No icon

-

கிறிஸ்மஸ் : முரண்பாடுகளின் ஒரு கொண்டாட்டம்

கிறிஸ்துபிறப்பு காலம் என்பது மகிழ்ச்சியின் காலம். கிறிஸ்தவத்தில் உயிர்ப்புப் பெருவிழா மிகப்பெரிய விழாவாகக் கருதப்பட்டாலும், கிறிஸ்து பிறப்பு விழாவானது உலகம் முழுவதும் எல்லாராலும் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டத்தில் பல அடையாளங்கள் இருப்பதை நாம் பார்க்கின்றோம். கிறிஸ்மஸ்மரம், கிறிஸ்மஸ் நட்சத்திரம் மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா. பல நேரங்களில் மக்கள் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து செயல்படுவதில்லை. சில நாள்களுக்கு முன்பே கிறிஸ்து பிறப்பு விழாவைக் கனவில் வாழத் தொடங்கிவிடுகின்றனர். இவ்விழாவின் உண்மை யான அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள புனித மத்தேயு, புனித மாற்கு எழுதிய நற்செய்திகளில் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை வாசிப்பது இன்றி யமையாதது. 
இயேசுவின் பிறப்பு நிகழ்வு நமக்கு வாழ்க்கையில் சில முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. அவையே நமக்குச் சிலவற்றில் ஆழமான அர்த்தத்தி னையும் கொடுக்கின்றன. இயேசுவின் வருகை நாம் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது. கிறிஸ்துவ வாழ்வு சில முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதை சில உதாரணங்கள் மூலமாக லூக்கா நற்செய்தியில் இயேசுவின் இளமைப்பருவப் பகுதி யில் இருந்து காண்போம். 
வானதூதர்கள்இயேசுவின் பிறப்பின்போது வானதூதர்கள், சட்ட வல்லுநர்களுக்கோ, பரிசேயர்களுக்கோ, கோவிலில் வழிபாடுகளை வழிநடத்துபவர்களுக்கோ, மோசேயின் திருச்சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்களுக்கோ தோன்றவில்லை. மாறா யூத சமுதாயத்தில் திருடர்கள் என்றும் படிக்காதவர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் எண்ணப் பட்ட ஆடுகளை மேய்க்கும் இடையர்களுக்குத் தோன்றுகிறார்கள். வியப்பு என்னவென்றால் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த மக்களிடம் இறைத் தூதர்கள் அனுப்பப்படவில்லை. மாறாக இதை எதிர் பாராத மக்களிடம் இயேசுவின், மெசியாவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது. இங்கே இருந்து வெளிப்படும் உண்மை என்னவென்றால் வாழ்க்கையில் கடவுள் எல்லா நிலைக்கும் அப்பாற்பட்டவர், வேறுபாடு காட்டாதவர், எல்லாரையும் சமமாகக் கருதுபவர். அவரது அன்பு நிபந்தனையற்றது. சமுதாயத்தில் ஒதுக்கப்படும் மனிதர்களில் அவர் என்றும் இருக்கிறார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். 
இடையர்களின் வயல்வெளியூதர்கள்
யூதர்கள் பாலஸ்தீனத்தை புனிதப் பூமியாகவும், உலகத்தின் மையமாகவும் கருதினார்கள். அந்த புனித பூமியில் எருசலேம் நகரமும், சியோன் மலையும் மையமாக இருந்தன. அதிலும் எருசலேம் நகரத்தில் ஆலயம் மையமாக இருந்தது. அந்த ஆலயத்தில்   கடவுளின் உடன்படிக்கைப் பேழை எங்கே அமைந்திருந்ததோ அந்தப் புனித இடத்தை மையமாக கருதினர்.ஆனால் மெசியாவின் பிறப்பு எருசலேமிலோ, ஆலயத்திலோ இல்லாமல், இடையர்கள் தங்களின்ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்த வயல்வெளியில் அறிவிக்கப்பட்டது. கடவுள் கிறிஸ்துவின் வழியாக எல்லா இடங்களையும்புனிதப்படுத்துகிறார். புனிதத்திற்கும் புனிதமற்றவைக்கும் உள்ள வேறு பாடு இங்கே முறியடிக்கப்படுகிறது. புனிதத்தின் எண்ணமானது மாற்றப்படுகிறது. வானமும், பூமியும் இறைமகன் மெசியா, இயேசுவின் வருகையால் சந்திக்கின்றன. இயற்கையானது கடவுளின் நன்மைத்
தனத்தையும், உலகத்தின் மேலுள்ள அக்கறை யையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறுகிறது. 
இடையர்கள்
இடையர்கள் தங்களின் ஆடுகளுக்கு உணவைத் தேடி பல மைல் தூரம் நடப்பார்கள். மழை
யென்றும் வெயில் என்றும் பார்ப்பதில்லை தங்களுடைய மந்தைகளைத் திருடர்களிடம் இருந்தும், ஓநாய் களிடம் இருந்தும் தைரியமாகக் காப்பாற்றுவார்கள். ஆனால் கடவுளின் மகிமை வானத்தில் வெளிப் படுத்தப்பட்டதும் பயந்தார்கள். அதனால் வான தூதர்கள் அவர்களிடம் அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக் 2:9-11). எங்கே பயம், அன்பு, புரிந்துகொள்ளாமை, கசப்பான மனநிலை, எதிர்மறையான சிந்தனை இருக்கிறதோ அங்கு கடவுளின் பிரசன்னம் இறைமகன் இயேசுகிறிஸ்து வழியாக மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. 
