ஆகஸ்டு 10
திரு அவை கடைப்பிடித்த கறுப்பு தினம்
தலித் மக்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று ஆண்டுதோறும் ஆகஸ்டு 10 -ஆம் தேதி தமிழ்நாடு திரு அவையால் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மத அடிப்படையில் வேற்றுமை காட்டும் சனாதிபதி ஆணை 1950 -இன் பத்தி 3-இன் அடிப்படையில் கடந்த 74 ஆண்டுகளாக, தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் இஸ்லாமியர்களுக்கும் பட்டியலினத்தார் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகள், அரசின் நலத்திட்டங்கள் பெறுதல் ஆகியவற்றில் இம்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2005 - ரெங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமையாலும், உச்சநீதிமன்றத்தில் 2004 முதல் நடைபெறும் SC அந்தஸ்தைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமலும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தைக் கருத்தில் கொள்ளாமலும் தாமதப்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது. எனவே, ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, 1950-சனாதிபதி ஆணை பத்தி எண் 3-ஐ இரத்து செய்து தலித் கிறிஸ்தவர், தலித் இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக, தமிழ்நாடெங்கும் அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் சார்பாக நடைபெற்றக் கண்டனப் போராட் டத்தில் மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் வழிகாட்டுதலில், முதன்மைக்குரு பேரருள்தந்தை குழந்தைசாமி தலைமை தாங்க, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.செ. சிந்தனைச் செல்வன் எழுச்சியுரை வழங்கினார்.
மதுரை உயர் மறைமாவட்டத்தில், முதன்மைக்குரு அருள்பணி. J.R. ஜெரோம் ஏரோணிமுஸ் தலைமை தாங்க, அருள்பணி. சந்தியாகப்பன் வழிநடத்தினார்.
செங்கல்பட்டு மறைமாவட்டத்தில், மேதகு ஆயர் நீதிநாதன் தலைமை வகிக்க, மறைமாவட்ட ஆயரின் பொதுபதில் குரு பேரருள்தந்தை பா. எஸ்தாக்கியூஸ் அவர்கள் முன்னிலையில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலாஜி கண்டன எழுச்சி உரை வழங்கினார்.
தூத்துக்குடி மறைமாவட்டத்தில், மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களும், திண்டுக்கல் மறைமாவட்டத்தில் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களும், கும்பகோணம் மறைமாவட்டத்தில் முதன்மைக்குரு பிலோமின்தாஸ் அவர்களும் தலைமை தாங்கினர்.
திருச்சி மறைமாவட்டத்தில், மேதகு ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு SC/ST பணிக்குழு செயலர் அருள்பணி. நித்திய சகாயம் சிறப்புரை வழங்கினார். இதில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திரு அவை, தென்னிந்தியத் திரு அவை உறுப்பினர்களும், அனைத்துத் திரு அவை அமைப்புகளும், இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டார்கள்.
இதுபோல ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஆயர் அவர்களின் தலைமையில் SC/ST பணிக்குழு செயலர்கள் அறப்போராட்டத்தை வழிநடத்தினார்கள். தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு வழியாக அரசின் சலுகையைப் பெறவும், சட்டப் பாதுகாப்புப் பெற்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசின் உரிமைகளைப் பெறச் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Comment