ஆலயத்தின் சிறப்பு
புனித சவேரியாரின் வரலாற்று பாதையில்..
நா மணக்கும்! நல்ல கிறித்துவம் மணக்கும்!
பா மணக்கும்! சவரிபாளையம் ஊர் மணக்கும்!
பார் புகழ் புனித சவேரியார் பேர் மணக்கும்!
இப்புனிதர் கொண்ட இப்பங்கின் வரலாறு
நாலிரு திசைகளில் கிறிஸ்மாவாக மணக்கும்!
சவேரியார்பாளையம்! கொங்கு மண்டலத்தில் கிறிஸ்தவத்தின் தோற்றுவாய் என்றால் அது மிகையன்று. இது இப்பகுதியில் உள்ள பழம்பெரும் கிறிஸ்தவ கிராமம். அழியா உடலுக்கும் மங்காத புகழுக்கும் உரிய மாபெரும் புனித சவேரியாரின் பாதுகாவலில் கி.பி. 1650 ஆம் ஆண்டிலிருந்து, ஏறக்குறைய நானூறு ஆண்டுகாலமாக இயங்கி வரும் பங்கு தற்போது கோவை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள சவேரியார்பாளையம் பங்கு.
அக்காலத்தில் இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் பூர்வீகக் கிறிஸ்தவர்களாவர். இங்கு வாழ்ந்துவரும் இத்தலைமுறையின் முன்னோர்கள், அக்காலத்தில் புனித சவேரியாரால் திருமுழுக்குப் பெற்றவர்கள் என பாரம்பரியம் கூறுகிறது. புனித சவேரியார் மேற்கு கடற்கரை தொடங்கி கிழக்கு கடற்கரை ஈறாக, கடற்கரை கிராமங்களில் தங்கி, கிறிஸ்துவை அறிவித்து, திருமுழுக்குக் கொடுத்து, ஒரு மறைபணியாளராகப் பணியாற்றினார் என்பது நாமறிந்த வரலாறு. அந்த வகையில், தற்போது மேற்கே அமைந்துள்ள அரபிக் கடற்கரையோராக வாழ்ந்த இம்மக்கள் இப்பகுதிக்கு வந்து குடியேறியதாக பாரம்பரியம் கூறுகிறது. பிற்காலத்தில் திப்பு சுல்தான் தனது அரசாட்சியை விரிவாக்கம் செய்யும்பொருட்டு, தற்போது கேரளாவில் உள்ள பாலக்காடு நோக்கிப் தன் படைபலத்தோடு வந்தபோது, அதாவது கி.பி. 1784 ஆம் ஆண்டில் இவ்வூர் வழியாக கடந்த நிலையில், இங்கிருந்த சில கிறிஸ்தவர்களை துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
கோவில்
‘கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது நம் பாரம்பரியம். ஆகையால், இப்பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள், தங்களின் வழிபாட்டிற்காக கி.பி. 1650 ஆம் ஆண்டில் இங்கு ஒரு சிற்றாலயத்தைக் கட்டியெழுப்பி, அதனைச் சுற்றி வாழ்ந்து வந்தனர். புனித சவேரியாரிடம் திருமுழுக்குப் பெற்றவர்கள் என்ற காரணத்தினாலும் அவர் இறந்து சில ஆண்டுகளில் புனிதராக திரு அவையால் அறிவிக்கப்பட்ட காரணத்தினாலும் புனித சவேரியாரின் நினைவாகவே வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களைப் பிற்காலத்தில் வந்த மிஷனரிகள் ஊக்குவித்து அவர்களின் விசுவாசத்தை மேலும் வளர்த்தெடுத்தனர். கி.பி. 1845 ஆம் ஆண்டு மறுபடியும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. கிறிஸ்தவக் குடும்பங்களின் எண்ணிக்கையும் காலப்போக்கில் பல்கி பெருகியது. கி.பி. 1895 ஆம் ஆண்டு தனிப்பங்காக உதயமாகிறது. அப்போதிருந்த புதிய ஆலயத்திற்கு முன்பிருந்த ஆலயம் கி.பி. 1898 ஆம் ஆண்டு தவத்திரு. தெர்ப்பியோன் அடிகளாரால் கட்டப்பட்டது. கி.பி. 1905 ஆம் ஆண்டு ஆலயத்தின் மணிகோபுரம், தவத்திரு. இஞ்ஞாசி நாதரால் கட்டப்பட்டதாகும்.
