No icon

குடந்தை ஞானி

ஏலாக்குறிச்சியில் ‘அடைக்கல மாதாவின்’ பிரமாண்ட வெண்கலச் சுரூபம்

திருக்காவலூர் என்றழைக்கப்பட்ட ஏலாக்குறிச்சி தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில், திருமானூர் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இது கும்பகோணம் மறைமாவட்டத்தின் பழமை வாய்ந்த பங்குகளில் ஒன்றாகும். ஏறக்குறைய கி.பி. 1711 ஆம் ஆண்டில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அடைக்கல மாதா ஆலயம் இங்கு உள்ளது. இது திருயாத்திரை தலமாகவும் விளங்குகிறது. ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா திருத்தலத்தின் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இத்திருத்தலத்தின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இத்திருத்தலத்தின் 291வது திருவிழா கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவின் தொடக்கமாக ஆசியாவிலே மிக உயரமான அடைக்கல மாதாவின் வெண்கலச் சுரூபமானது 2022, ஏப்ரல் 30 ஆம் தேதி, சனிக்கிழமை நிறுவப்பட்டது.

18,000 கிலோ எடையுள்ள இச்சுரூபத்தின் உயரம் 53 அடி. ஜெபமாலையின் 53 மணிகளை குறிக்கும் வண்ணமாக 53 அடி உயரத்தில் இச்சுரூபம் உருவாக்கப்பட்டு, 18 அடி உயரமுள்ள பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் ஜெபமாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 380 பகுதிகளாக வார்ப்பு ஊற்றி 12 விண்மீன் முடிகள், ஜெபமாலை, உத்தரியம், காதணியுடன் தமிழ் பெண் அழகின் அமைப்பில் அன்னையின் சுரூபம் உருவாக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

இது குறித்து பங்குத்தந்தை சுவாக்கின், “ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் 2011-ல் இத்திருத்தலத்தில் அடைக்கல மாதாவின் சுரூபத்தை பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும் என திருத்தல நிர்வாகம் முடிவு எடுத்தது. முன்னாள் பங்குத்தந்தை லூர்துசாமி இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலையிலுள்ள ஸ்தபதி பிரவீன் என்பவரிடம் சுரூபத்தை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, பெரும்பொருட்செலவில் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது,” என்று கூறினார். இவ்விழாவில் கும்பகோண மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிசாமி, சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருள்செல்வம் ராயப்பன், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. தொல். திருமாவளவன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comment