No icon

Indian Church News

உலக சமூகத்தொடர்பு நாள், கொல்கத்தா தலத்திருஅவை

மே 24, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக சமூகத்தொடர்பு நாளை முன்னிட்டு, கொல்கத்தா உயர்மறைமாவட்டம், சமூக வலைத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

"கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியில் உங்களின் கதை என்ன? அதை எம்மோடு ஒரு காணொளியில் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்ற தலைப்பில், தனது முகநூலில்     பதிவுசெய்துள்ள கொல்கத்தா உயர்மறைமாவட்டம், கோவிட்-19 தொற்றுக்கிருமியால் உருவாக்கப்பட்டுள்ள சமூகத் தனிமை, ஒருவித தனித்துவத்துடன், மனித ஒத்துழைப்பின் கதைகளை வழங்குகிறது என்று கூறியுள்ளது.

அதேநேரம் இந்த சமூகத் தனிமை, வாழ்வில் திருப்பங்களையும், துன்பங்களையும் கொணர்ந்துள்ளது என்றும், இது வரலாற்றில் முக்கியத்துவம்பெற்ற,  மற்றும், அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லக்கூடிய, தகுதியான ஒரு நிகழ்வாக உள்ளது என்பதை நிச்சயமாகக் குறிப்பிடலாம் என்றும், அந்த முகநூலில் கூறப்பட்டுள்ளது.

நாம் எல்லாரும் சேர்ந்து திருப்பலி நிறைவேற்றவும், திருநற்கருணையில் பங்குகொள்ளவும் இயலவில்லை எனவும், அதேநேரம், வீட்டில் விவிலியம் வாசிப்பதற்கும், குடும்பத்தோடு இருக்கவும் அதிகநேரம் கிடைத்திருக்கின்றது எனவும் அந்த முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வில் ஏற்றங்களும், இறக்கங்களும் கலந்த இத்தகைய தருணங்களையெல்லாம், காணொளியாக முகநூலில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள கொல்கத்தா உயர்மறைமாவட்டம், இந்தக் காணொளியை, குழந்தைகளின் பாடல் அல்லது, கவிதையுடன் தயார்செய்து அனுப்புங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.  

இந்தக் காணொளிகள் 2 நிமிடத்திற்கு குறைவானதாக இருக்குமாறும், அவற்றை மே 23ம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்புமாறும் விண்ணப்பித்துள்ள கொல்கத்தா உயர்மறைமாவட்டம், இவை போட்டிக்காக அல்ல என்பதையும், அவை இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதையும் அறிவித்துள்ளது.

Comment