கும்பகோணம் மறைமாவட்டம்
புனித வார திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான வழிமுறைகள்
- Author Fr.Gnani Raj Lazar --
- Monday, 06 Apr, 2020
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அவர்களின் சுற்றுமடல்
இறைஇயேசுவில் பிரியமுள்ள பங்கு தந்தையர்களே, குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், வணக்கமும்.
தேசிய பேரிடரான கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்க நமது மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் தொடர்ந்து நமது ஒத்துழைப்பை வழங்குவோம். பல சிரமங்களுக்கிடையிலும் நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பிற்கும் நீங்கள் ஆற்றிவரும் மனித நேய பணிகளுக்கும் நன்றி கூறுகின்றேன். இத்தருணத்தில் வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் நம்மையே நாம் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இவைக் குறித்த அரசு ஆணைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டுமெனவும் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
நமது பாரத பிரதமர் 24.03.2020 அன்று அறிவித்த 21 நாள்களுக்கான ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து நமது புனித வார கொண்டாட்டங்களுக்கான, நமது மறைமாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய கீழ்க்கண்ட வழிமுறைகளை, உரோமையிலிருந்து வந்த, தமிழக ஆயர் பேரவையிலிருந்து வந்த வழிகாட்டுதல்களின்படி அளிக்கின்றேன்.
புனித வார அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் மக்கள் பங்கேற்பு முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.
1.குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறு அன்று குறித்த நேரத்தில், மறைமாவட்ட போராலயத்தில், ஆயர் ஒரு சில அருள்பணியாளர்களோடு திருப்பலி நிறைவேற்றுவார். ஒவ்வொரு பங்கிலும் பங்குப் பணியாளர்கள்தனியாகவோ அல்லது ஒருசில அருள்பணியாளர்களோடு இணைந்தோ திருப்பலி நிறைவேற்றுவார்கள்.
அன்று புனிதம் செய்யப்பட்ட குருத்தோலைகள் சுமூகமானச் சூழ்நிலை ஏற்பட்டதும் இறைமக்களுக்கு அருள்பணியாளர்களால் குறிப்பிட்ட நாளில் வழங்கப்படும்.
2. புனித வாரத்தில் அருள்பணியாளர்களுக்கு நடக்கும் ஒருநாள் சிறப்பு தியானம் நடைபெறாது. ‘சுமூகமான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு குறிப்பிட்ட நாளில் எண்ணெய் மந்திரிப்பு திருப்பலி நடைபெறும்.
3.பெரிய வியாழன்
குறித்த நேரத்தில் மறைமாவட்ட பேராலயத்தில் ஆயர் ஒருசில அருள்பணியாளர்களோடு திருப்பலி நிறைவேற்றுவார்; ஒவ்வொரு பங்கிலும் பங்கு பணியாளர்கள் தனியாகவோ அல்லது ஒருசில அரள்பணியாளர்களோடு இணைந்தோ திருப்பலி நிறைவேற்றுவார்கள். இவ்வழிபாட்டில்
i) பாதம் கழுவும் சடங்கு தவிர்க்கப்பட வேண்டும்.
ii) நற்கருணை இடமாற்றப் பவனி நடைபெறாது.
4. பெரிய வெள்ளி:
குறித்த நேரத்தில் பெரிய வெள்ளிக்குரிய வழிபாடு, ஆயர் அவர்கள் தலைமையில் ஒரு சில அருள்பணியாளர்களின் பங்கேற்போடு மறைமாவட்ட பேராலயத்தில் நடைபெறும். ஒவ்வொரு பங்கிலும பங்குப் பணியாளர்கள் தனியாகவோ அல்லது ஒரு சில அருள்பணியாளர்களோடு இணைந்தோ இவ்வழிபாட்டை நிறைவேற்றுவார்கள். அன்று
i) பொது சிலுவைப்பாதை நடைபெறாது.
ii) திருச்சிலுவை ஆராதனையில் திருச்சடங்கை நிறைவேற்றும் ஆயர்/குரு மட்டும் திருச்சிலுவையை முத்தி செய்வார்.
5. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா:
குறித்த நேரத்தில் ஆயர் அவர்கள் தலைமையில், ஒரு சில அருள்பணியாளர்களின் பங்கேற்போடு மறைமாவட்ட பேராலயத்தில் திருவிழிப்பு திருப்பலி நிறைவேற்றப்படும். ஒவ்வொரு பங்கிலும் பங்குப் பணியாளர்கள் தனியாகவோ அல்லது ஒருசில அருள்பணியாளர்களோடு இணைந்தோ திருப்பலி நிறைவேற்றுவார்கள். இவ்வழிபாட்டில்
i) புது நெருப்பு மந்திரிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
ii) பாஸ்கா திரி பவனியைத் தவிர்த்து, எளிய முறையில் பாஸ்கா திரியைப் புனிதம் செய்து பற்ற வைக்கவும்.
‘iii) பாஸ்கா புகழுரையும், இறைவார்த்தை வழிபாடும் வழக்கம்போல் நடைபெறும்.
iv) திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல் மட்டும் வைத்துக்கொள்ளவும்.
6. 12.04.2020 ஞாயிறு அன்று காலை 08.00 மணிக்கு மறைமாவட்ட பேராலயத்தில் உயிர்ப்பு திருப்பலி மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும்.
இயேசுவின் உயிர்ப்பை உயிராற்றலுள்ள நம்பிக்கையோடு கொண்டாடுவோம். வழியும் உண்மையும் வாழ்வுமாய் இருக்கின்ற ஆண்டவர் துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து நமக்கு விடுதலை தருவாராக!
இறையாசிருடன்,
மேதகு F.அந்தோனிசாமி
குடந்தை ஆயர்
Comment