
அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்
சிறுபான்மையினரின் பள்ளி சார்ந்த கோரிக்கைகளுக்கான சிறப்புக் கூட்டம்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 03 May, 2023
மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையில் மதச் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை முன்னிறுத்தி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பான பல்வேறு கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன.
இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அருட்தந்தை திரு. இருதயம் அவர்களும், அடைக்கல அன்னை சபையின் தலைமையன்னை அருட்சகோதரி. முனைவர் மரிய பிலோமி மற்றும் கத்தோலிக்கத் திருஅவைகளின் வழக்கறிஞர்கள் அருட்சகோதரி. வைதேகி மற்றும் அருட்தந்தை சவரிமுத்து அவர்களும் சில முஸ்லீம் தலைவர்களும் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் திரு. இனிகோ இருதயராஜ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழகத்தின் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், ஆணையாளர், கல்வித்துறை செயலர் மற்றும் மாண்புமிகு தமிழகக் கல்வி அமைச்சர் ஆகியோர்கள் முன்னிலையில் திறந்த மனதோடு விவாதிக்கப்பட்டன.
1) புதிய சட்டம் வெளிவந்த 13.01.23-விற்கு முன்னர், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆசிரியர் நியமனங்களுக்கும் TET
தகுதித்தேர்வு நிபந்தனையில்லாமல் ஒப்புதல் வழங்குவது.
2) TET தேர்ச்சியில்லை என்பதால், இதுவரை ஊதிய உயர்வு அனுமதிக்கப்படாமல் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வருடாந்திர ஊதிய உயர்வுகளை வழங்குவது.
3) பணிநிரவல்களை அந்தந்த நிர்வாகத்திற்குள்ளேயே தேவையுள்ள இடத்தில் சரி செய்து கொள்வது.
4) 01.01.2011-விற்கு முன் துவக்கப்பட்ட பள்ளிகளுக்கு DTCP ஒப்புதல் தேவையில்லை என்பது.
5) விடுப்புக்காலங்களில் நியமிக்கப்படும் பதிலி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது.
6) கார்ப்பரேட் நிர்வாகத்திற்குள் செய்யப்படும் இடமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கு காலதாமதமின்றி, உடனுக்குடன் ஒப்புதல் வழங்குவது.
7) மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் கடைசிக் கையெழுத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவான 1.6.91 -விற்குப் பிறகு, துவங்ககப்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கு அரசு மானியம் அனுமதிப்பது என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது.
8) ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி, TET தகுதித்தேர்வில் விலக்களிப்பது.
9) ஆசிரியர்கள் நியமனத்திற்கான உச்சபட்ச வயது வரம்பை நீக்குவது.
10) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது. போன்ற கோரிக்கைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இக்கோரிக்கைகளில் பல கோரிக்கைகளுக்கு மிகவிரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் சில கோரிக்கைகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும் என்கிற அறிவிப்பை மாண்புமிகு தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் கூட்டத்தில் அறிவித்தார்கள்.தமிழக அரசு என்ற நிலையில், சிறுபான்மையினரின் பள்ளிகள் சார்ந்த கோரிக்கைகளைக் கேட்பதற்காக உயர்நிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்பது இதுவே முதல்முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Comment