No icon

நல்ல மனம் வேண்டும்

நன்றாக, திட காத்திர மாக இருக் கின்ற ஒருவர், திடீரென்று ஏற்பட்ட விபத்தினால் உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழந்து, நடக்க முடியாமல் போனால் என்னசெய்வார்?... ‘எல்லாம் என்னு டைய தலைவிதி’ என்று சொல்லிக்கொண்டு கடைசிக்காலம் வரைக்கும் கடவுளைப் பழித்துரைத்துக் கொண்டே இறந்து போவார். இல்லையென்றால், கிடைக்கும்
ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டு ‘ஏதோ’ இருப்பார். அப்படித்தானே! ஆனால், தான்பட்ட கஷ்டம் தன்னைப் போன்று இருக்கும் யாரும்
இனிமேல் படக்கூடாது என்ற நல்மன தோடு ஒரு சேவை மையத்தைத் தொடங்கி, ஏழைகள்,
மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர், முதுகெலும்பு பாதிக்கப்பட்டோர் போன்றோருடைய வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த ஒருவரைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?... ராமகிருஷ்ணன் என்ப வரே அந்த நல்ல மனம் படைத்த மனிதர்.
திருநெல்வேலி மாவட்டம், பொதிகை மலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய தென்காசிக்கு அருகில் இருக்கின்றது ஆயிக்குடி என்ற கிராமம். சங்க இலக்கியத்தில் வரக்கூடிய கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் என்பரின் வள்ளல் தன்மைத் தன்மைக்கு இலக்கணமாக இருப்பதுதான் இந்த ஆயிக்குடி கிராமம். இந்தக் கிராமத்தில்தான் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றி
யோர், முதுகெலும்பு பாதிக்கப்பட்டோர் போன் றோருக்குச் சரணாலயமாக ‘அமர் சேவை சங்கத்தை’ நடத்திக்கொண்டு வருகின்றார். கழுத்துக்கீழே எந்தவொரு உறுப்பும் செயல்படாத, வீல் சேரிலேயே எங்கும் பயணிக்கக்கூடிய  ராமகிருஷ்ணன்.
இந்த ராம கிருஷ்ணன் யார்? இவருக்கு என்ன ஆனது? எப்படி இவரால் இப்படிப்பட்ட பணிகளைச் செய்ய முடிகின்றது? என்று அறிந்து கொண்டோம் என்றால், அது நம்முடைய வாழ்விற்கு நம்பிக்கையை ஊட்டும் ஒளிக்கீற்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது.
ராமகிருஷ்ணன், ஆயிக்குடியில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.இவருக்குப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கப்பற்படையில் சேர்ந்து, நாட்டிற்குப் பணிபுரியவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.அதற்காக இவர் நன்றாகப் படித்து, கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து தன்னையே ஆயத்தப்படுத்தி வந்தார். பொறியியல் படிப்பின் நான்காம் ஆண்டில், கப்பற்படைத் தேர்வானது நடைபெற்றது. அதில் ஒரு தகுதிப்போட்டியில் மரத்தின் மேலிருந்து கீழே
குதிக்க வேண்டும். ராமகிருஷ்ணனும் தைரியமாக மரத்திலிருந்து கீழே குதித்தார். ஆனால், எதிர்
பாராத விதமாக அவருடைய முதுகுப் பக்கத்தில் பயங்கரமான அடி ஏற்பட்டது. சிகிச்சை அளிப் பதற்காக அவரை பெங்களூருவுக்கும் புனேக்கும்
தூக்கிக்கொண்டு போனார்கள். ஆனால், எந்தவொரு சிகிச்சையும் அவருக்குப் பலன்கொடுக்கவில்லை. இதனால் அவர் கழுத்துக்குக் கீழுள்ள உறுப்புகள் அனைத்தும் செயலிழந்துபோய் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். இது நடந்தது 1975 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்.