ஆலயமணி
ஆலய மணியானது தவத்திரு.தெர்ப்பியோன் அடிகளாரின் குடும்பத்தினாரால் பிரான்சிலிருந்து வழங்கப்பட்டது. கி.பி. 1898 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம், கி.பி. 1963 ஆம் ஆண்டு தவத்திரு. ஆ. இருதயம் சுவாமிகளால் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மறைமாவட்ட முதல் குருவானவர்
கோவை மறைமாவட்டத்தின் முதல் குருவாக அருள்தந்தை அருளப்பன் என்று ஒரு செவி வழிச் செய்தி உண்டு. இவர் கி.பி. 1849 ஆம் ஆண்டு, கோவை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு தே. பிரிசில்லாக் ஆண்டகையால் திருத்தொண்டர் முதல் நிலைபட்டம் பெற்று கி.பி. 1857 இல் மேதகு ஆயர் காட்லி அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார் எனவும் இவர் கோவையைச் சார்ந்தவர் என்றும் அன்று கோவை மறைத்தளம் என்றால் சவேரியார் பாளையம் தான் எனக் குறிப்பிட்டுள்ளது. அவ்வகையில் கோவை மறைமாவட்டத்திற்கு - மறைபணி தளத்திற்கு முதல் குருவானவர் இவ்வூரிலிருந்துதான் உருவானார் என்பதே இவ்வூரின் சிறப்புக்கு ஓர் மணிமகுடம்.
மறைமாவட்டம் தந்த முதல் ஆயர்
கோவை மறைமாவட்டத்தின் முதல் தமிழ் ஆயர் மேதகு உபகார சுவாமிகள் ஆவார். இவர் பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த சீரிய எதிர்நோக்கு கொண்டவர். கி.பி.1940 ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவரது மறைவுக்குப் பின் கோவை மறைமாவட்டத்திலிருந்து உதித்திட்ட முதல் ஆயர், தற்போதுள்ள வழக்கில் சொல்ல வேண்டுமானல் மண்ணின் மைந்தர் மேதகு ஆயர் சவரிமுத்து ஆவார். இவர் இந்தப் புகழ்பெற்ற சவேரியார்பாளையம் பங்கில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் திருத்தந்தையால் கோவை மறைமாவட்ட ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயராக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும் ஒரு வருடம் இப்பங்கிலேயே பணியாற்றினார். அந்த வகையில் கோவை மறைமாவட்டத்தின் ஆயரை அடையாளம் காட்டிய பங்கு, இந்தப் புகழ்பெற்ற சவேரியார்பாளையம் பங்கு என்பதே இவ்வூரின் சிறப்புக்கு மேலும் சிறப்பாகம்.
கல்விப் பணியின் முன்னோடியான பங்கு
கல்வியினை இந்தியாவில் அதிகம் விதைத்தவர்கள் கிறித்தவர்கள். அதினும் சிறப்பாக கோவையில் கல்விப் பணிக்கு வித்திட்ட பங்கு சவேரியார்பாளையம் பங்கு என்றால் அது மிகையன்று.
கி.பி. 1946 ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1949 ஆம் ஆண்டுகளில் ஆரம்பப் பள்ளிக்கு இடவசதி செய்து கொடுத்து கல்விக்கு வித்திட்டவர் தவத்திரு. ளு. மரிய ஜோசப் அடிகளார். சுதந்திரத்திற்கு முன்பே, கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு விடியலைத் தரும் ஆற்றல் வாய்ந்தது என்று கல்விக்கு களம் அமைத்து தந்தது இவ்வூர் சவேரியார்பாளையம்.
