No icon

பணி.ஸ்டேன்லி ராபின்சன்

புலம் பெயரும் மனித குலம்

தொழிலாளர் புலம் பெயர்வு‘தொழிலாளர் புலம் பெயர்வு’ என்பது அனைத்து நாடுகளிலும் பரவலாக நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். இன்று 192 மில்லியன் மக்கள், தங்கள் பிறப்பிடத்தை விட்டு வெளியே பிற இடங்களில் வசிக்கிறார்கள். இது மக்கள் தொகையில் 3 விழுக்காடு ஆகும். எனினும் அனைத்து வகையான மனித இடம்பெயர்வும்  ‘புலம் பெயர்தல்’ என்று கூற முடியாது. இந்தியாவில் கிராமப்புற, நகர்ப்புற ஆண் பெண் என்ற வேறுபாட்டுடனான 29 விழுக்காடு மக்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். புலம் பெயர்வுக்கு பல காரணங்கள் உண்டு. வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்வது என்பது மனித வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாகும். மக்கள்தொகை பெருக்கம், அரசியலின் உறுதியற்ற தன்மை, உள்நாட்டு போர்கள், போதாக்கல்வி, வேலையின்மை போன்றவை புலம் பெயர்வுக்கான சில காரணங்களாகும். இவையனைத்திலும் வேலையின்மைதான் முதன்மையான காரணமாக உள்ளது. மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் வேலைக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் அல்லது வேறு இடங்களில் இதைவிட சிறந்த வாய்ப்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக புலம் பெயர்வுக்கு தூண்டப்படுகிறார்கள். இவ்வாறு புலம் பெயரும்  மக்கள் அதிகப்படியான பணிநேரம், மோசமான பணிபுரியும் மற்றும் வசிக்கும் சூழல்கள், சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்படுதல், அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலை போன்ற இன்னல்களுக்கு உள்ளாகுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் நான்கில் மூன்று வீடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான தொழிலாளர் நலச் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறை படுத்தப்படுவதில்லை என்பதால் பல சவால்களை இவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

புலம் பெயர்வு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அரசியல் அல்லது நிர்வாக பகுதியை கடந்து செல்வதாகும். இதில் அகதிகள், இடமாற்றம் செய்யப்பட்டோர், அப்புறப்படுத்தப்பட்டோர், மற்றும் பொருளாதரத்தில் நலிவடைந்தோர் அடங்குவர். ஒருவர் தாம் வசிக்கின்ற இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு  அல்லது நிரந்தரமாக புலம் பெயரலாம். இதில் பலவகை தன்னார்வ இடம்பெயர்வும் அடங்கும்.

ஒரு குடும்ப உறுப்பினரின் தற்போதைய இருப்பிடம் முன்னைய வழக்கமான வசிப்பிடத்தை விட மாறுபட்டதாக இருப்பின் அவர் புலம் பெயர்ந்தவர் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார். உலகளாவிய தொழிலாளர் அமைப்பு, ‘புலம் பெயர் தொழிலாளர்’ என்பவர், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வேலைக்காக அல்லது தனிப்பட்ட காரணத்திற்காக செல்பவர் என்று குறிப்பிடுகிறது. இதில் வேலைக்கென வழக்கமாக தேர்ந்தெடுக்கப்படுபவரும் அடங்குவர். நாட்டின் எல்லையில் பணியாற்றுவோர், கடற்படையினர், குறைந்த காலத்திற்கு தங்கும் நோக்குடன் உட்புகும் தாராளமயமாக்கப்பட்ட தொழில்கள் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் இதில் உள்ளடக்கப்படுவதில்லை (ILO,1949)

