No icon

கிறித்தவத்தால் தமிழில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

1. தமிழ் எழுத்து வரிவடிவச் சீர்த்திருத்தம்
1730 ஆம் ஆண்டு இத்தாலியத் தமிழ் ஏந்தல் வீரமாமுனிவர் ஒற்றைக் கொம்பு - இரட்டைக் கொம்பு வேறுபாடு எ - ஏ வேறுபாடு, ஒ-ஓ வேறுபாடு ஆகியவற்றை அறிவித்து எளிதாகவும் எல்லாரும் தமிழை எழுதவும் பேசவும் ஆராயவும் வழி வகுத்துள்ளார். அந்தச் சீர்திருத்த மரபின் அடிப்படையிலேயே தமிழக அரசு பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, பதின்மூன்று தமிழ் வரிவடிவ மாற்றங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. அகர வரிசையில் மூன்று எழுத்துகள்: ணா, றா, னா, ஒகர வரிசையில் மூன்று எழுத்துகள், ணொ, றொ, னொ, ஒகார வரிசையில் மூன்று எழுத்துகள்: ணோ, றோ, னோ, ஐகார வரிசையில் நான்கு எழுத்துகள்: லை, ளை, ணை, னை, ஐ என்பது அய் என வருவது போலியாகும். ஒள என்பது அவ் என வருவது போலியாகும். ஐ என்னும் எழுத்துக்குரிய பதின்மூன்று பொருண்மைகள் அய் என்று எழுதும்போது அமையாது; அதேபோன்று ஒள என்னும் எழுத்துக்குரிய ஐந்து பொருண்மைகள் அவ் என்று எழுதும்போது அமையாது! கை என்று எழுதுவதை கய் என்று எழுதத் தொடங்கினால் குழப்பம் பெருகும்! எனவே, அறிஞர் பெருமக்களின் சொல்லுக்குச் செவி சாய்த்துத் தமிழக முன்னாள் முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளை நீக்க வேண்டாம் என்று அறிவித்தார்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் (441)
என்னும் வள்ளுவர் கொள்கைக்குச் சான்றாகத் தோன்றினார். மேலும் சில வரிவடிவ மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவியல் அறிஞர் வா.செ. குழந்தைசாமி முதலானோர் விரும்பினர். தமிழகப் புலவர் குழு விரிவாக ஆராய்ந்து, தொடர்ந்து தமிழ் எழுத்து வரிவடிவ மாற்றங்கறை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசுக்கு அறிவுரை நல்கியுள்ளது.
2. தனித்தியங்கும் தமிழின் திறம்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வாயிலாக அயர்லாந்து நாட்டு அறிஞர் பேராயர் கால்டுவெல் 1956 ஆம் ஆண்டு தனித்தியங்கும் இயல்புகொண்ட தமிழ் வடமொழியின் சார்பு இன்றித் திகழ்வதை உறுதி செய்துள்ளார். கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் ஒன்று பலவாயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே என்று மனோன்மணியம் நாடகம் வாயிலாகப் பேராசிரியர் சுந்தரனார் நிறுவியுள்ளார்.
தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன்,
தனித்தியங்கும் தன்மை தமிழினுக்குண்டு
தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு
என்று தெளிவுறுத்தியுள்ளார்.
3. மொழி பெயர்ப்பால் தமிழர் மெய்யியலை உலகறியச் செய்தது
திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த பெருமையும் பெருமிதமும் பொருந்தியவர் இங்கிலாந்து நாட்டுத் தமிழ் ஏந்தல் சார்ச்சுயுக்ளோ போப்பு ஆவார். வீரமாமுனிவர் 1730 ஆம் ஆண்டு இலத்தீனில் மொழி பெயர்த்துத் தந்த திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு 1786 ஆம் ஆண்டு போப்பு அவர்கள் ஆங்கில மொழியில் ஆக்கியருளினார். எலும்பையும் உருகச் செய்வது திருவாசகம் என்று புகழ்ந்து அத்திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் அருளி தமிழின் மெய்யியலை உலகம் உணரச் செய்துள்ளார்.
4. கதை இலக்கியங்களால் உரைநடை வளர்ச்சி
சிறுகதை, நெடுங்கதை ஆகிய புத்திலக்
கியங்களை வழங்கி உரைநடையில் மறுமலர்ச்சி உருவாக்கிய பெருமைக்கு உரியவர் வீரமா முனிவரும் மயிலாடுதுறை நீதிபதி வேதநாயகரும் ஆவர். பரமார்த்த குருவின் கதைகள் என்னும் பெயரால் பேச்சுத் தமிழ் இலக்கியத்தை 1729 ஆம்
ஆண்டு வழங்கிய வீரமாமுனிவர் தமிழ்ச் சிறுகதை களின் தந்தையாக விளங்குகிறார். 1789 ஆம் ஆண்டு நீதிபதி வேதநாயகம் வழங்கிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் வசன காவியமும் தொடர்ந்து அவர் நல்கிய சுகுண சுந்தரி சரித்திரமும் புதுமை இலக்கியங்கள் ஆயின. வேதநாயகர் தமிழ்ப்
புதின இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார்.
