No icon

பாம்பைக் கண்டு ஓடுவதைப் போலப் பாவத்தை விட்டு ஓடிவிடு (சீஞா 21:2)

இளைஞர் உலகம் இளையோர் சந்திக்கும் சூழ்நிலை சார்ந்த பிரச்சனைகள்

இளையோர் சந்திக்கும் பிரச்சனைகளுள் சூழ்நிலை சார்ந்த பிரச்சனை முக்கியமானது. இதனால் தான், ஒரே மாணவன் கட்டுப்பாடுள்ள வளாகத்தில் பயிலும்போது, நல்ல மதிப்பெண் எடுக்க முடிகிறது. அதேவேளையில் எதைச் செய்தாலும் கண்டு கொள்ளாத கல்வி நிலையங்களில் கற்கும்போது படிப்பிலும், ஒழுக்கத்திலும் பின் மாறிப்போவதைப் பார்க்கிறோம். என்றாலும் நல்ல சூழ்நிலை உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் இளையோர் கூட சரியொத்த வயதினர் குழுவின் (Peer Group) தாக்கத்தால் நிலைதடுமாறும் நிகழ்வுகளைக் காண முடிகிறது. சாலமோன் அரசனின் மகன் ரெகபெயாம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு (1அர 12: 1- 20). முதியோர் ஆலோசனைபடி நடவாமல் தனது ஒத்த வயதினர் பேச்சைக்கேட்டு, நடந்ததால் அவன் தனது அரசையே இழந்தது பற்றி ஏற்கனவே எனது “தீர்மானம் செய்தல்” கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்.

பாம்பைக் கண்டு ஓடுவதைப்போல...

விவிலியத்தில் தொடக்க நூல் 39:7-12 வசனங்களில் போத்திபாரின் மனைவி கள்ளங்கபடமற்ற யோசேப்பை கெடுக்க முயலுகிறாள். ஆனால், அவன் அந்த பாவ சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடுகிறான். இதனால் பின்னாளில் அவன் எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாகிறான் (தொநூ 41:41).

தவளையும் தண்ணீரும் கதை நமக்கு தெரிந்ததுதான். ஒரு தொட்டியில் சில தவளைகள் நீந்தி விளையாடுகின்றன. திடீரென்று தண்ணீர் சூடாக்கப்படுகிறது. முதலில் அது வெது வெதுப்பாக இருந்ததால் ஒரு தவளையும் வெளியேறவில்லை. ஆனால், மற்ற தவளைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறி துள்ளி குதித்து தொட்டிக்கு வெளியே விழுந்து தப்பித்துக்கொள்கின்றன. இன்னும் கொஞ்சம் தண்ணீர் சூடாகிறது. இந்த ஒரு தவளை அதையும் தாங்கிக் கொண்டு, தொட்டியில் தங்கிவிடுகிறது. இப்போது தண்ணீர் இன்னும் அதிகமாக சூடாகிறது. தாக்குப்பிடிக்க முடியாத தவளை குதித்து தப்பியோட முயலுகிறது. ஆனால், அதனால் தப்பிக்க முடியாமல் செத்து மிதக்கிறது. இதனால்தான் சீஞா 21:2 இல் பாம்பைக் கண்டு ஓடுவதைப்போல் யோசேப்பைப் போல் பாவத்தை விட்டு ஓடச் சொல்கிறது. ஏனென்றால் பாவத்தின் கூலி சாவாகும் (உரோ 6:23).

சூழ்நிலை பற்றிய கருத்துகள்:

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சூழ்நிலையை ஓர் அரக்கனாகக் காண்கிறார். இன்னொருவர் நாம் சூழ்நிலை கைதிகளாக இருக்கிறோம் என்கிறார். இதேபோல பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஒருவர், சூழ்நிலையின் தாக்கம் பற்றி நாவல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

சூழ்நிலை என்னும் அசுரன்:

