No icon

அருள்பணி. கரம்பை S..செபாஸ்டியன்

திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் புனித யோசேப்பு

உரோமைத் திருவழிபாட்டு நாள்காட்டியின்படி ஆண்டிற்கு இரண்டுமுறை புனித யோசேப்புக்கு விழா எடுக்கப்படுகிறது. மார்ச் 19ஆம் நாள் “தூயகன்னிமரியின் கணவர்” என்ற பெயரிலும்  மே முதல் நாள் “தொழிலாளர்”  என்ற பெயரிலும் புனித யோசேப்பு  நினைவு கூறப்படுகிறார்.

(அண்மைக் காலமாக “கனவின் புனித சூசையப்பர்“ அல்லது “உறங்கும் நிலை புனித யோசேப்பு“ என்ற பெயரில் விழா எடுக்கப்படுகிறது. இவ்விழாக்களுக்கான ஆதாரங்கள் எவை? என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது)

விவிலியத்தில் புனித யோசேப்பு

புனித யோசேப்புப் பற்றிய பதிவுகள் முதல் மற்றும்  மூன்றாம் நற்செய்திகளின் (மத்தேயு மற்றும் லூக்கா) முதல் இயல்களில் காணக்கிடக்கின்றன. முதலாவதாக எழுதப்பட்டதாகக் கருதப்படும் மாற்கு நற்செய்தியிலோ பவுலடியாரின் 13 மடல்களிலோ புனித யோசேப்புப் பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. யோவான் நற்செய்தியில் இயேசுவின் குடும்பத்தைப் பற்றிக் கூறும்பொழுது “யோசேப்பின் மகன்“ என்ற பதிவு மட்டும் உள்ளது.

நற்செய்தியாளர் மத்தேயு “யாக்கோபின் மகன்” என்று புனித யோசேப்பை அழைக்கிறார் (மத் 1:16). லூக்கா நற்செய்தியின்படி ஏலி என்பவர் யோசேப்பின்  தந்தையாவார் (லூக் 3:23).

தாவீது மற்றும் அவரது வழிமரபினர்களின்  நகரமான பெத்லகேம் புனித யோசேப்பின் பிறந்த ஊர் என்றும் இயேசு பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு தனது தச்சுத் தொழிலின் நிமித்தம் அவர் நாசரேத்திற்குக் குடியேறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நாசரேத்தில்தான் புனித கன்னிமரியை அவர் திருமணம் செய்திருக்க வேண்டும். யூத வழக்கத்தில் முதலில் சட்டப்படியான திருமணம் செய்தபின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே (ஏறக்குறைய ஓர் ஆண்டு) கணவர் தன் மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவ்வாறு புனித யோசேப்பும் புனித கன்னிமரியுடன் கூடி வாழுமுன் அவரது சட்டமுறையிலான கணவராக இருந்தார் (காண்: 2ஆம் ஜான்பால், மீட்பரின் காப்பாளர், 1989, எண் 18). தூய ஆவியால் புனித கன்னிமரியா கருவுற்றிருந்ததை அறிந்த யோசேப்பு அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார் (மத் 1:18-19). (பகிரங்கமாக விலக்கிவிட்டிருந்தால் கன்னி மரியா கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்).

புனித யோசேப்புக்கு ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றி இறைத் திட்டத்தை வெளிப்படுத்தியதாக மத்தேயு நற்செய்தியாளர் மட்டும் பதிவு செய்துள்ளார். முதலில் தன் மனைவி  கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான், அவரை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம் (மத் 1:20) என்று கனவில் அறிந்து புனித யோசேப்பு கன்னிமரியாவைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். அடுத்து இயேசு வின் பிறப்பிற்குப்பின் ஏரோது அரசனால் குழந்தைக்கு ஏற்பட இருந்த ஆபத்து கனவில் அறிவிக்கப்பட்டு  தன் குடும்பத் துடன் புனித யோசேப்பு எகிப்துக் குச் செல்கிறார் (மத் 2:13-14). (புனித யோசேப்பு எகிப்துக்குத் தப்பி ஓடிச் சென்றதாக லூக்கா நற்செய்தி யில் பதிவு இல்லை). இறுதியாக ஏரோது காலமானதும் கனவில் வழி நடத்தப் பெற்று தன் குடும்பத்துடன் எகிப்திலிருந்து நாசரேத்திற்கு திரும்பி வந்து அங்கு வாழ்கிறார் (மத் 2 : 19-23).

12 வயது நிரம்பிய இயேசுவுடன் எருசலேமிற்குத் திருபயணம் சென்றபொழுது காணாமல் போன இயேசுவை மீண்டும் ஆலயத்தில் கண்டதே (லூக் 2: 42-51) புனித யோசேப் பைப் பற்றி நற்செய்தியில் காணப்படும்  இறுதிப்  பதிவாகும். அவர் எப்பொழுது, எந்த சூழ் நிலையில் இறந்தார் என்பது தெரியவில்லை. எனினும் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பே அவர் இறந்திருக்கக் கூடும் என யூகிக்கப்படுகிறது (காண் : யோவா 19:26-27).

