
“ஏழைகளின் தோழர்”
சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இறை ஊழியர் லூயி மரி லெவே விண்ணகப் பிறப்பின் பொன்விழா
“ஏழைகளின் தோழர்” என்று எல்லாராலும் போற்றப்படும் இயேசு சபைத் துறவி, இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களது விண்ணகப் பிறப்பின் 50-வது ஆண்டு நினைவேந்தல் சிவகங்கை மறைமாவட்டம், சருகணி பங்கில் வெகு சிறப்பாக மார்ச் 21, 2023 அன்று கொண்டாடப்பட்டது. மார்ச் 21-ம் நாள் மாலை 6.00 மணிக்கு சருகணி, திரு இதயங்களின் ஆலய வளாகத்தில் சிவகங்கை மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகி மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம், மதுரை மாநில இயேசு சபைத் தலைவர் அருட்பணி. டெனிஸ் பொன்னையா சே.ச மற்றும் 70 குருக்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள். மேலும் அருட்சகோதரர்கள் பலரும், அருட்சகோதரிகள் ஏறக்குறைய 100 பேரும், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இறைமக்களும் திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருப்பலியைத் தொடர்ந்து தந்தை லெவே விண்ணகப் பிறப்பின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறை ஊழியர் லெவே வாழ்ந்த பங்குப் பணியாளர் இல்லம் அருங்காட்சியகமாக உருவாக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. பொன்விழா நினைவாக ஐம்பது ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தந்தை லெவேயின் பிறரன்புப் பணிகளை நினைவுகூறும் விதமாக அவர் செய்த கல்வி உதவி, மருத்துவ உதவி, உணவு, உடை, தொழில் ஆகியவற்றுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. அருட்பணி. யாகு சே.ச அவர்கள் தந்தை லெவே பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “நம்வாழ்வு-ன் தூதன்” என்ற நூலாக நம் வாழ்வு வெளியீடு தயாரிப்பாக அன்று வெளியிடப்பட்டது. பொன்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அமலவையின் சிவகங்கை மாநில அன்னை அருட்சகோ. லீமா, திரு இருதய மரியன்னை சபையின் மதுரை மாநில அன்னை அருட்சகோ. சபீன் கலந்து கொண்டனர்.
இறை ஊழியர் லெவே அவர்களின் திரு உருவப்பட ஊர்வலம் சருகணி வீதிகளில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் லெவே தின அன்னதானம் வழங்கப்பட்டது. ஏறக்குறைய 7000 பேர் சாதி, மதம் கடந்து சமபந்தியில் கலந்து கொண்டார்கள். இறுதியாக இரவு 10.00 மணிக்கு “லெவே ஒரு சகாப்தம்” என்ற மேடை நாடகம் மதுரை, சருகணி கலைக்குழுவினர்களால் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. தந்தை லெவே விண்ணகப் பிறப்புப் பொன்விழா நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்று, அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தி, அவரது பரிந்துரையை நாடி இறையாசீர் பெற்றுச் சென்றார்கள்.
Comment