சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Friday, 07 Jun, 2024
“உயர் இரத்த அழுத்தம் குறித்த புரிதல் சமூகத்தில் போதிய அளவு இல்லை. அது தொடர்பான விழிப்புணர்வு மேம்படுவது அவசியம். உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அது நுரையீரலையும், இதயத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். மருத்துவத் தரவுகளின்படி, 24 சதவிகிதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தமும், 10 சதவிகிதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோய் பாதிப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அனைவரும் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டியது அவசியம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களில் உப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, வாழ்க்கை முறை மாற்றமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. நாள்தோறும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா பயிற்சி மேற்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளைத் தடுக்க முடியும். ஏற்கெனவே அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.”
- திரு. ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர்
“அனைத்து அரசு மற்றும் இதர உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க, 2016-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் 32-வது பிரிவு வழி செய்கிறது. பார்வை மாற்றுத் திறன், பார்வை குறைவு, காது கேளாமை, ஆசிட் வீச்சால் பாதிப்பு, தசைச்சிதைவு, பார்க்கின்சன் நோய் என 21 வகை மாற்றுத் திறன்களைக் கொண்டவர்களுக்குச் சலுகைகளை வழங்க சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 40%-க்கும் குறையாத மாற்றுத் திறன்களை உடையவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க சட்டப் பிரிவு வகை செய்துள்ளது. இவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 4% வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு, கல்வி வாய்ப்புகள் என்று வரும்போது முற்றிலும் மாறுபட்டதாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடுகளை ஒன்றுடன் ஒன்று குழப்பக் கூடாது. மேலும், போதிய காரணங்கள் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் கோரும் பாடப் பிரிவுகளை மறுக்கக் கூடாது.”
- திரு. எஸ். நாகராஜன், மாற்றுத் திறனாளி நலத் துறைச் செயலர்
“மழை, வெள்ளம், சூறாவளி காலங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் போதுமான எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசு முன்னறிவிப்புக்கு ஏற்ப பேருந்துகளைத் திட்டமிட்டு இயக்குவதோடு, கடலோரப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள், வானிலை மைய அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். சாலையில் இடதுபுறம் பேருந்தை இயக்கும்போது சாலையை விட்டு அதிக ஓரத்தில் செல்லாமல் மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும். சாலையில் மின்கம்பி ஏதேனும் அறுந்து விழுந்துள்ளனவா? மரங்கள் விழுந்துள்ளனவா? எனக் கவனித்து இயக்க வேண்டும். பேருந்துகளில் உள்ள குறைகளைக் கண்டறிந்து உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். பேருந்து நிலையம், சமூக வலைதளம், தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றில் வரப்பெறும் பயணிகளின் புகார்களைச் சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
- திரு. க. பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறைச் செயலர்
Comment