தமிழக மீனவர் உரிமைக்கூட்டமைப்பு
முள்ளூர்த்துறை கடற்கரை கிராமத்தில் காவல்துறை அத்துமீறல்
;குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீது காவல்துறை அத்துமீறல் மாநில மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட தமிழக மீனவர் உரிமைக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். சி.சே.இராசன் விடுத்துள்ள அறிக்கையில்,
கொரோனா ஊரடங்கால் மீளமுடியாத ஏழ்மைக்கு மீனவ மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழலில் கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்த்துறை கடற்கரை கிராமத்தில் நடந்த காவல்துறையின் அத்துமீறல்கள் நம் நெஞ்சங்களை பதபதைக்க வைக்கிறது.
அதற்கு முன்னதாக முள்ளூர்துறையில் நடந்தது என்ன? என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம். முள்ளூர்துறை கடற்கரைக் கிராமமானது முன்சிறை ஒன்றியத்தில் உள்ள புதுக்கடை காவல்நிலைத்திற்கு உட்பட்ட பகுதி. 500க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்களை உள்ளடக்கியது. இங்குள்ள அனனவரும் கத்தோலிக்க கிறித்தவ மதத்தை சார்ந்தவர்கள். அனைத்து குடும்பங்களும் மீன்பிடித் தொழிலில்தான் ஈடுப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து கடல் தொழிலுக்கு யாரும் செல்லவில்லை. அரசு வழங்கிய 1000 ரூபாயும், ரேசன் கடையில் வழங்கிய பொருட்களும் மட்டுமே அவர்கள் நிவாரண உதவியாகப் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களுக்கு சில நாட்களின் தேவையை மட்டுமே நிவர்த்தி செய்தது. கொரோனா இழப்பை விட பசியாலும்,காவல்துறையின் சித்தரவதையாலும் இழப்புகள் அதிகமாகி விடுமோ என்கிற அச்ச சூழல் தமிழகம் முழுவதும் இப்போது உருவாகியுள்ளது.
ஊரடங்கு ரோந்துக்காக வந்த காவல்துறையினர் கடந்த .24ஆம்தேதி இரவு வீட்டிற்கு வெளியே குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த செல்வம் என்பவரை அடித்து வண்டியில் ஏறுடா என மிரட்டியிருக்கின்றனர். அதன் பின் அவரது மனைவி காவல்துறையினரைக் கை எடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுது அவரை மீட்கிறார்.
அதேப்போன்று 25 ஆம்தேதி காலை 9 மணி அளவில் பிரபு(34)என்பவர் கையில் காயக்கட்டுடன் கிரிக்கட் மட்டை ஒன்றை கையில் வைத்து இருக்க ரோந்து வந்த காவல்துறை அவரை அடித்து அவரது காயத்தை மேலும் அதிகப்படுத்தினர். கிரிக்கெட் மட்டையையும் பறித்து சென்றனர். அதைப்போன்று பிரவீன்(30)என்பவர் அவரது வீட்டு அருகில் நின்றுக்கொண்டிருந்தப்போது அவரையும் லத்தியால் அடித்து காயப்படுத்தினர். அதன்பிறகு அன்று மாலை 5மணி அளவில் புதுக்கடை சார்பாய்வாளர் இளங்கோ தலைமையில் வந்த போலீசார் வீட்டின் வெளியை நின்று கொண்டிருந்த ஜெர்சன் (30) என்பவரை இங்கு ஏன்டா நிக்கிற என கேட்டு லத்தியால் அடிக்க அவரது செல்போன் கீழே விழுந்திருக்கிறது. அதை எடுக்க விடாமல் காலை வைத்து மிதித்து தள்ளிவிட்டு வண்டியில ஏறுடா என இழுத்து சென்றனர். இதனால் மக்கள் பதட்டமடைய அங்குள்ள ஆலயத்தின் பங்கு தந்தை கிறிஸ்துராஜ் அவர்கள் தலையிட்டதின் அடிப்படையில் ஜெர்சனை வண்டியில் இருந்து இறக்கி விடுகின்றனர். இதுப்போன்ற தொடர் நிகழ்வுகளால் காவல்துறையினர் மீது கிராமமக்களுக்கு பெரும் கோபம் ஏற்படுகிறது.
தொடர்ந்து ஊருக்குள் சென்று கிராம மக்களை காவல்துறையினர் விரட்டியப்போது ஏன் இப்படி அநீயாயமா எங்களை அடிக்கிறீங்க என பெண்கள் காவல்துறையினரிடம் எதிர் கேள்வி கேட்க காவல்துறையினர் பெண்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசி அவர்களை அவமானப்படுத்தியதோடு விரட்டி அடித்துள்ளனர். இதனால் மக்கள் பயந்து கோவில் மணியை அடித்துள்ளனர். கோவில் மணி சத்தம் கேட்டு ஊரில் உள்ள மக்கள் அனைவரூம் திரள காவல்துறையினரும் இன்னும் அதிகமான காவலர்களை வரவழைத்துக் கொண்டு மக்களை லத்தி கம்பால் அடித்து விரட்ட ஆரம்பித்துள்ளனர். இந்நேரத்தில் காவல்துறையினரின் வாகனத்தின் மேல் சில கற்கள் வீசப்பட்டுள்ளன..அங்கிருந்த போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளிடம் சம்பவத்தை கூற குளச்சல் ஏ.எஸ்.பி விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் டெல்டா சிறப்புபடை போலிசார் பெரும் எண்ணிக்கையில் வந்திருங்கி மக்களை சரமாரியாக அடித்து விரட்ட ஆரம்பித்துள்ளனர். கிராமத்திற்குள் உள்ள வீட்டிற்குள் புகுந்து வீடுகளில் இருந்த டி.வி. மிக்சி, பீரோ, கிரைண்டர், மின்விசிறி மற்றும் அனைத்து சமையல் பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொருட்கள் பெரும் அளவில் சேதம் அடைந்துள்ளன. ஜான்மேரி என்பவர் வீட்டில் இருந்த40ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பணிபிச்சை வீட்டில் திருமணத்திற்காக சேகரித்து வைத்திருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன என்கின்றனர் ஊர்மக்கள்.
