No icon

சமூகக் குரல்கள்

நாளிதழ் வாசிப்பு அவசியம்!

 “தற்காலத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளுமே போட்டித் தேர்வுகள் அடிப்படையில் நிரப்பப்படுவதால், பொது அறிவு என்பது மிகவும் அவசியமானது. நாளிதழ்களை வாசிப்பதால், பொது அறிவு மேம்படுவதுடன், மாணவர்கள் ஒழுக்க நெறிகளுடன் வளரும் சூழலும் ஏற்படும். ஆகவே, நாளிதழ் வாசிப்பைப் பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்குப் பழக்கி விட்டால், அவர்களுக்கு அது உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் பயன் தரும். மேலும், மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதுடன், அரசு அவர்களுக்கு ஊக்கத் தொகை அல்லது உயர் கல்வியில் முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்யலாம்.”

- திரு. எஸ். சிவகுமார், கல்வியாளர்

நீங்களும் சொர்க்கம் செல்லலாம்!

“தமிழரின் அறநெறி நூலான சிறுபஞ்ச மூலம், ஐந்து செயல்கள் செய்பவரெல்லாம் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்று கூறுகிறது.  அந்த ஐந்து செயல்கள் எவை என்றால்...

‘குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து

உளந் தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்

பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்

ஏகும் சுவர்க்கத்(து) இனிது’ (பாடல். 66)

அதாவது, குளம் வெட்டுகிறவன், நீர் வழிந்தோட வாய்க்கால் வெட்டுபவன், பொதுக்கிணறு அமைப்பவன், விளைநிலம் உருவாக்குபவன், மற்றும் மரம் நடுபவன். இவர்கள் ஐந்துபேரும் சொர்க்கம் செல்வது உறுதி என்கிறது தமிழ் அறிவு மரபு.”

- திரு. சு. வெங்கடேசன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

மானுடம் ஒன்றே!

“சமயங்களைப் படிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் மன அழுக்குகள் நீங்க வேண்டும். இதற்குத்தான் சமயங்கள் பயன்பட வேண்டும். கடவுளின் பெயரால் மானுடத்தை வேறுபடுத்தாமல், மண்ணையும், மனிதர்களையும், இறைவனையும், உண்மையையும் நேசிக்க மனிதருக்கு மதம் கற்றுத் தர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று; மானுடம் ஒன்று என அது உணர்த்திட வேண்டும்.”

- பேராசிரியர். சாலமன் பாப்பையா, தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர்

Comment