குடந்தை ஞானி
இந்திய வானில் பூத்த இன்னொரு விடிவெள்ளி மிக்கேல்பட்டியிலிருந்து UPSC தேர்வில் வென்ற ஏஞ்சலின் ரெனிட்டா ஐஏஎஸ்.
- Author குடந்தை ஞானி --
- Thursday, 09 Jun, 2022
கும்பகோணம் மறைமாவட்டம் பூண்டி மாதா திருத்தலம் அருகே உள்ள மிக்கேல்பட்டி பங்கைச் சேர்ந்த ஏஞ்சலின் ரெனிட்டா அவர்கள் நடைபெற்று முடிந்த மத்திய அரசுப் பணி தேர்வாணையத்திற்கான தேர்வில் இந்திய அளவில் 338 வது இடம்பெற்று தேர்ச்சிப்பெற்றுள்ளார். மிக்கேல்பட்டியில் உள்ள, பாண்டிச்சேரி இம்மாகுலேட் அருள்சகோதரிகள் (FIHM) நடத்தும் 160 ஆண்டுகால பழம்பெரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்விப் பயின்று, பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்களும் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்ச்சிப்பெற்றார். பின்னர் கல்லூரிப் படிப்பை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்தில் பொறியியல் படித்தார். சிறு வயதிலிருந்தே சுனாமி ஏற்படுத்தி தாக்கத்தின் காரணமாக, தான் ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை நினைவாக்க, கடுமையாக உழைத்து, தன் இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 338வது இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இவர்தம் பெற்றோர் ரவி - விக்டோரியா ஆவர். இவர் உடன் பிறந்த அண்ணன் செபாஸ்டின் (எம்.டெக்). புனித மிக்கேல் ஆலய எதிரில் உள்ள இவர்தம் குடும்பம் பக்தியில் சிறந்த குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றிப் பெற்று, தரப்பட்டியலில் 338 வது இடம் பிடித்துள்ள செல்வி. ஏஞ்சலின் ரெனிட்டா அவர்களை ‘நம் வாழ்வு’ வார இதழ் பாராட்டி மகிழ்கிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக செய்த மதவாத அரசியலால் பாதிக்கப்பட்டுள்ள, இப்பள்ளியிலிருந்து இந்திய வானில் பூத்த விடிவெள்ளியாக கிளர்ந்துள்ள ஏஞ்சலின் ரெனிட்டா எல்லாருக்கும் வழிகாட்டும் குன்றின் மேலிட்ட ஒளி விளக்காக ஒளிரவும் சாரமுள்ள உப்பாக இந்த மதச்சார்பற்ற சமுதாயத்திற்கு சுவை கூட்டவும் வாழ்த்தி செபிப்போம்! (இவருடனான நேர்காணல் இனி வரும் இதழில் இடம்பெறும்)
Comment