மக்கள் காவல்துறைக்கு பயந்து ஓடியப்போது காவல்துறையினர் சீஜன், ஸ்டான்லி, நெலேஸ், வர்க்கீஸ், லாரன்ஸ், ரார்பின், லூயிஸ், பெல்கீஸ், சீலன் ஆகியோரை அடித்து வண்டியில் ஏற்றியுள்னர். அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேஸ்குமார் தகவலறிந்து கிராமத்திற்கு விரைந்துவந்து ஏ.எஸ்.பியிடம் பேசிய பிறகுதான் வீடுகளை ரெய்டு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் 9 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் .ஏ.எஸ்.பி இரவு 10மணி வரை கிராமத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு இரவு 12மணியளவில் போலீசார் மீண்டும் கிராமத்தில் புகுந்து 4பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து சித்தரவதை செய்து காயப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு அதிகாலை 2மணியளவில் புதுக்கடை காவல்நிலையத்தில் இருந்து கிராம நிர்வாக கமிட்டி சந்திரன் அவர்களுக்கு தொலைபேசி பண்ணி 6பேரை மட்டும் கைது செய்துள்ளோம் மற்ற 7 பேரையும் அழைச்சிகிட்டு போங்க என செல்லியுள்ளனர். அதன் பிறகு ஊர் கமிட்டியை சார்ந்தவர்களும், பங்கு பணியாளரும் சென்று அவர்களை அழைத்து வந்துள்ளனர். போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட நபர்கள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சரியாக நடக்கமுடியாத சூழ்நிலையில் இருந்துள்ளனர். புதுக்கடை சாயர்பாய்வாளர் இளங்கோ அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 31 ஆண், பெண்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
27ஆம்தேதி மாவட்ட காவல் துறைக்கண்காணிப்பாளரை சட்டமன்ற உறுப்பினர்கள். முள்ளுர்துறை கிராம கமிட்டி,கடலோர அமைதிக்குழுவினர ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இனிமேல் காவல்துறையினரால் கிராமத்தில் எந்த தொந்தரவும் இருக்காது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
கோரிக்கைகள் ;
முள்ளுர்துறை சம்பவம் காவல் துறையானது மீனவமக்கள் மேல் நடத்திய மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இவ் வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக எடுத்து விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
*தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் காவல்துறையானது ஊரடங்கு உத்தரவை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதனால் மக்கள் சித்தரவதைக்குளாகியும்,
வீடுகளில் இருந்த பொருட்கள் சேதாரப்படுத்தப்பட்டும், நகை மற்றும் பணங்களை இழந்தும் உள்ளனர். அதனால் அரசு உடனடியாக விசாரணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்தி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
*கொரோனா தொற்றுநோயால் மக்கள் அவதியுறும் இக் காலத்திலும் இதுபோன்ற பிரச்சனைகளை மதச்சாயம் பூசி பிரச்சனையை திசை திருப்ப நினைக்கும் வகுப்புவாதசக்திகள் மேல் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*காவல்துறையினரால் அச்சத்தில் இருக்கும் முள்ளுர்துறை மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக பார்த்து அவர்களுக்கு நம்பிக்கையும் அவர்கள் வாழ்வாதரத்திற்கு உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.
*முள்ளுர்துறை மக்கள் மேல் போடப்பட்டுள்ள வழக்கை அரசு வாபஸ் பெற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது மாலட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முள்ளுர்துறை மீனவமக்களுக்காக மாவட்ட காவல்துறையிடம் ஒன்று சேர்ந்து முறையிட்டதை மீனவர் உரிமைக்கூட்டமைப்பு பெரிதும் பாராட்டுகிறது. அதேப்போன்று பாராளுமன்ற உறுப்பினரும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட முள்ளூர்துறை மக்களுக்கு நம்பிக்கையும், நீதியும், ,நிவாரணமும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
*காவல் துறை மக்களை பாதுகாக்க தானே தவிர அடித்து துன்புறுத்துவதற்கு அல்ல . முள்ளூர்துறையில் அடித்தது முதல் சம்பவம் அல்ல. . தமிழகம் முழுக்க இதேமாதிரி பலரை போலீசார் தாக்கி வருகிறார்கள். அதனாலதான் லத்தி பயன்படுத்த வேண்டாம்னு அவர்களுக்கு அறிவுறுத்தல் வந்தது., மட்டுமில்ல மக்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள் என கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது . அதை பின்பற்றாததால் வந்த வினையே முள்ளூர்துறை சம்பவம்
முள்ளூர்துறை மீனவர் கிராமத்திலிருந்து காவல்துறை உடனடியாக வெளியேற வேண்டும்! தொடர்ந்து காவல்துறையினர் ஊருக்குள் வந்து காவல்துறை வாகனத்தை கல்லால் எறிந்தவர்கள் இவர்கள்தான் எங்களிடம் ஆதாரம் உள்ளது என காவல்துறை எடுத்த வீடியோவை காண்பித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காவல்துறை அடித்ததிற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்டு மக்களை மேலும், மேலும் அச்சுறுத்தி வருகின்றனர். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு காவல்துறையினர் ஊருக்குள் வந்து அமைதியை சீர்குலைக்கும் முயற்சியையும், தடயங்களை அழிக்கும் முயற்சியையும் எடுத்து வருகின்றனர்.. அதுவும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
Comment