  • புலம் பெயர்வு என்பதில் பல வகையுண்டு. (குடிப்பெயர்வு என்பது ஒரு நாட்டைவிட்டு குடிபெயர்ந்து வெளிநாட்டில் குடியமர்தல் ஆகும்..குடிநுழைவு என்பது புதிய நாட்டிற்கு செல்வதாகும்.)
  • உட்புற புலம் பெயர்வு என்பது ஒரு மாநிலத்திற்குள், நாட்டினுள் அல்லது கண்டத்திற்குள் புதிய இருப்பிடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதாகும்.
  • வெளிப்புற புலம் பெயர்வு என்பது வேறு மாநிலம், நாடு அல்லது கண்டத்தில் புதிய இருப்பிடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதாகும்.crying
  • தன்னார்வமற்ற அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட புலம் பெயர்வு என்பது ஒரு பகுதியில் உள்ள பெரிய மக்கள் குழுவை> அரசு>  இனம் அல்லது சமயம் அடிப்படையில் கட்டாயப்படுத்தி அப்பகுதியிலிருந்து புலம் பெயரச் செய்வது ஆகும்.
  • தூண்டப்பட்ட புலம் பெயர்வு என்பது போர்,அரசியல் பிரச்சனைகள் அல்லது சமய துன்புறுத்தல் போன்ற விரும்பத்தகாத சூழல் காரணமாக, தனி நபர் தன் பகுதியைவிட்டு செல்வது ஆகும்.
  • படி புலம் பெயர்வு என்பது ஒரு மனிதன் தன் பிறந்த இடத்தை விட்டு புறப்பட்டு தொடர்ந்து சிறிது கால இடைவெளியில் படிப்படியாக இடம் பெயர்ந்து இறுதியாக ஒரு இடத்தில் நிரந்தரமாக குடியமர்வது . எடுத்துக்காட்டாக,பண்ணையிலிருந்து ஒரு கிராமத்திற்கு, பின் ஒரு நகரத்திற்கு இறுதியாக ஒரு பெரிய நகரத்திற்கு சென்று அங்கேயே தங்கிவிடுவது ஆகும்.
  • சங்கிலி புலம் பெயர்வு என்பது ஒரு குடும்பத்திற்குள் அல்லது வரையரை செய்யப்பட்ட குழுக்குள் நடைபெறும் தொடர் புலம் பெயர்வு ஆகும். முதலில் ஒரு குடும்ப உறுப்பினர் புதிய இடத்திற்கு புலம் பெயர்ந்து, பின்பு பணம் அனுப்பி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை தன்னிடத்திற்கு வரவழைத்துக் கொள்வது ஆகும்.

    

உட்புற புலம் பெயர்வு, இந்தியாவில் முதலில் வேலை மற்றும் திருமண காரணமாக தூண்டப்பட்ட இடம்பெயர்வாக இருந்தாலும் இது புலம்பெயர்வோர் புறப்படும் மற்றும் அடையும் பகுதிகளின் பொருளாதார, சமூக, அரசியல் வாழ்வை வடிவமைக்கிறது. தற்போது இந்த உட்புற புலம் பெயர்வு, குறிப்பாக வளரும் நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணி என அங்கீகரிக்கப்படுகிறது. பத்தில் இரண்டு இந்தியர்கள் மாவட்டம் அல்லது மாநில எல்லைகளை கடந்து செல்லும் உட்புற புலம் பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். இது 1.2 பில்லியன் மக்களை கொண்ட நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க விழுக்காடு ஆகும். இத்தொழிலாளர்கள், கல்வி, வருமான நிலை, திறமைகள் மற்றும் சாதி-சமய- குடும்ப உறுப்பினர்தொகுப்பு, வயது மற்றும் இதர பண்புகளில் பல்வேறுபட்ட தர நிலையில் உள்ளனர். இதைக் குறித்த தற்போதைய நிலையை நாம் கண்டுணரும்படியான நாடு தழுவிய புள்ளி விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆயினும் நுண்கணக்கெடுப்பின்படி பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் குறிப்பாக பாதி நிரந்தர, மற்றும் தற்காலிக புலம் பெயர் தொழிலாளர்கள், 16 முதல் 40 வயதுக்குள்ளானவர்களாய் உள்ளனர் அவர்களின் தங்கும் காலம் 60 நாட்களிலிருந்து ஒரு ஆண்டாக உள்ளது. பட்டியல் பழங்குடியினர் மற்றும் இனத்தவர், பிற பழங்குடியினர் மற்றும் இனக்குழுவினர், தங்களின் வரலாற்று, சமூக மற்றும் பொருளாதார சமத்துவ மின்மையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தால் வெளிப்படையாக பாதுகாக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சிறிதுகால புலம் பெயர் தொழிலாளர் குழுவில் இடம் பெறுகிறார்கள். மேலும் பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள், கட்டுமானப்பணி, வீட்டுவேலை, ஜவுளி மற்றும் செங்கல் உற்பத்தி, போக்குவரத்து, சுரங்கம், கல்உடைத்தல் மற்றும் விவசாயம் இவற்றை உள்ளடக்கிய முக்கியமான துணைத் துறைகளில் பணிபுரிகிறார்கள்.

