No icon

சிலுவைகிரி

தமிழக குருசுமலை

கேரளாவைச் சார்ந்த அருட்தந்தை பிலிப் கைப்பன்ப்ளாக்கல் அவர்கள் ஆன்மாவை மையப்படுத்தும் ஆசிரம வாழ்வை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் இயேசுவை அறிந்து கொள்வதும், ஆன்மீக வாழ்வில் வளர்வதும் அதிகமாகும் என நம்பினார். ஐரோப்பாவின் மனமாற்றத்திற்கு அதிக காரணமான புனித ஆசீர்வாதப்பர் மடாலய துறவிகளின் வாழ்க்கையால் ஏற்கனவே ஈர்க்கப்பட்டிருந்ததால், தமிழகத்தில் முதல் ஆசீர்வாதப்பர் ஆசிரமத்தை உருவாக்க சேலம் மறைமாவட்டத்திற்கு வருகை புரிந்து, பல இடங்களை ஆராய்ந்து, இறுதியில் ஆத்தூருக்கு அருகில் கோனேரிப்பட்டி பங்கு, செந்தாரப்பட்டி ஆலயத்தின் அருகிலிருந்து கன்றுக்குட்டி கரட்டை தேர்ந்தெடுத்தார். கேரளா பாலை மறைமாவட்டத்தில் அருட்தந்தையாக இருந்த இவரின் தம்பி ஆபிரகாமும், ஆறு அருட்சகோதரர்களும் இவருடன் சேர்ந்து வந்து கோனேரிப்பட்டி பங்குதந்தை இக்னேஷியஸ் துணையுடன், 28 ஜூலை 1947 ஆம் ஆண்டு, ஆசிரமத்தை துவங்கினர். அன்று சேலம் ஆயர் புரூனியர் அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கிராம மக்களின் துணையுடன் 18 அடி உயர சிமென்ட் கான்க்ரீட் திருச்சிலுவையானது மலையின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு, நிறுவப்பட்டதுஅதனால்தான் அன்றிலிருந்து இந்த மலை சிலுவைகிரி என அழைக்கப்படுகிறது. (இதன் 75 ஆண்டுகள் நிறைவேறிய பவள விழாதான் இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது).

பிறகு, 15 ஜூலை 1951 அன்று ஆத்தூரிலிருந்து 20 அடி உயர திருஇருதய ஆண்டவரின் திருச்சுருபம் கொண்டு வரப்பட்டு, மலை உச்சியில் நிறுவப்பட்டது. மலையடிவாரத்தில் மாதா சுருபமும் வைத்து செபிக்கத் துவங்கினர். கடந்த 30 ஆண்டுகளாக, தவக்காலத்தின் 6 ஆம் வெள்ளிக்கிழமை ஆத்தூர் மறைவட்ட அளவில் குறைந்தது 3,000 பேர் ஆயர் தலைமையில் ஒன்றுகூடி, மலையடிவாரத்தில் திருப்பலி நிறைவேற்றி, மலையேறி சிலுவைப்பாதை செய்து இறையருள் பெற்று செல்கின்றனர்.

2020 ஆம் ஆண்டு பங்குத்தந்தை ஜெய் பெர்னார்ட் ஜோசப் அவர்கள் இம்மலையின் புனிதத்தையும், திருச்சிலுவையின் ஆற்றலையும் உணர்ந்து, தமிழக குருசுமலையாக இவ்விடத்தை அடையாளப்படுத்தி, பல நல்மனிதர்களின் துணையுடன் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்துள்ளார்.

* மலை அடிவாரத்தில் புதியதாக புனித லூர்துமாதா கெபியும், 1000 பேர் அமர்ந்து செபிக்க செப்த்தோட்டமும் கட்டப்பட்டன.

* மாதந்தோறும் 2 ஆம் சனிக்கிழமை செபக்கூட்டமும், திருப்பலியும் நடத்தப்பட்டு அனைவருக்கும் அன்புணவு பகிரப்படுகிறது. ஜாதி, மத வேறுபாடின்றி பலர் கலந்துகொண்டு உடல்நலமும், குடும்ப ஆசீரும், புதுமைகளும் பெற்றதாக சாட்சிகள் அறிவிக்கின்றனர்.

* மலை உச்சிவரை 800 படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பாதைகளில் திருச்சிலுவைப்பாதை நிலைகளும், மலையடிவாரத்தில் கெபியைச் சுற்றி திருச்சிலுவைப்பாதை நிலைகளும், கெத்சமனி தோட்டமும் கட்டப்பட்டுள்ளன.

* மின்சாரம், தண்ணீர், குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளன.

* தவக்காலம் முழுக்க தமிழக குருசுமலை - சிலுவைகிரி அருட்தலத்திற்கு வருகைபுரியும் திருப்பயணிகள் முன்னறிவித்தல் வேண்டிய உணவு, தேநீர், மோர் வசதிகள் செய்து தரப்படுகிறது.

அன்பு உள்ளங்களே, குடும்பமாக, குழுவாக, பங்காக திரண்டு வந்து ஒறுத்தலாக, வேண்டுதலாக, பாவப்பரிகாரமாக மலையேறி திருச்சிலுவைப்பாதை செய்து, இறையருளும், புதுமைகளும் பெற்று செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 94437 98175
YouTube Channel : God is good (Fr. Bernard)

Comment