No icon

ஜூலை 22

குலசேகரத்தில் கல்லூரி மாணவனுக்கு சிறுநீரகம் தானம் செய்த பாதிரியார்

குமரி மாவட்டம் குலசேகரம், நாக கோடு பகுதியை சேர்ந்தவர் சராபின் எட்வின், மேரி சேக்ரட் தம்பதி. இவர்களுக்கு தேன்மொழி, வளன் (19) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். நாகர்கோவில் கல்லூரியில் படித்து வரும் வளவனுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிறுநீரகம் செயல்படவில்லை என்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பெற்றோர் துடியாய் துடித்தனர்.

இதனை அறிந்த சராபின் எட்வினின் அண்ணன் லியோ அலெக்ஸ் (52)  சிறுநீரகம் தானம் செய்ய முன் வந்தார். லியோ அலெக்ஸ் குழித்துறை மறை மாவட்டத்தில் அருள்பணியாளராக உள்ளார். குழித்துறை மறைமாவட்டத்தில் பல்வேறு பங்குகளில் பங்கு தந்தையாக பணியாற்றியுள்ளார். கடைசியாக அம்பலகடை பங்கில் பங்குத்தந்தையாக இருந்துள்ளார்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இவரிடமிருந்த ஒரு சிறுநீரகம் பெறப்பட்டு வளவனுக்கு பொருத்தப்பட்டது. சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிய கல்லூரி மாணவனுக்கு சிறுநீரகம் தானம் செய்து உயிரைக் காப்பாற்ற உதவிய அருள்பணியாளர் லியோ அலெக்சின் தியாகத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Comment