புலம் பெயர்வுக்கான காரணங்கள் பல-வேலைவாய்ப்பு மற்றும் மேலான வேலை தேடி, பணியேற்பிற்கென, வணிகம்,பணிஇடமாற்றம், கல்வி, இயற்கைப் பேரழிவு, உடல்நலம் பேணுதல், திருமணம் மற்றும் வீடுபற்றாக்குறை பிரச்சனைகள். இவற்றில் வேலைக்கென புலம் பெயர்தல் முதன்மையான காரணமாக உள்ளது. வேலைக்கென புலம் பெயரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் முறைசாரா துறைகளில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அந்நியர் என்பதால் ஏற்படும் வெறுப்பு, மற்றும் இன வேறுபாட்டின் விளைவாக ஏற்படும் நிந்தைக்கு உள்ளாகுகிறார்கள். மேலும் அவர்கள், தங்களை பணி நியமனம் செய்தோர்,தொழில் அதிபர் மற்றும் நிர்வாகத்தினரின் சுரண்டல்,பழிச்சொல் மற்றும் தவறான பயன்பாட்டிற்கு ஆளாகுகிறார்கள். ‘புலம் பெயர்வு’ என்பது பொதுவாக ‘பணியினிமித்தம் நாட்டின் எல்லையைக்கடந்து செல்வது’ என அயல்நாடுகளில், சொற்பொருள் வரையறை செய்யப்படுகிறது. ஆயினும் தொழிலாளர் புலம் பெயர்விற்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சொற்பொருள் விளக்கம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. சிலசமயம் ‘பொருளாதார புலம் பெயர் தொழிலாளர்’ எனும் சொல், ‘புலம் பெயர் தொழிலாளர்’ அல்லது ‘புலம் பெயர் பணியாளர்’ எனும் வார்த்தைகளுக்கு சமமானதாக பயன்படுத்தப்படுகிறது.

உலக தொழிலாளர் மனிதவளம் 32 பில்லியன். இம்மக்கள் தொகையில் 85 விழுக்காடு மக்கள் வளரும் நாடுகளில் வசிக்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 200 மில்லியன் புலம் பெயர்பவர்களாவர். அவர்களில் 90 விழுக்காடு தொழிலாளர்கள். இதில் 60 விழுக்காடு மறுஇடம் பெயர்ந்தவர்களாக உள்ளனர். வளர்ந்த நாடுகளில் 72 விழுக்காடு தொழிலாளர் மனிதவளத்தொகுப்பு> சேவைத்துறையிலும்> 25 விழுக்காடு தொழிற்துறையிலும்> 3 விழுக்காடு விவசாயத்துறையிலும் உள்ளது.

தொழிலாளர் புலம் பெயர்வு, வாழ்க்கைத்தர முன்னேற்றத்திற்காகவும், வறுமையின் காரணமாக ஏற்படும் பாதுகாப்பின்மையை தவிர்க்கும் பொருட்டும் நிகழ்கிறது. தொழிலாளர் புலம் பெயர்வுக்கு இவ்வாறான பல காரணங்கள் உண்டு. அக்காரணங்களை பின்வருமாறு தொகுத்து கூறலாம்: நகரமயமாதல் அதிகரிப்பு, உலகமயமாதல், வளரும் நாடுகளின் கொள்கைகளின் விளைவாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு, புலம் பெயர்பவர்கள், தங்களின் பொருளாதாரங்களின் அளவை மேம்படத்துவதற்காக கொள்ளும் வேட்கை,வறுமை, அரசியல் போராட்டங்கள், பஞ்சம், மலிவான போக்குவரத்து, மக்கட்தொகை அழுத்தம். 

தொழிலாளர் புலம் பெயர்தல், குடிப்பெயர்வு இடத்திலும், நுழைவு இடத்திலும் மக்களின் பொருளாதார,சமூக,பண்பாடு மற்றும் உளவியல் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொழிலாளர் புலம் பெயர்வு, பெரும்பாலும் சமூக அமைப்புகள் மற்றும் வளர்ச்சி முறையின் விளைவாகும்.  சரிசம நிலையற்ற வளர்ச்சி, இதற்கு முக்கிய காரணமாக இருப்பதுடன் வறுமை, நில உடமைகள்முறை, நிலம் துண்டு துண்டாக இருத்தல்> வேலைவாய்ப்பு பற்றாக்குறை, பெரிய குடும்பம் மற்றும் இயற்கைப்பேரிடர்கள் எனும் இவையும் காரணமாக உள்ளன.

1.தொழிலாளர் புலம் பெயர்வின் தாக்கம் நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. பொருளாதார புலம் பெயர்வு, அதன் கொள்ளளவு> தொகுப்பு, புலம் பெயர்வின் பண்புகள், மற்றும் அதற்கான சூழல்கள், இவற்றின் காரணமாக பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்.

