No icon

தமிழகத்துக்குச் சவக்குழியா?

மக்கள் கருத்துக் கேட்பு
இந்தியாவில் உள்ள அணுவுலை களிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுவுலை வளாகத்தில் புதைத்துப் பாதுகாக்க மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை மாதம் 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அரசுப் பள்ளியில் வைத்து நடைபெறும். இது குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் உள்ளன என்று சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பைக் கேட்டதும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி
மக்கள் மிகப்பெரும் கலக்கத்திற்கு ஆளாகி யுள்ளனர். இது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கே மிகப்பெரும் ஆபத்தைக் கொண்டு வரும் என்று அச்சப்படுகின்றனர். கொஞ்சநாள் கூட எங்களை நிம்மதியாக வாழவிட மாட்டார்களா? என்று மக்கள் கலங்கித்தான் கிடக்கிறார்கள். 
உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணுவுலையின் முதல் அலகு அப்போதைய காங்கிரஸ் அரசு வலுக்கட்டாயமாக அமைக்க முற்பட்ட நேரம்; புகுசிமா அணுவுலை வெடித்து மிகப்பெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்; உலகின் வளர்ந்த நாடுகளெல்லாம் அணுவுலைகளின் ஆபத்தை உணர்ந்து அவற்றைப் படிப்படியாக மூடிக் கொண்டிருந்த நேரம்; புகுசிமா அணுவுலை வெடிப்புக்கு பின் 65 சதுர கி.மீ பகுதியில் மக்கள் வாழவே முடியாது என்று ஜப்பான் அரசு அறிவித்து பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டிருந்த நேரம்; இந்த ஆபத்தை எங்கள் தலையில் கட்ட வேண்டாம் என்று தென்தமிழக மக்கள் போராட்டக்களம் கண்டுகொண்டிருந்த நேரம்; மக்களை ஒடுக்கி, மக்களைத் தேசத் துரோகிகளாக, சமூக விரோதிகளாகச் சித்தரித்து, அணுவுலை பாதுகாப்பானது என்று காங்கிரஸ், அதிமுக அரசுகள் தங்கள் பாக்கெட்டை நிரப்பும் நோக்கத்தோடு அடக்குமுறையை ஏவிவிட்டுக் கொண்டிருந்த நேரம்;
அணுவுலை அமைத்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளின் வீரியத்தைக் குறைக்க பல நூறு ஆண்டுகள் பாதுகாத்து வைக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
“அணுவுலை செயல்பட ஆரம்பிக்கும்போது அவ்வளவு அதிகமாக கழிவுகள் மிஞ்சாது. கையில் உருட்டி வைக்கும் அளவிற்கே கழிவுகள் மிஞ்சும். அதை அழகிய பேப்பர் வெயிட்டுகளாக, கண்ணாடிக்குண்டுகளாக உருட்டிப் பயன் படுத்தலாம்” என்று ஒரு விசித்திரமான தீர்வை அணுவுலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியது. அவர்களின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணுக்கழிவுகளை எங்கே பாதுகாப்பாகப் புதைப்பீர்கள் என்று தெளிவாகத் திட்டம் ஏற்படுத்தாவிட்டால் அணுவுலை இயங்க அனுமதி வழங்க முடியாது என்று சொன்னதால் “நாட்டில் உள்ள அணுவுலைகளிலிருந்து கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியில் பலமீட்டர்கள் ஆழத்தில் தங்கத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்தில் காங்கிரீட் கூண்டுகள் அமைத்து பாதுகாப்பாகப் புதைத்து வைப்போம்” என்று அரசும், அணு விஞ்ஞானிகளும் உறுதி அளித்ததால் அணுவுலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கர்நாடகா காட்டிய வழி
“அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயலில் மட்டுமல்ல; வேறு எந்த பகுதியிலும்  புதைக்க அனுமதிக்க மாட்டோம்” என்று காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம், இடதுசாரிகள், கன்னட வேதிகா போன்ற சமூக அமைப்புகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டு நின்று போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து மூன்று நாள்கள் மக்களின் இயல்புநிலை முற்றிலுமாகப் பாதிக்கும் அளவிற்கு எதிர்ப்புகள் வலுத்ததால் “அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலத்தில் புதைக்க மாட்டோம்” என்று மத்திய அரசு அனுமதித்தது.