கி.பி. 2 ஆம் நூற்றாண்டி லிருந்து 4 ஆம் நூற்றாண்டுவரை புனித யோசேப்பைப் பற்றிப் பல கற்பனை (apocryphal)  நூல்கள் உருவாயின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, “யாக்கோபு நற்செய்தியின் முதல் படிவம்“(Proto - Evangelium of James) மற்றும் “தச்சரான யோசேப்பின் வரலாறு” ஆகும். அவற்றில் புனித யோசேப்பு ஏற்கெனவே திருமணம் செய்து குழந்தை களைப் பெற்றிருந்தார். அவர் களே நற்செய்தியில் கூறப் பட்டுள்ள இயேசுவின் சகோதர சகோதரிகள் (மத் 13:55; மாற் 6:3). பின்னர் செக்கரியா நடத்திய சுயம்வரத்தின்போது புனித யோசேப்பு வைத்திருந்த கோலில் லீலி மலர் மலர்ந்ததை வைத்து புனித கன்னிமரியா அவருக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டார். 111 வயதில் அவர் இறந்தார் என்பன போன்ற கற்பனைக் கதைகள் காணக்கிடக்கின்றன. ஆனால் அவற்றைத் திருஅவை ஏற்றுக் கொண்டதில்லை.

புனித யோசேப்புக்கு விழாக்கள்

புனித யோசேப்பு ஒரு “நீதிமான்” (மத் 1:19), புனிதகன்னி மரியாவின் பிராமாணிக்கமுள்ள கணவர், இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்ற விவிலிய ஆதாரங்களை அடித்தளமாகக் கொண்டு திருஅவையில் அவருக்குப் பக்தி வணக்கம் உருவாயிற்று. 1479 இல் திருத்தந்தை 4 ஆம் சிக்ஸ்துஸ் ஆணைப்படி மார்ச் 19ஆம் நாள் உரோமைத் திருவழிபாட்டு நாள்காட்டியில் புனித யோசேப்பின் விழா இடம் பெற்றது. இது “புனித கன்னிமரியின் கணவரான புனித யோசேப்பு” என்ற பெயரில் இன்றுவரை பெருவிழாவாகக் (solemnity) கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்பட்டுவருகிறது.

1870இல் புனித யோசேப்பு “அனைத்துலகத் திருஅவையின் ஆதரவாளர்“ (Patron of the Universal Church) என்று திருத்தந்தை 9ஆம் பயஸ் அறிவித்தார். 20 ஆம் நூற்றாண்டில் தீவிரமடைந்த பொதுவுடைமைக் கொள்கையையும் அதைச் சிறப்பிக்க உருவான மே தினத்தையும் எதிர்கொள்ளும் பொருட்டு மே முதல் நாளில் “தொழிலாளரான புனித யோசேப்பு” என்ற விழாவைத் திருத்தந்தை 12 ஆம் பயஸ் 1955ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். தொடக்கத்தில்  பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட அந்நாள் 1969இல் விருப்ப (கட்டாயமற்ற) நினைவாக (optional memorial) மாற்றப்பட்டது. அவ்வாறே அது இன்றைய திருவழிபாட்டு நாள்காட்டியிலும் குறிக்கப்பட்டுள்ளது. 

1962ஆம் ஆண்டு 2ஆம் வத்திக்கான் சங்கம் நடந்தபொழுது திருத்தந்தை 23 ஆம் ஜான் புனித யோசேப்பின் பெயரை திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் சேர்த்தார். 2013இல் திருப்பலியின் 2, 3 மற்றும் 4 ஆம் நற்கருணை மன்றாட்டுகளிலும் அவரது பெயர் திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயத்தால் சேர்க்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிசின் புதுப் பக்திமுறை

2013 மார்ச் 13ஆம் நாள் உரோமை ஆயராகத் தேர்வு செய்யப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் 6 நாள்களுக்குப்பின் மார்ச் 19ஆம் நாள் தூய கன்னிமரியின் கணவரான புனித யோசேப்பின் பெருவிழாவன்று தனது பணியைத் தொடங்கினார். அதிலிருந்து அவர் புனித யோசேப்பிடம் தனி பக்தியுள்ளவர் என்பதனைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

2015 ஜனவரி 16ஆம் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் குடும்பங்களுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையில், குடும்பங்கள் கனவு காண வேண்டும், ஆண்டவர் இயேசுவின் அழைப்பைத் தெரிந்துகொள்ளச் செபத்தில் இளைப்பாறுதல் வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து தனது தனிப்பட்ட (““very personal””)அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்: ”எனது மேசையில் உறங்கும் நிலையில் புனித யோசேப்பின் திருவுருவம் ஒன்று உள்ளது. உறங்கும் வேளையிலும் அவர் திருஅவையைப் பாதுகாக்கிறார். அதனால் எனக்குப் பிரச்சினையோ சிரமமோ  ஏற்படும்பொழுது ஒருகுறிப்பு எழுதி அவரது திருஉருவத்தின் கீழே வைத்துவிடுவேன். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், இந்தப் பிரச்சினைக்குச் செபிக்கவும் என்று அவரிடம் சொல்வேன்”.