கி.பி. 1951 - 1955 ஆம் ஆண்டு ஆண்கள் ஆரம்பப் பள்ளிக்கு இட வசதி ஏற்படுத்தி, விரிவாக்கம் செய்தவர் தவத்திரு. ஆ. சிங்கராயர் அடிகளாராவார். அதனைத் தொடர்ந்து கி.பி. 1955 - 1959 ஆம் ஆண்டில் தவத்திரு.G.M.குழந்தைசாமி அடிகளாரால் ஆண்கள் உயர்தர ஆரம்பப்பள்ளி மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கி.பி. 1892 ஆம் ஆண்டிலிருந்து ஒரு ஆரம்பப் பள்ளி இங்கிருந்து வந்தது. பங்கின் பாதுகாவலர் புனித சவேரியாரின் பெயர் அப்பள்ளிக்கு சூட்டப்பட்டிருந்தது. தற்பொழுது, புனித சூசையப்பரின் பெயரால் இப்பள்ளி அழைக்கப்படுகிறது.
புனித பிலோமினாள் பெண்கள் ஆரம்பப்பள்ளி, புனித காணிக்கை அன்னை கன்னியர் பொறுப்பிலிருந்தது. இப்பெண்கள் பள்ளி கி.பி. 1964 ஆம் ஆண்டு புனித சவேரியாரின் பெயரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.
இவ்வாறு கல்வியறிவுடன் ஆன்மீக எழுச்சிப் பணியினையும் கல்விப் பணியோடு இணைந்த நற்செய்திப் பணியினையும் திறம்பட ஆற்றி அறிவினையும், இறைவனின் அருளினையும் கோவை மாநகருக்கு வழங்கி வரும் சிறப்பினைப் பெற்றது இப்பங்காகும்.
அருள்தந்தையர்கள்
ஆன்மீகத் தென்றல் தவழும் இப்பங்கில் பூத்து மணம் வீசிய, மணம் வீசும் அருள்தந்தையர்கள் பதின்மூன்று பேர். இவர்கள் அனைவருமே கோவை மறைமாவட்டத்திற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இவர்களில் நான்கு குருக்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். ஏனைய அருள்தந்தையர்கள் கோவை மறைமாவட்டத்தில் சிறப்பாக அருள்பணியாற்றி வருகின்றார்கள். திருத்தொண்டர் ஒருவர் குருத்துவக் கல்லூரியில் (நல்லாயன்) பயின்று கொண்டிருக்கிறார்.
பக்த சபைகள்
இப்பங்கில் மரியாயின் சேனை, புனித பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபை, இளங்கிறித்தவ தொழிலாளர் இயக்கம், மாதாவின் மைந்தர் சபை, தாய்மார் சபை, உத்தரிய சபை, என சவேரியார் பங்கு மக்கள் புனித சவேரியாரைப் போன்று, ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயனென்ன? என்பதை அறிந்து, ஆன்ம நலனில் அக்கறை கொண்டு, பரந்துபட்ட ஆன்மீகப் பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
வரலாற்று சிறப்பு
இன்றைய ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சத்தியமங்கலம் பகுதியின் ‘கணுவுக்கரை’ என்ற பகுதியினைத் தலைமை இடமாகக் கொண்டு சவேரியார்பாளையம் உள்ளிட்ட பல ஊர்கள் இதன் கிளைப்பங்காக கொண்டு இயங்கி வந்துள்ளது. இருப்பினும் சவேரியார்பாளையமே பங்குத்தந்தையர்கள் தங்கும் பங்காக சிறந்து விளங்கியுள்ளது. அத்தகைய சிறப்புப் பெற்ற பழமையினைத் தாங்கி கோவை மறைமாவட்டத்தில் குறிப்பாக, கோவை மாநகரில் பல பங்குகளைப் பிரசவித்த தாயாம் சவேரியார்பாளையம் பங்கின் புகழ் விண் மட்டும் உயர்ந்து நிற்கும்! புதிய ஆலய கோபுரம் இப்பூமிகோள் நிலை புகழ் கொண்டு நிமிர்ந்து நிற்கும்!
Comment