5. தமிழிசையின் தொன்மையும் முன்மையும்
தமிழிசை எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலிவாகவும் பொலிவாகவும் திகழ்ந்த செய்தியைத் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஏழு இசை மாநாடுகளை நடத்திய பிறகு வெளி யிட்டுள்ள கருணாமிர்தசாகரம் என்னும் ஆய்வு நூலால் உலகறியச் செய்துள்ளார். குரல், துந்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழிசையே வடமொழிப் பெயர்களின் முதலெழுத்துகளால் சரிகமபதநி ஆகத் திரிந்துள்ள செய்தியைப் புலப்படுத்தியுள்ளார். தோற்கருவி மத்தளம் எனவும் முழவு எனவும் திகழ்கிறது. துளைக் கருவி புல்லாங்குழலாகவும் நாதசுரமாகவும் அமைந்துள்ளது. நரம்புக்கருவி சீறியாழ், செங்கோட்டியாழ், மகரயாழ், பேரியாழ்களாக வளர்ந்துள்ளது. கஞ்சக் கருவி கைத்தாளமிடும் வெண்கலத்தால் விளங்குகிறது. ஒருமுறை இசைப்பது இருமுறை பேசுவதற்கு இணையாகும் என்பதைப் புலப்படுத்தியுள்ளது.
6. தமிழிலக்கணத் தெளிவு
தமிழிலக்கணம் எளிதாகவும் தெளிவாகவும் எல்லாராலும் படிக்கவும் பயன்படுத்தவும் தக்க
வாறு வீரமாமுனிவரது தொன்னூல் விளக்கம்
திகழ்கிறது. 1729 ஆம் ஆண்டு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்துவகை இலக்
கணத்தையும் முந்நூற்று எழுபது நூற்பாக்களில் சுருக்கமாகவும் சுவைப் பெருக்கமாகவும் மேற் கோள்கள் பலவற்றுடன் வழங்கிய பெருமை வீரமாமுனிவரைச் சாரும். அவரே மேலை நாட்டார் ஏட்டுத் தமிழையும் பேச்சுத் தமிழையும் சரியாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம் ஆகிய வற்றை இலத்தீனில் எழுதியுள்ளார். அவை தஞ்சை சரசுவதி மஹால் நூலகத்தின் வாயிலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளன.
7. அகராதி அமைப்பால் சொற்பொருள் காணுதல்
அகர வரிசையில் பொருள் உணர்ந்து எளிதாகக் கற்பதற்கு ஏற்ற வகையில் 1732 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் அருளிய சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு நிலைகளில் ஏறத்தாழப் பதினைந்தாயிரம் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளம்புகிறது. நீண்ட நெடிய செய்யுள்களால் அமைந்த நிகண்டுகளுக்கு மாறாக அகராதி அமைப்பு, இனிமை, எளிமை வாய்ந்ததாக விளங்குகிறது. வீரமாமுனிவரே இருமொழி அகராதி (தமிழ் - இலத்தீன்) மும்மொழி அகராதி (தமிழ், இலத்தீன், போர்த்துக்கீசியம்) ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். தமிழ் - இலத்தீன் உறவு மொழிப் பாலமாக வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள் திகழ்கின்றன.
8. கலம்பக இலக்கியத்தில் புரட்சி
பதினெட்டுத் துறைகளுடன் திகழும் கலம்பக இலக்கியத்தில் ஒரே பெண்பாற் கலம்பகமாகத் திருக்காவலூர்க் கலம்பகம் தந்த வீரமாமுனிவர், பெண்ணின் பெருமை பேசும் பாவியமாகத் திருக்காவலூர்க் கலம்பகத்தைத் தந்து, உலா என்னும் துறைக்கு மாறாகப் புதிய சமூக உல்லாசம் என்னும் துறையினை அமைத்துள்ளார். அன்னை மரியா தேரில் உலா வரும்போது பக்தகோடிகள் மகிழ்ந்து போற்றுவது குறிப்பிடத்தக்க சிறப்புமிக்கதாகும்.
9. தமிழ் மருத்துவத்தின் தன்னிகரற்ற சிறப்பு
தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்து வத்துக்கு ஏற்றமும் எளிமையும் சேரும் வண்ணம் நசகாண்ட வெண்பா, இரண வாகடம், அநுபோக வைத்திய சிந்தாமணி ஆகிய நூல்களை நல்கியுள்ளார். நாற்பது மருந்து செய்முறைகளை நாட்டுக்கு வழங்கிய பெருமை வீரமாமுனிவரைச் சாரும். தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவம் எளிதாகவும் தெளிவாகவும் வலிவாகவும் பொலிவாகவும் திகழ்கிறது.