சுற்றி வரிந்து கட்டப்பட்ட துணி
யோசேப்பும், மரியாவும், ரோமானிய அரசர் அகுஸ்து சீசர் கட்டளையின்படி பெயரைப் பதிவுசெய்ய நாசரேத்து ஊரிலிருந்து பெத்லகேம் என்ற ஊருக்கு வந்தார்கள். மரியா கருவுற்றிருந்தார். அந்நேரம்
அவருக்குப் பேறுகாலம் ஏற்பட்டது. சத்திரத்தில் தங்கிட இடம் கிடைக்காததால் மாட்டுத் தொழு வத்தில் அவர்கள் தங்கினார்கள். அங்கு மரியா தன் மகனைப் பெற்றெடுத்து துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார் (லூக் 2:9). இவ்வளவு விரைவாகக் குழந்தை பிறப்பை எதிர்பாராத அவர்கள், துணிகள் பற்றாக்குறை பற்றி கவலைப்படவில்லை. இருந்த துணிகளில் திருப்தி கொண்டார்கள். பல நேரங்களில் நம்மிடம் இருப்பதுபற்றி நினைக்காமல் நம்மிடம் இல்லாதது பற்றிதான் நாம் யோசிக்கிறோம், உண்மையான மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ந்திருப்பதில்தான் இருக்கிறதேயன்றி நாம் என்ன விரும்புகிறோமோ அதைக்கொண்டு இல்லை. அப்படி நம்முடைய எல்லா எதிர்பார்ப்புகளும், தேவைகளும், நிறைவேறும் என்று நினைத்தால் அது நமக்கு மனஉளைச்சலையும், நிம்மதியில்லாத நிலையையும் இறுதியாக கவலையையும்தான் தரும். 
தீவனத்தொட்டி
வீட்டு மிருகங்களுக்கு உணவு போடக்கூடிய தொட்டிதான் தீவனத்தொட்டி. இதில்தான் பிறந்தவுடன் இயேசு கிடத்தப்படுகிறார். மெசியாவாகிய இயேசு மிருகங்களோடு இருந்து மனிதர்களுக்கு உணவாக மாறுகிறார். மிருகங்களுக்குத் தீனிப்போடும் இடம் மனிதர்களுக்கு உணவு அளிக்கப்படும் இடமாக மாறுகிறது. அழிகின்ற உணவின் மத்தியில் அழியா உணவாக இயேசுவை, ‘நானே வாழ்வுதரும் உணவு’ (யோவா 6:35) என்ற அவரது வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. தீவனத்தொட்டி நற்கருணைப் பேழையாக மாறுகிறது. கடவுள் இயேசுவழியாக நமக்கு நிலைவாழ்வு தருகிறார். எனவே கிறிஸ்துபிறப்புக் கொண்டாட்டம் கீழ்க் கண்டவற்றைச் செயல்படுத்த நமக்கு அழைப்புவிடுக்கின்றது. 
1. மனித மாண்பினை மதிக்க வேண்டும். ஏனெனில் மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கிறான். ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்து வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறார்கள். இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும் அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை. ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை (கலா 3:2).
2. புனிதத்திற்கும் சாதாரணத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கப்படுகிறது. கடவுள் உலகில் உள்ள எல்லாவற்றையும் புனிதப்படுத்த நம் நடுவில் வந்தார். அதனால் எல்லாவற்றிலும் கடவுளின் பிரசன்னத்தைப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் கடவுளின் மகிமையைப் பிரதிபலிக்கும் இயற்கையை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
3. கடவுள் நம் நடுவில் இருப்பதால் நம்பிக்கை இல்லாமைக்கு இடம் இல்லை. நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புற்றாலும் கைவிடப்படுவதில்லை, வீழ்த்தப்பட்டாலும் அழிந்துப்போவதில்லை. நம்பிக்கை இல்லாச் சூழ்நிலையில் இருந்து நம்பிக்கைக்குறிய சூழ்நிலைக்கு இயேசு நம்மை இட்டுச்செல்வார். பயத்தில் இருந்து மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், தோல்வி மனப்பான்மையிலிருந்து வெற்றியின் மனப்பாங்கிற்கும் நம்மை அழைத்துச் செல்வார். அவரது பிரசன்னம் நம் நடுவில் நிறைந்திருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும். இயேசு சொல்லுகிறார் “இறையாட்சி உங்கள் நடுவில் இருக்கிறது” (லூக் 17:21)
4. “இருத்தல்” என்பது இருப்பவைகளைவிட மேலானவை. உலகப் பொருள்கள் மட்டும் நமது மனிதத்தேவைகளை பூர்த்தி செய்துவிடமாட்டா. நமது வாழ்வானது கடவுளுடனும், மனிதருடனும் உள்ள உறவு நிலையைக் குறிக்கிறது. நம்மிடம் இருப்பதில் நாம் மகிழ்ச்சி கொண்டு, அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். 
5. இயேசுவே வாழ்வின் ஊற்று, அவரில் “நான் வாழவில்லை மாறாக என்னில் கடவுள் வாழ்கிறார்” (கொலோ 1:20). இறைவார்த்தை மூலமாகவும், அருளடையாளங்களின் மூலமாகவும் குறிப்பாக நற்கருணைக் கொண்டாட்டத்தின் வழியாகவும் அவர் நமக்குத் தினமும் உணவாகிறார். 
Merry  Christmas! Blessed New Year 2019

Comment