No icon

கலைமாமணி P.T. செல்லத்துரைக்கு அன்பு அஞ்சலி (1935 - 2019)

கலைமாமணி, சங்கீத வித்வான், இசைக் கலைச்செல்வர், சங்கீத ரத்னா போன்ற அரிய பெரிய பட்டங்களுக்கு உரித்தானவர் அருள் முனைவர். P.T. செல்லத்துரை, சே.ச..
“என் கடைசி மூச்சு நான் பாடும்போது நிகழ வேண்டும்” என விரும்பிய அவர் தன் விருப்பத்தை நண்பர்களிடம் பலமுறை வெளிப்
படுத்தியுள்ளார். ஒரு குருவாயிருந்து தென்னக
இசையிலே பாண்டித்தியம் பெற்றது அவருக்கே உரித்தானது. 
திருச்சியில் பக்தியுள்ள குடும்பத்தில் 16.8.1935-ல் உதித்தவர் அவர் குடும்பத்தில் 3 குருக்கள், இன்னொரு சகோதர குரு சேசு சபையில் முதல்வராய் பல கல்லூரிகளில் பணியாற்றியவர் தந்தை. ஞானரெத்தினம், மற்றவர் அருள்பணி.ஸ்தனிஸ்லாஸ், திருச்சி மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். ஒரு சகோதரி மரியின் ஊழியர் சபையில் பணியாற்றினார். திருச்சி புனித வளனார் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் போதே தேவ அழைத்தலைக் கேட்டு சேசு சபையில் 26.5.1953-ல் நுழைந்தார். சபையில் பல பயிற்சிகள் பெற்ற அவர் 17.3.1967-ல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பல ஆண்டுகள் சபையில் பணியாற்றி 19.6.1998-ல் சபையில் இறுதி வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினார்.
குருத்துவ அருட்பொழிவு பெற்றபின், முதற்கண் தூத்துக்குடி தூய சவேரியார் மேல் நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு இசைப் பயிற்சிக்காக சென்னை சென்றார். அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்து ஆண்டுகள் இசையில் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்தவர் அவருக்குப் பொன் மொழியாக இருந்த கூற்று: 
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன். 
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே!”
அவரது இசை ஆராய்ச்சியில் விளைந்த நூல் - தென்னக இசை வரலாறு. அந்நூல் அரசு இசைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடநூலாக ஆக்கப்பட்டது.
1974-ல், ஐக்கிய ஆலயத்தின் உட்பிரிவாக ஐக்கிய கீதாலயம் தொடங்கப் பட்டது. அதன் நிறுவனராக இருந்து பல ஆண்டுகள் பணியாற்றி யுள்ளார். 1986 - 94 வரை அரசு இசைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றித் தடம்பதித்தார். சென்னை இசைக் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்ட போது புதிய கட்டம் தொடங்கியது. பல தொடர்புகளும், அறிமுகங்களும் உருவாகின. பணிநிறைவு பெற்றபின் அதே கல்லூரியில் இயக்குனராகவும் பணியாற்றினார்.
அருள்பணி. செல்லத்துரை குரு பக்தி மிகுந்தவர். அவர் பயிற்சி காலத்தில் வீட்டுப் பாடம் போல் கற்றுக் கொடுத்தவர் திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் வித்வான். அவரை வானலாவப் புகழ்வார். தந்தையின் அரங்கேற்றத்திற்கு அதிகம் தயாரித்துக் கொடுத்தவர். அரங்கேற்றம் புனித பீட் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்தது. இராசா சர் அண்ணாமலை செட்டியார் தமிழிசை இயக்கத்தை 1941-ல் தொடங்கினார். அந்த இயக்கத்திற்குத் தொடர் முயற்சியளித்து உறுதிப்படுத்தினார் செல்லத்துரை.
திருச்சி கலைக் காவிரி இசைக்  கல்லூரி 1999ஆம் ஆண்டு இவரை இசை இயலராக அறிவித்தது. தமிழ்நாடு அரசு அவருக்குக் கலைமாமணி பட்டம் சூட்டியது. ஆந்திராவில் விஜயவாடா கலாதர்ஷினி நிறுவனம் இவருக்கு இசை ரத்னா பட்டம் அளித்தது. பின்பு அவினாசி லிங்கம் பல்கலைக் கழகமும் கோவை சன்மார்க்க சங்கமும் இணைந்து “இசைக் கலைச் செல்வர்” என்ற பெயர் சூட்டினர்.
மதுரையில் கிறிஸ்தவக் கலை நிறுவனம் “அறிஞர் கலைக் காவலர்” எனும் பெரும் பெயரை
2011-ல் அளித்து மகிழ்ந்தது. திருச்சி கிறிஸ்தவ ஆராய்ச்சி மையம், “தமிழிசைச் செம்மல்” எனும் நற்பெயர் வழங்கி வாழ்த்தியது.
இத்தனை அரும்பெரும் பெயர்களையும், பட்டங்களையும் தாண்டி அவர் சாதித்த பெரும் பணி, கோடை இசைப் பள்ளி. நூற்றுக்கணக்கான மாணவியரை ஆற்றுப்படுத்தி அவர்களுக்கும் ‘கலைமாமணி’ பட்டம் அளித்து இசைப் பண்பாட்டில் வளர்த்து எடுத்துள்ளார். சிறப்பாகக் குருமாணவர்களும் அருள்சகோதரிகளும் இக்கோடைப் பயிற்சியில் விருது வாங்கி தொடர்ந்து அவரவர் நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். 
அதே வேளையில் ஆண்டு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு குழு அமைத்து பங்குகளுக்குச் சென்று தென்னக இசையிலே திருப்பலி முழுவதும் பாடவைத்து மக்கள் மத்தியில் தமிழிசை பற்றி விழிப்புணர்வு ஊட்டியுள்ளார்.
தந்தை. செல்லத்துரை இசையைப் போலவே இனிய குணம் படைத்தவர். குழந்தை மனம் அவரது பேச்சிலும் செயலிலும் பிரதிபலித்தது. இசைப்பணியிலே பெரிய பெரிய ஆசைகளைச் சுமந்து வாழ்ந்தார். அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. கடைசிக்காலம் வரை தனியாகவே பாடிக்கொண்டிருப்பார். திருநாட்களிலும் பொது மேடைகளிலும் பாடி மகிழ்விப்பதற்கு ஆவலாய் இருந்தார். ஓய்வு நேரங்களில் அவரும் அவர் நண்பர், அருள்பணி. மரிய செயராசும் இணைந்து பாடித்திளைத்தனர். அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய பாடல்கள் சுவாமி ஆரோக்கியநாதர் இயற்றிய தென்னக இசைப் பாக்களே. அவர் நெஞ்சத்திற்கு நெருக்கமான பாட்டுக்கள் இரண்டு: 
1.    இயேசுவே உன்னையான் நினைந்திடும் தோறும்,
2.    உன்னையன்றி எனக்கென்ன ஐயா வேண்டும், உன்னிடம் எல்லாம் உள்ளன அன்றோ!
தந்தை இசைமாமணி நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது இசை ஆர்வமும் பணிகளும் இசை ஆர்வலர்களின் உள்ளங்களில் நிலைத்து  வாழும்!

Comment