10. அச்சுத்துறை வாயிலாகக் கருத்து விளக்கம்
பட்டிமண்டபங்கள் வாயிலாகப் பழந் தமிழ்ச் சான்றோர் புலப்படுத்தி வந்து வாதிடும் மேடையாக அச்சுத் துறையினைப் பலரும் மெச்சும் வகையில் அறிமுகம் செய்தவர் வீரமாமுனிவர். தாம் எழுதிய வேத விளக்கம் என்னும் நூலுக்குத் தரங்கம்பாடியார் திருச்சபை பேதகம் என்று நூல் வெளியிட்டபோது, அதற்குத் தெளிவுரை தரும் குறிக்கோளுடன் பேதக மறுத்தல் முதலாக நூல்களை வீரமாமுனிவர் வழங்கியுள்ளார்.
11. வேதியரின் வாழ்வியல் ஏற்றம்
திருமறை வழிபாட்டில் குருக்களுக்கு உறுதுணையாக விளங்கும் உபதேசிகரை வேதியர் என்று போற்றி அவர்களுடைய சீரிய வாழ்வுக்கு வழிகாட்டும் வேதியர் ஒழுக்கம் என்னும் நூலை எழுதியவர் வீரமாமுனிவர். தரங்கம்பாடி அச்சகத்தில் வீரமாமுனிவர் காலத்திலேயே அச்சாகிய பெருமை பொருந்தியது அந்நூல்.
12. சமய நல்லிணக்கச் செயலாக்கம்
சமய நல்லிணக்கத்துக்குச் சான்றோன்
ஆகத் தோன்றிய பெருமை வீரமாமுனிவரைச் சாரும். அரியலூர்ச் சமீன்தார் அரங்கப்ப மழவராயரின் முதுகுப் பிளவையினை இறையருளால் போக்கிய வீரமாமுனிவருக்கு 1735 ஆம் ஆண்டு மழவராயர் ஏலாக்குறிச்சி திருக்காவலூரில் வழங்கிய நூற்று எழுபத்தைந்து ஏக்கர் நிலத்துக்குரிய கல்வெட்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். ஆற்காட்டு நவாபு சந்தா சாகிபைச் சந்திக்கச் செல்வதற்கு முன்னரே மூன்று மாதங்களில் பாரசீகம், இந்துசுதானி ஆகிய இரு மொழிகளையும் கற்று நவாப்பின் பேரன்பைப் பெற்று விழுமிய துறவி என்று பாராட்டப் பெற்ற வீரமாமுனிவருக்குக் காவிரிக் கரையில் நான்கு ஊர்களையும் தாத்தா சததுல்லாகான் பயன்படுத்திய தந்தப் பல்லக்கையும் திவான் என்னும் அமைச்சர் பொறுப்பையும் வழங்கியவர் சந்தாசாகிபு. கிறித்தவ இசுலாமிய நல்லிணக்கத்துக்கு வழிகாட்டியவர் வீரமாமுனிவர் எனலாம்.
13. தாய்மொழி வாயிலாகவே பயிற்றுவிக்கத் தூண்டிய மாண்பு
செருமானிய நாட்டவராகிய இரேனியசு அவர்கள் பூமி சாத்திரம் முதலாய நூல்களைத் தமிழில் எழுதி அனைத்துப் பள்ளிப் பாடங்களையும் தமிழ் மக்கள் தமிழிலேயே கற்றிட வழி காட்டியுள்ளார். குறுகிய காலத்துக்குள் நூற்றுக்கணக்கான பள்ளிகளைத் தொடங்கிய இவரே பெருந்தலைவர் காமராசர் கல்விக் கண் திறந்த காமராசர் என்று போற்றப்படுவதற்கு முன்னோடு ஆவார். மூதறிஞர் இராசாசி திண்ணை இரசாயனம் போன்ற நூல்கள் எழுதவும் பெருங்குளம் நா. அப்புசாமி அறிவியல் தமிழ் நூல்கள் தமிழில் தரவும் வழிகாட்டியாக விளங்கியுள்ளார்.
14. கணிப்பொறித்துறை வாயிலாகத் தமிழ் வளர்ச்சி
அன்றோ பீற்றர் போன்ற கணிப்பொறியாளர் சங்கப் பலகை முதலாய தமிழ் விசைப்பலகையினை உருவாக்கியும் கணினித் தமிழ் வாயிலாக இணையத் தளம் தழைத்தினிதோங்கவும் உலகத்தையே உள்ளங் கைக்குள் கொண்டு வரவும் வழிவகை கண்டுள்ளனர்.
15. நிறைவுரை
’தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்ற பாவேந்தரின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் பல்துறைகளிலும் தமிழ் வளரவும் பன்முகத் தமிழக முத்தமிழ் மிளிரவும் கிறித்தவ அறிஞர் பெருமக்கள் அயராது செயலாற்றி வருகின்றனர். உலகத் தமிழ் மாநாடுகள். இணையத் தமிழ் மாநாடுகள் உருவாகிட அருளாளர் சேவியர் தனிநாயகம் போன்ற சான்றோர் வழிகாட்டிய ஒளிவிளக்குகளாக மிளிர்கின்றனர்.

Comment