக, நடுநிலை சமயமாக செயற்படலாம்; ஆனால், இயேசு ஒரு நடுநிலையாளர் அல்ல; இயேசு ஒடுக்கப்பட்டவர் பால் நின்றவர். அவர் என்றுமே சமரசம் செய்யவில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டார். இயேசு வாழ்வின் அனைத்து நிலைகளிலும், ஒருசார்பாக நின்றார்: அதுவே அவர் அறமாயிற்று. ஆனால், பேராயர் ரொமேரா மௌனித்திருந்தால் கண்டு கொள்ளாதிருந்தால் இவ்வளவு கோரமான கொலைக்கு ஆளாகியிருப்பாரா?

திருச்சி மாவட்டத்தின் விரகாலூரில் பிறந்து, சார்க்கண்ட் மாநில பழங்குடியினர் நலனுக்காய் வாழ்ந்ததாலே மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட அருள்தநதை ஸ்டான் சுசாமி நடுநிலையாளரா? இயேசு சபை தரும் சுகமான பாதுகாப்பில் திருப்பலி ஆற்றி, இயற்கை சாவை ஏற்காமல் அவலமாக செத்து மடிந்த இந்த துறவி நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறார்? அரசையும், அரசின் அக்கிரமங்களையும் பட்டியலிட்டு அரசுக்கும் நீதித்துறைக்கும் எடுத்துச் சென்றது அறமா? அறம் தவறிய செயலா? பாரதிய சனதா அரசின் இந்துத்துவக் கொள்கை பழங்குடி மக்களின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைத்தது என்று உலகுக்கு அறிவித்த தந்தை ஸ்டான் சுவாமி நடுநிலையை ஏன் அறமாகப் போற்றவில்லை. ஏனெனில், நடுநிலை என்பது கோழைகளின் ஆயுதம்; சமரசம் கொள்கை வயப்பட்டதல்ல. பன்மைச் சமூகத்துள், பன்முக அரசியல் சித்தாந்தங்களுள், முரண்படல் இயற்கை. முரண்படலோடு முரண்களுக்கிடையே நிலவும் பேதங்களின் சமூக விளைவைப் புரிந்துகொண்டு, ஒரு நிலைப்பாடு எடுத்தல் தவறில்லை.

நம் வாழ்வும்நடு நிலையும்

நம் வாழ்வுஒரு சமய அமைப்பின் அதிகாரத்தின் கீழ் இயங்குவது: நம் வாழ்வு ஒரு நடு நிலை இதழாக இருக்க முடியுமா? சமூகத்துள் இயங்கும் திருச்சபை சமூகத்தின் நலனுக்காகவும் செயல்பட வேண்டும். சமூக நடப்புகள் சமூக மக்களுக்குகந்ததாய் இல்லையெனில் தட்டிக் கேட்கும் கடமையும், செல்ல வேண்டிய திசை இது என்று காட்ட வேண்டிய கடமையும் திருச்சபைக்கு உண்டு. சமூகத்திற்கான மாற்றுக் குரலை திருச்சபை எழுப்புகின்றபோது, அக்குரலுக்கான வாய்க்காலாக அது நடத்தும் ஊடகம் செயற்பட வேண்டும். இக்கடமையைத் தான்நம் வாழ்வுசெய்கிறது.

தமிழக திரு அவையின் அரசியல் நிலைபாட்டை ஏற்று அதைக் கூர்மைப்படுத்தும் பணியைநம் வாழ்வுசெய்கிறது. நாட்டில் மதவாதம் தலை தூக்கி நிற்கிறபோது, மதவாதம் சனநாயகத்திற்கும் சமய சார்பின்மைக்கும்  ஊறுவிளைவிக்கும் என்று நம்புகிறபோது, சமூகத்திற்காய் செயல்படும் திருஅவை மதவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிட அறிவுறுத்துகிறது. இவ்வொதுக்கல் ஒரு நிலைபாடு, இவர் வேண்டும், இவர் வேண்டாம் என்ற நிலைப்பாடு இவ்வொதுக்கலில் ஒதுக்கப்படுவோர், இப்போக்கை அறத்திற்குப் புறம்பானது என்று கூக்குரலிடுகின்றனர். சித்தாந்த அடிப்படையில் மக்கள் நலன் காக்க எடுக்கும் முடிவை முரணிக்க இயலா சக்திகள், தான் விரும்பும் சக்திகளுக்குத் தான் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறது. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்ற பொத்தாம் பொதுவான முடிவெடுத்து காரியத்தை ஒப்பேற்றநம் வாழ்வுஎப்போதும் துணியாது.

திரு. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.. அரசை ஆதரிப்பது என்பதும் இச்சித்தாந்த தெளிவுதான்நம் வாழ்வுகட்சி அரசியல் சார்ந்து நடத்தப்பெறுவதல்ல. பல ஆண்டுகளுக்கு முன் கலைஞர் அவர்கள் பா.. கவோடு கூட்டு சேர்ந்தபோது, அவர் கட்சியோடு கொண்ட உறவை மிக வேகமாக கேள்வி கேட்ட வரலாறு நமக்குண்டு. நாளை ஏதோ ஒரு சூழலில் தவறிழைப்பாரானால் அப்போதுநம் வாழ்வுகேள்வி எழுப்பும். நமக்கு தனி நபர் துதி நோக்கமல்ல. தனி நபர்க்குப் புறம்பான சன நாயகமே முன்னிலை. சனநாயகம் ஓர் அறக்கோட்பாடு என்றால் அவ்வறத்தைக் காக்கநம் வாழ்வுஎன்றும் நெஞ்சை நிறுத்தும்

தமிழக அரசோ ஏனைய அரசுகளோ மானுட விழுமியங்களை தாங்கிச் செல்ல தயங்காது செயற்பட்டால் துணிந்து பாராட்டுவோம், அதுவே அறம்.

 

Comment