தான் கண்ட கனவு, தன்னுடைய இலட்சியம்
எல்லாம் இப்படி சுக்குநூறாக உடைந்து போய் விட்டதே என்று வருத்ததோடு இருந்த ராமகிருஷ்ணனுக்கு அப்போதெல்லாம் ஆல் இன்டியோ ரேடியோதான் பேருதவியாக இருந்தது. அதில் வந்த நிகழ்ச்சிகள், குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களைக் குறித்து வந்த நிகழ்ச்சிகள் அவருக்குத் தன்னம்பிக்கையும் அதே நேரத்தில் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டியது. இந்நிலை யில்தான் 1981 ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில்,
ஆல் இன்டியோ ரேடியோவிலிருந்து  ஊனமுற்ற வர்களைக் குறித்து நிறைய நிகழ்ச்சிகள் வழங்கப்
பட்டன. இந்நிகழ்ச்சிகள் யாவும் ராமகிருஷ்ணனின் உள்ளத்தில், உடல் ஊனமுற்றவர்களுக்காக உடனடியாக எதாவது செய்யவேண்டும் என்ற
எண்ணத்தை உசுப்பி விட்டன. அதன்வெளிப்
பாடாக ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர் களுக்கு என்று தன்னுடைய பெற்றோரின் பெயரில் ‘சிவசரஸ்வதி’ மாலைநேரப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார்.
அந்தக்காலத்திலேயே பொறியியல் படிப் பெல்லாம் படித்திருந்த ராமகிருஷ்ணனுக்கு ஏழை
மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மிகவும் எளிதாக இருந்தது. இந்தப் பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவர்கள் வந்து சேர்ந்து கல்வி கற்றார்கள். ஒரு மாற்றுத்திறனாளியாக ஏழை எளிய மாணவர்களுக்கும் தன்னைப் போன்ற
மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வி கற்றுக்கொடுத்து வந்த ராமகிருஷ்ணனின் நல்ல மனதைப் பார்த்துவிட்டு, சிவசங்கரி என்ற எழுத்தாளர் 1985 ஆம் ஆண்டு, விகடனில் அவரைப் பற்றியும் அவர் ஆற்றிவந்த சேவையைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினார். இது பலரையும் சென்றுசேர, பலதரப்பு மக்களிடத்திலிருந்தும் அவருக்கு உதவிகள் வந்து குவிந்தன. குறிப்பாக சுலேச்சனா என்ற பெண்மணி 4 ஏக்கர் நிலத்தை ராமகிருஷ்ணனுக்குத் தானமாகத் தந்தார். இந்த நிலத்தில் அவர், தான் அடிபட்டுக் கிடந்தபோது தனக்குச் சிகிச்சை அளித்த ‘அமர்ஜித் சிங் சாகல்’ என்பவருடைய நினைவாக ‘அமர் சேவா சங்கம்’ என்றொரு சேவை மையத்தைத் தொடங்கினார்.
அமர் சேவா சங்கம்’ என்று தொடங்கப்பட்ட சேவை மையத்தின் வழியாக ராமகிருஷ்ணன், ஆயிக்குடியை சுற்றியிருக்கக்கூடிய ஊர்களில் இருந்த ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம்
குன்றியவர்கள், முதுகெலும்பு பாதிக்கப்பட்டோர் போற்றோருக்கு தன்னலமற்ற சேவையினை வழங்கத் தொடங்கினார். இதனால் நூற்றுக் கணக்கான மக்கள் பயன்பெறத் தொடங்கினார்கள். இதற்கிடையில் தன்னால் மட்டும் இப்படிப்பட்ட பணிகளைச் செய்யமுடியாது என்பதை உணர்ந்த இவர் லஷ்மி என்ற பெண்ணை மணந்துகொண்டு அவர்வழியாகவும் இப்பணிகளைச் செய்யத் தொடங்கினார்.