ஆங்கில இலக்கியத்தில் தாமஸ் ஹார்டி (Thomas Hardy) என்ற ஒரு பிரபல நாவலாசிரியர் உண்டு. இவரது படைப்புகளில் “திரும்பி வந்த மண்ணின் மைந்தன்” (The Return of the Native) என்ற புகழ்பெற்ற நாவல் உண்டு. இதில் இவர் சூழ்நிலைகள் எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது என எழுதியுள்ளார். இந்த நாவல் “எக்டன் தரிசு நிலத்தின்” (Egdon Heath) பின்புலத்தில் தான் அரங்கேறுகிறது. இங்கு இந்த எக்டன் தரிசு நிலத்தை வெறும் இயற்கை பின்புலமாக அல்ல; மாறாக, ஓர் ஆளாகவே உருவகப்படுத்தி பேசுகிறார். எனவேதான் நாவலை முடிக்கும் போது “எக்டன் தரிசு நிலம் அவமானப்படுத்தப்பட்டு, துன்பங்களை தாங்கிக்கொண்டிருந்தது” (Egdon Heath lay slighted and endured) எனக் கூறுகிறார். அத்தோடு நில்லாமல் இந்த எக்டன் தரிசு நிலம் அந்த நாவலின் கதையம்சம் இன்னும் அதிலுள்ள கதாபாத்திரங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. நாவலிலுள்ள முக்கிய கதாபாத்திரத்தை வெளியே போகவிடாமல் தடுத்துவிடுகிறது. உண்மையில் இந்த நாவலின் ஹீரோ வெளிநாட்டிலிருந்து ஊர்திரும்பிய நிலையில், அவன் மீண்டும் வெளிநாடு செல்வான் என்ற எதிர்பார்ப்பில்தான் அவனை அந்த நாவலின் கதாநாயகி திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், சூழ்நிலைக் கைதியாகிய கதாநாயகனால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதாவது ஜவஹர்லால் நேரு கூறுவது போல, சூழ்நிலை ஓர் அசுரனாக, அரக்கனாகவே இருக்கிறது என தாமஸ் ஹார்டியும் கூறுகிறார்.

இன்று நம்முடைய இளைஞர்களில் பலர் நன்கு படித்திருந்தும் வெளிநாடு செல்ல மனமில்லாமல் தனது வீட்டில், சொந்த இடத்தில் வெது வெதுப்புக்குள் அந்தத் தவளைபோல முடங்கிக் கிடப்பது பரிதாபத்துக்குரியது. “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற வார்த்தைகள் சில இளையோரைத்தான் சென்றடைந்துள்ளன. நிறைய பங்குகளில் இஞ்சினியரிங் படித்த பட்டதாரிகள் கூட சொந்த ஊரை, ஒத்த வயதுள்ள நண்பர்களைப் பிரிந்து செல்ல மனமில்லாமல், ஊரைச் சுற்றி சுற்றியே வருவதைக் காணமுடிகிறது. அவர்களது ஆலோசனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புனித பேதுருவும் சூழ்நிலையும்:

விவிலியத்தில் புனித பேதுரு “சூழ்நிலைக் கைதியாகவே” முதலில் சித்தரிக்கப்படுகிறார். இயேசுவைப்போல் கடல்மீது நடக்க முயன்றபோது, காற்றைக் கண்டு அஞ்சி “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்” எனக் கத்துகிறார் (மத் 14:30). ஒரு பணிப்பெண்ணுக்கு பயந்து இயேசுவை மூன்று முறை மறுதலிக்கிறார் (மத் 26: 69-75). ஆனால், இதே பேதுரு பெந்தகோஸ்தே அனுபவத்திற்கு பிறகு, தூய ஆவி பெருவிழாவிற்கு பிறகு இயேசுவைப்பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது என்று தலைமைச் சங்கத்தினர் கூறியபோது துணிச்சலோடு மறுத்துப்பேசுகிறார் (திபா 4: 18-20). இது அவரது ஆன்மீக வலிமை, ஆவியின் வலிமையால் நடந்தது. இதுவரை சூழ்நிலைக் கைதியாக இருந்த இவர் சூழ்நிலையை தனது கைதியாக்குகிறார். எனவேதான், உலகப்புகழ் பெற்ற கலைஞர் ஜாக்கிசான் “சூழ்நிலை உன்னைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதே. சூழ்நிலை உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்” என்கிறார். செபம், இறைவார்த்தை, தியானம் வழி (திபா 119 : 9) ஆன்மீக வலிமை பெற்றவர்கள் சூழ்நிலை தங்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். விழிப்புணர்வு பெற்று, ஞானத்தோடு நடந்துகொள்ள முடியும்.

நமது சூழ்நிலை ‘கோலியாத்’ போன்ற அரக்கனாக இருந்தாலும் ‘இறைவார்த்தை’ என்ற கவண் கல்லால் அவனை வீழ்த்த முடியும்.

உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு

உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்”

(திபா 119 : 11)

(தொடரும்)

Comment