அணுக்கழிவுகளை கர்நாடகா சுரங்கத்தில் புதைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு கர்நாடகா மாநிலமே சுடுகாடாக மாறிவிடும்; கர்நாடகத்தின் வருங்காலத் தலைமுறைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த மக்கள் ஒன்றுபட்டுப் போராட்டம் நடத்தி வென்று காட்டினார்கள். ’கர்நாடகாவிற்கு வந்தால் அது இரத்தம்; தமிழ்நாட்டுக்கு வந்தால் அது தக்காளி சட்னி’ என்று கூடங்குளத்திலே புதைக்க முடிவு செய்தது காங்கிரஸ் அரசு.
குஜராத் மக்களால் விரட்டப்பட்ட - மகாராஷ்டிர மக்களால் துரத்தப்பட்ட - கேரள மக்களால் விரட்டியடிக்கப்படட அணுவுலைகளை நெறிகெட்ட ஊழல் அரசியல்வாதிகள் பெற வேண்டியதைப் பெற்றுவிட்டு தமிழ்நாட்டில் இருகரம் விரித்து வரவேற்று கூடங்குளத்தில் அமைத்ததுபோல் மற்ற மாநிலங்களில் ஓட ஓட விரட்டப்பட்ட அணுவுலைக் கழிவுகளை அப்படியே கொண்டுவந்து கூடங்குளத்தில் புதைத்து தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கத் திட்டமிடுகிறது பாஜக அரசு. 
சோமாலியா சோகம்
சோமாலியா என்றொரு நாடு; 1990 வரை
மிக வளமான விவசாய உற்பத்தி நாடாகத்தான் அது இருந்தது. அங்கிருந்த அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கினாலும், திறமையற்ற நிர்வாகத்தினாலும் நெறிகெட்ட ஊழல் நடைமுறைகளாலும், வளர்ந்த நாடுகளின் ஆசைக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளானதாலும், மீத்தேன் எடுக்கிறோம். ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்கிறோம்; அணுக்கழிவுகளைப் புதைக்கிறோம் என்று சொல்லி அந்நாட்டின் விவசாயத்தை, நீர்நிலைகளை, சுற்றுச்சூழலை, இயற்கையை அழித்து மிகப்பெரும் ஏழைநாடாக மாற்றி மனிதனை மனிதன் சாப்பிடும் அளவிற்கு, கடற்கொள்ளையர்களாக மாறி நிற்கும் சோகம் நாம் அறியாததல்ல. வளர்ந்த நாடுகளின் அணுக்கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக சோமாலியா மாற்றப்பட்டதன் விளைவு தான் இத்தனையும் என்ற அதிர்ச்சித் தகவல் வந்து கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல. அப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டுக்கு உருவாக்கத் தான் இத்தனை வளர்ச்சித் திட்டங்களின் அணிவகுப்பும்.
எதிர்ப்புக்குரல் எங்கே!
கர்நாடகாவில் கோலார் தங்கவயலில்  அணுக்கழிவுகளை புதைப்போம் என்று சொன்ன அடுத்த நொடியே கர்நாடகம் வெகுண்டெழுந்தது. தமிழ்நாட்டில் புதைப்போம் என்று சொல்லி ஒருவாரம் கடந்த பின்பும், ஆளும் கட்சியிடமிருந்து ஒரு குரலையும் காணவில்லை எதிர்க்கட்சி திமுகவும் அனக்கம் காட்டாமல் இருக்கிறது. இடதுசாரிகள், வைகோ, சீமான், தமிழ் அமைப்புகள் என்று அனைத்தும் வாய் மூடி மௌனமாக இருப்பது விந்தையாக உள்ளது. 
“நான் உங்களையும், உங்கள் மண்ணையும், உங்கள் வருங்கால சந்ததியையும் கொல்லப் போகிறேன். அது சம்மந்தமாக உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்” என்று மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கிறது.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு “எங்களைக் கொல்லாதீர்கள்! எங்களையும் எங்கள் மண்ணையும், எங்கள் தலைமுறைகளும் காப்பாற்றுங்கள்” என்று கதறுவார்கள். அதைக் கேட்டு மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு “ ஒரு சதவிகிதம் மக்கள் தான் எதிhப்பு தெரிவித்து   போராடுகிறார்கள்; மீதி 99 சதவிகிதம் மக்களும் எங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளார்கள். எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; தேசத் துரோகிகள், சமூக விரோதிகள்” என்று முத்திரை குத்துவார்கள்.
ஆறுதல்
கட்சிகளும், சமூக அமைப்புகளும் வாய் மூடிக் கொண்டிருக்கும்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி.தினகரனின் அறிக்கை மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.