2.புலம் பெயர்வு தோன்றிய நாடுகளில், வேலையின்மை எனும் நெருக்கடியிலிருந்து சிறிது சுமைத்தணிவு ஏற்படுவதுடன் மனிதவள அதிகரிப்பினை உட்கிரகிப்பதற்கான சூழலும் உருவாகுகிறது. குறிப்பாக பண அனுப்பீடு, எப்படி என்பதைக் குறித்த அறிவு பரிமாற்றம், வணிக உருவாக்கம் மற்றும் வலைதல வணிகம் இவற்றின் மூலம் வளர்ச்சிக்கு ஆதரவான சூழலும் ஏற்படுகிறது.

3.புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் தங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளவும், தொழில் இடப் பெயர்வில் முன்னேற்றம் காணவும் மனித மூலதனப்பங்கை பெருக்கிக் கொள்ளவும் முடியும்.

4.புலம் பெயர்வு ஏற்பட்ட நாட்டில் அங்குள்ள பணிபுரியும் வயதுடையோரின் எண்ணிக்கையை இது குறைத்துள்ளது. இதன் விளைவாக குழந்தைகள், வயது முதிர்ந்தோர் இவர்களின் விகித அளவு அதிகரித்திருக்கிறது. புலம் பெயர்வினால் அம்மாநிலத்தில் சிறு குடும்பங்கள் அதிக அளவில் இருக்கும்படியான சூழல் ஏற்பட்டுள்ளது. தனிநபர் உள்ள குடும்பங்கள் 33 விழுக்காடும் இரு நபர் உள்ள குடும்பங்கள் 42 விழுக்காடும் அதிகரித்திருக்கிறது.

5.கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது: புலம் பெயர் தொழிலாளர்களின் மனைவிகள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று தனிமை. அதுவும் திருமணத்திற்குப்பின் உடனடியாக புலம் பெயர்ந்த ஆண்களின் மனைவியரிடத்தில் இத்தனிமை பிரச்சனை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கோவிட்19 எனும் தொற்றுப்பரவல், புலம் பெயர் தொழிலாளர்கள் மீது விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்19 புலம் பெயர் தொழிலாளர்களை வீடற்றவராக> தங்க இடமற்றவராக> உணவற்றவராக> சமுதாய பாதுகாப்பற்றவராக ஆக்கியுள்ளது. இந்த தொற்று> புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், அவர்களின் குழந்தைகளை அநாதைகளாகவும் ஆக்கியுள்ளது. இந்நோயின் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து வசதி பற்றாநிலையின் காரணமாக வாழ்வுக்கான அடிப்படை வசதிகளற்ற இடங்களில் புலம்பெயர்ந்தோர் ஒட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு புலம் பெயர் தொழிலாளர்களின் மனித உரிமைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

நிறைவாக

      கோவிட்19 தொற்றுநோய் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்ற இந்நாட்களில், புலம் பெயர் தொழிலாளர்களை ஒரு பிரச்சனையாக பார்க்கக்கூடாது. மாறாக, இதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக வளரும் நாடுகள், குடி நுழைவினால் கிடைக்கும் பொருளாதாரங்களை திறமையான வகையில் மறுவடிவமைத்து அதை மேலாண்மை செய்து, இதனால் விளையும் பயன்களை பொருளாதாரம் முழுவதும் பரவல் செய்தால் தங்களின் வளர்ச்சி, முதலீடு> மனிதமூலதன திரட்டல், மற்றும் வறுமை குறைப்பு இவற்றில் மிகுதியான பயன் பெறமுடியும்.

நம் நாட்டில் தொழிலாளர் புலம் பெயர்வினால் ஏற்படும் உள்ளார்ந்த அரசியல்> பண்பாட்டு மற்றும் சமூக விளைவுகளை தடுக்க அல்லது மாற்றாக அவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொருளாதார பெருக்கத்திற்கு பெரிதும் பயன்தரும். எனினும் அவற்றை ஆய்ந்தறிதல் என்பது முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கான ஒரு சவாலாக உள்ளது. எனினும் எல்லா வகைகளிலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான மனித நேயம் பராமரிக்கப்பட வேண்டும். இது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வோரு தனிநபரின் பொறுப்பும் ஆகும்.

 

பணி.ஸ்டேன்லி ராபின்சன் இ. (+91 98944 68886)

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பழனி - 624601

Comment