இன்றைக்கு அமர் சேவை சங்கத்திலிருக் கின்ற குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்லாது கம்யூட்டர் பயிற்சி, சீருடை தைத்தல், புக் பைண்டிங் போன்ற பல பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டு அவர்கள் சுயமாக இயங்குவதற்கான எல்லா வழி வகைகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி நல்ல மனத்தோடு, சமூகத்தில் இருக்கக்கூடிய விளிம்புநிலை மக்களுக்குச் சேவைசெய்து வரும் ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல விருதுகளை அளித்துக் கௌரவித்துள்ளன. “நாங்கள் மேற்கொண்டிருக்கும் பயணத்தில் கடந் திருப்பது கொஞ்சம்தான். இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது” என்று சொல்லும் ராம கிருஷ்ணன் நல்லமனதோடு சேவைசெய்தால், நம் வாழ்வில் நிறைய ஆசி பெறலாம் என்ற செய்தியை மிக ஆழமாக நமக்குக் கற்றுத்தருகின்றார்.
‘எண்ணம்போல் வாழ்க்கை’ வாழ எவைவெல்லாம் நமக்குத் தேவை என்று சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதனுடைய ஒரு தொடர்ச்சியாக இருப்பதுதான் ‘நல்ல மனம் வேண்டும்’ என்ற தத்துவமாகும்.
இன்றைக்குப் பலருக்கு மடிநிறையப் பண மிருக்கும். ஆனால் தேவையில் உழல்வோருக்கும் இல்லாதவருக்கும் கொடுப்பதற்கோ மனமிருக்காது. இதைத்தான் பட்டுக்கோட்டையார், “மடிநிறையப் பொருள் இருக்கும். மனம்நிறைய இருள் இருக்கும்” என்று பாட்டில் எழுதி வைத்தார். ஆம், மடியில் பணமிருந்தும் தேவையில் உழல்வோருக்கு மனமிரங்கி உதவிசெய்யாதவர்களை என்னவென்று சொல்வது?....
அன்னைத் தெரசா ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இந்த உலகம் ஒரு வீடு. நம்முடைய நற்காரியங்களே, நாம் இந்த உலகத்
திற்குச் செலுத்தும் வாடகை” என்று. ஆம், வாடகை வீட்டில் இருக்கின்ற ஒருவர் மாதமாதம்
அதற்குண்டான வாடகையைக் கட்டியாகவேண் டும். அதுபோன்றுதான் இந்த உலகத்தில் நாம் வாழ்கின்றோம் என்றால், நம்முடைய நற்காரியங் கள் என்ற வாடகையை நல்லமனதோடு இந்த
உலகத்திற்குச் செலுத்தவேண்டும். இல்லையென் றால், நாம் கடனாளிகள்தான்; கடவுளுக்கு முன்பாக நாம் கணக்குக் கொடுக்கவேண்டியவர்கள்தான்.
சுவாமி விவேகானந்தருடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. “என்ன செய்தாலும் வாழ்வில் மகிழ்ச்சியில்லையே” என்று ஒருவர் புலம்பிக்கொண்டு விவேகானந்தரிடம் வந்தார். அவரை ஓரிரு நிமிடங்கள் பொறுமையாகப் பார்த்த அவர், “மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை. நல்ல மனத்தோடு பிறருக்குக் கொடுப்பதில் இருக்கின்றது. அடுத்தவரின் மகிழ்ச்சிக்கு மூலமாக
நீங்கள் இருங்கள். அப்போது உங்களை மகிழ்ச்சியின் வடிவமாக உணர்வீர்கள்” என்றார்.
ஆம், நல்மனதோடு ஒருவருக்குக் கொடுக்
கின்றபோதும் சேவைகள் புரிகின்றபோதும் கிடைக்
கின்ற மகிழ்ச்சி வேறெதில் கிடைத்துவிடப்
போகின்றது!. ஆகவே, எண்ணம்போல வாழ்க்கை வாழ விரும்பும் நாம், நல்லமனம் கொண்டிருப்போம். அந்த நல்ல மனம் நலிவுற்றோரின் தேவைகளைப் பூர்த்திச் செய்யச் செய்து நம்மைக் குன்றில் இட்ட விளக்காக மாற்றிக்காட்டும்!!!

Comment