மேற்சொன்ன உரையில் “உங்களுக்கும் பிரச்சினைகள் வரும்போது அவற்றை நீங்களும் துண்டுக் காகிதத்தில் எழுதி உறங்கும் புனித யோசேப்பின் திருவுருவத்தின் கீழ் போடுங்கள்” என்று திருத்தந்தை கூட்டத்தில் கூறவில்லை. ஆனால் அவர் அப்படிக் கூறியதாக மேற்கோள்காட்டி கனவின் / உறங்கும் நிலை புனித யோசேப்பின் பக்தியை ஒருசிலர் தீவிரமாகப் பரப்பி வருவதாகத் தெரிகிறது. இவர்களில் ஒருசிலர் புனித யோசேப்பு படுத்திருந்து கனவு காணும் திருவுருவத்தையும் வேறு சிலர் அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு கனவு காண்பது போன்ற திருவுருவத்தையும் அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட அனுபவத்தை 2016 நவம்பர் 29ஆம்  நாள் உரோமையில் நடந்த ஆண் துறவிகளின் உயர் தலைவர்கள் கூட்டத்தில் பேசியபோதும் திருத்தந்தை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டார்: “எனது நிம்மதியான உறக்கத்திற்கு நான் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, பிரச்சினைகளை ஒரு துண்டுத் தாளில் எழுதி உறங்கும் புனித யோசேப்பின் திருவுருவத்தின்கீழ் போட்டுவிடுவேன். இவ்வாறு அவர் காகிதத் துண்டுகளின் மெத்தையில் உறங்குகிறார். நான் நன்றாகத் தூங்குகிறேன். இது இறை அருள்!” இவ்வாறு கூறிவிட்டு “உங்களுக்குப் பிரச்சினைகள் வரும்போது அவற்றை நீங்களும் துண்டுக் காகிதத்தில் எழுதி உறங்கும் புனித யோசேப்பின் திருவுருவத்தின்கீழ் போடுங்கள்” என்று திருத்தந்தை கூறியதாக எந்த அறிக்கையும் இல்லை.

உறங்கும் நிலை புனித யோசேப்பின் பெயரில் ஆலயம்

“உறங்கும் நிலை“ அல்லது “கனவின்” புனித யோசேப்பின் பெயரில் ஒருசிலர் ஆலயங்களும் எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஓர் ஆலயத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டுமென்ற விதிமுறையைத் திருஅவை வகுத்துள்ளது அதன் படி ஆலயத்திற்கு வைக்கப்படும் புனிதரின் பெயர் உரோமை மறைச்சாட்சியர் பட்டியலில் அல்லது உரிய ஒப்புதல் பெற்ற பிற்சேர்க்கை ஒன்றில் பதிவிடப்பட்டிருக்க வேண்டும் (காண்: திருவழிபாடு மற்றும் ஒழுங்குமுறைப் பேராயம், ஆலயம் மற்றும் பீடத்தை அர்பணிக்கும் சடங்கு நூல், 1977, எண் II, 4).

ஆனால் “உறங்கும் நிலை புனித யோசேப்பு“ அல்லது “கனவின் புனித சூசையப்பர்“ என்ற பெயர் திருஅவையின் அதிகாரபூர்வமான ஆவணங்கள் எதிலும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. எனவே திருத்தந்தை பிரான்சிஸ் “உறங்கும் நிலை” புனித யோசேப்பிடம் கொண்டிருப்பது அவரது தனிப்பட்ட பக்திமுறையே அன்றி அனைத்துலகத் திருஅவைக்கும் அவர் வழங்கிய அறிவுரை என்று ஏற்பதிற்கில்லை. ஏனெனில்  ஒருவரது தனிப்பட்ட பக்தி முயற்சி அவருக்கு ஏற்றதாக இருக்கலாம். அதுவே மற்றவருக்கு ஏற்றதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முடிவுரை

“புனித கன்னி மரியாவின் கணவர்” என்றும் “தொழிலாளர்” என்றும் புனித யோசேப்புக்கு முந்தைய திருதந்தையர்கள் விழாக்களை ஏற் படுத்தியிருப்பதுபோல “கனவின்” அல்லது “உறங்கும்நிலை“ புனித யோசேப்பு” என்ற பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ் விழா ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. அதே பெயரில் ஆலயம் எழுப்புவதற்கும் திருஅவையின் அதிகாரபூர்வமான ஆவணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அதை வெளியிடுவது உகந்தது.

Comment