No icon

சமூகக் குரல்கள்

“பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் வேலையின்மை பிரச்சினை உச்சம் தொட்டுள்ளதைப் புதிய பகுப்பாய்வு முடிவுகள் அம்பலப்படுத்தியுள்ளன. நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை ஒப்பிடுகையில், பணிபுரிவோர் விகிதம் மற்றும் பணிக்கான ஊதியம் குறைந்துள்ளது; இதனால் இளைஞர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன் 4 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் இப்போது 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.”

- திரு. ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் பொதுச் செயலாளர்

“தற்காலத்தில் அனைவரையும் எளிதாக ஒன்றிணைக்கும் கருவியாகத் தொழில்நுட்பங்கள் செயல்படுகின்றன. ஆனால், அதுவே சில நேரங்களில் தேவையற்ற பயம் மற்றும் கவலையை உண்டாக்குகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்கால இளம் தலைமுறையினர் சவால்களைத் திறமையாகக் கையாள்வது என்னை வியப்படையச் செய்கிறது. தோல்விகள் நம் தவறுகளைச் சரிசெய்து கொண்டு, மீண்டும் வெற்றியை நோக்கிப் பயணிக்க உந்துசக்தியாக இருக்கும். எனவே, தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை நல்ல மனிதனாக, தலைவராக மாற்றுவதும், தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நன்மை செய்யத் தூண்டுவதுமே கல்வியின் முக்கிய நோக்கமாகும்.”

- திரு. டி. ஒய். சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

“இன்றைய இளைய தலைமுறையினரின் கவனச் சிதறலுக்குக் கைபேசி முக்கியக் காரணம். இது பெற்றோருக்கு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் தெரியும். அதை அவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட முடியவில்லை என்றாலும், அவர்களைப் பெற்றோர் கண்காணிப்பது அவசியம். குழந்தைகளுக்குப் பிறந்த நாளின்போது புத்தகங்களைப் பரிசாக வழங்க வேண்டும்.”

- திரு. எஸ். ராஜா, பட்டிமன்றப் பேச்சாளர்

Comment