வரதராசன்பேட்டை பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா - 11.04.2021
- Author --
- Wednesday, 07 Apr, 2021
வரதராசன்பேட்டை பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா
கும்பகோணம் மறைமாவட்டம் வரதராசன்பேட்டையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா வெகு விமரிசையாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. குடந்தை ஆயர் மேதகு அந்தோனிசாமி, பணி நிறைவுபெற்ற கோட்டாறு ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ், பணி நிறைவுபெற்ற புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயரும் மண்ணின் மைந்தருமான மேதகு பேராயர் அந்தோனி ஆனந்தராயர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும், இருநூறுக்கும் மேற்பட்ட அருள்சகோதரிகளும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்களும் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றனர். வீரமாமுனிவர் மற்றும் புனித அருளானந்தர் ஆகியோரின் பாதம் பட்ட புண்ணிய பூமியான வரதராசன்பேட்டை கிறிஸ்தவ வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் தலமாகும். வீரமாமுனிவர் கட்டிய பழம்பெரும் ஆலயத்தின் அருகிலேயே வானுயர உயர்ந்திருக்கும் கோபுரத்துடனும் தெற்கும் வடக்குமாக, கிழக்கும் மேற்குமாக இறைமக்களை வாருங்கள் என்று அழைக்கும் விதத்தில் அமைந்துள்ள இதன் பரந்த நுழைவாயில்களும் திருப்பீடமும் ஏறக்குறைய இரண்டரைக் கோடி செலவில் புதிதுபோலவே புனரமைக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. பங்குத்தந்தை அருள்பணி. வின்சென்ட் ரோச் மாணிக்கம் மற்றும் கிராம நாட்டார்களின் சீரிய முயற்சியாலும் மண்ணின் அருள்பணியாளர்கள்-அருள்சகோதரிகள், சலேசிய சபையினர், மாதவரம் புனித அன்னாள் மற்றும் புதுவை தூய இதய அன்னை சபை அருள்சகோதரிகள், ஆசிரிய பெருமக்கள் ஆகியோரின் உறுதுணையோடு இந்த உழவாரப் பணியும் இவ்விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. இவ்வாலயமும் இதன் அருகே உள்ள சலேத் அன்னை திருத்தலமும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களாகும்
Comment