“அணுவுலை கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்கும் செயல் சுற்றுச்சூழலை பாதித்து தமிழகத்தைச் சுடுகாடாக மாற்றிவிடும். கழிவுகளை
மேலாண்மை செய்யும் திட்டம் இல்லாமல் அணுவுலைகளை இயக்கக் கூடாது. அணுக் கழிவுகளை பாதுகாக்கும் திட்டங்கள் செயல்படுத்தும்
வரை கூடங்குளம் அணுவுலையை மூட வேண்டும்” என்று மிகத் தெளிவாக அறிக்கை வெளியிடுகிறார் திரு.டிடிவி தினகரன். அதுபோல் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும். “நவம்பர் 19, 2018 முதல் மே 19, 2019 வரை ஆறுமாதங்களாக மூடிக்கிடந்த முதல் அணுவுலை இன்று மீண்டும் மூடப்பட்டிருப்பதன் பின்னாலுள்ள மாபெரும் ஊழல்கள், பித்தலாட்டங்கள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் மக்களிடம் பரப்புரை
களை மேற்கொள்ளும் கூடங்குளம் அணுவுலை களுக்கு எதிரானப் போராட்டம் இறுதி. வெற்றி கிட்டும் வரை தொடரும்” என்று அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்நாட்டை நேசிக்கும் மக்களுக்கு ஆறுதலான செய்தியாக இருக்கிறது. 
கடலைக் குப்பை தொட்டியாக்க...
இரசாயண ஆலைகள், சாயப்பட்டறை கழிவுகள், தோல் பதனிடும் தொழிற்சாலை களிலிருந்து வெளியாகும் கழிவுகளை சுத்திகரிப்பு ஆலைகள் அமைத்து சுத்திகரித்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவோம் என்று கூறிவிட்டு நச்சுக் கழிவுகளை நேரடியாக விவசாய, நிலங்களில் திறந்துவிட்டு விவசாயத்தை நீர்நிலைகளை அழித்ததுபோல அணுக்கழிவுகளை காங்கிரீட் கூண்டுகட்டி பூமிக்கடியில் புதைத்து 4000 ஆண்டுகள் பாதுகாப்போம் என்று கூறிவிட்டு அவற்றை நேரடியாகக் கடலில் கலக்கச்செய் வதுதான் அவர்களின் திட்டம்.
அணுமின் நிலையம், அனல்மின் நிலையம், ரசாயண ஆலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், நிலக்கரி சுத்திகரிப்பு ஆலைகள், சாயப்பட்டறைகள் என்ற அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் கடற்கரைகளைக் குறிவைத்து அமைப்பதற்கு காரணமே, அவர்களுக்குச் சவாலாக இருக்கும் கழிவுகளை நேரடியாக கடலில் கலப்பதுதான். கூடங்குளம் அணுமின் நிலையமும் கடலுக்குள் அமைந்திருப்பதும் ஒன்று, இரண்டு என்று தொடங்கி மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று நீண்டுகொண்டுபோவதற்கும் இதுதான் காரணம். ஏனென்றால் கடல்தான் மிகப்பெரிய குப்பைத் தொட்டி. கடலில் கழிவுகள் கலப்பது யாருக்கும் தெரி யாமல் போகும் என்று நினைக்கிறார்கள்.
அரசியல்வாதி களும், ஆட்சியாளர்களும், சமவெளிச் சமூக மக்களும் கடலுக்குத்தானே ஆபத்து;  நமக்கென்ன என்று நினைக்கலாம். ஆனால், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த தேசத்தின் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது மட்டும் உண்மை. “அட கொஞ்ச நாளு நிம்மதியா கடல்ல தொழில் செஞ்சு குடும்பம் குழந்தை குட்டி சொந்த பந்தங்களோட நிம்மதியா சந்தோசமா வாழ உடமாட்டீங்களா? எப்பவும் போராட்டம்தான் எங்க வாழ்க்கையா?” என்று கட்டுமரத்தில் மீன்பிடித்தொழில் செய்யும் தாசன் என்ற மீனவர் சொல்வது நம் உள்ளத்தை உலுக்குவதாக உள்ளது.
தமிழ்நாட்டைச் சோமாலியாவாக மாற்ற
முயற்சி செய்யும் அணுவுலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்கும் திட்டத்தை எதிர்த்துக் களம் காண்போம்; தமிழ்நாட்டையும், தமிழ் மண்ணையும், வருங்கால தலை
முறைகளையும் காக்க நம் சமூகக் கடமையை ஆற்று வோம். 

Comment