No icon

திருப்பீடத் தூதர் பேராயர் பிரையன் உதய்க்வே

இலங்கை மக்களுக்கு திருத்தந்தை மருத்துவ உதவி

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டின் நிலைமை குறித்து திருத்தந்தை கவலைப்படுவதாகவும், தனிப்பட்ட முறையில் உதவ விரும்புவதாகவும் கூறி சிறுநீரக மருத்துவ உதவிகளுக்கான திருத்தந்தையின் நன்கொடையை இலங்கைக்கான திருப்பீடத் தூதர் பேராயர் பிரையன் உதய்க்வே வழங்கினார்.

அரசாங்கம் மற்றும் கத்தோலிக்க தலத்திருஅவையின் அதிகாரிகள் முன்னிலையில் சுகாதாரத்துறையின் இயக்குனர்  Dr.  அசேல குணவர்தன அவர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வழங்கிய சிறுநீரக பாதிப்பினால் துன்புறும் நோயாளிகளுக்கான மருந்துகளுக்கான நன்கொடையை  இலங்கைக்கான திருப்பீடத் தூதர் பேராயர் பிரையன் உதய்க்வே ஒப்படைத்தார்.

இலங்கை மக்களுக்கு திருத்தந்தை வழங்கும் மருத்துவ உதவி என்ற நோக்கத்தில் இலங்கை காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பேராயர்  Brian  அவர்கள், திருத்தந்தையின் பெயரால் பல நாடுகளிலிருந்து பெறும் அனைத்து நிதி உதவிகளையும் அதிக உதவி தேவைப்படும் நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு அளித்து வருகின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துடாக்ரோலிமஸ், சிறுநீரக நோய் சிகிச்சைக்கு முக்கியமானது என்றும், 10 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு (சுமார் 30,000 அமெரிக்க டாலர்) இந்திய உற்பத்தியாளரிடமிருந்து பொருட்கள் வந்துள்ளன என்றும் கூறிய பேராயர் பிரையன் உதய்க்வே, உடல் மற்றும் ஆன்மீகத் துறைகளில் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

இலங்கையில் ஒரு பெரிய மற்றும் வளர்ந்து வரும் பிரச்சனையான, நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) அதிக துன்பங்களை ஏற்படுத்துகிறது எனவும், குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள்  மத்தியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை காரித்தாஸ் அமைப்பின் மருந்து பாதுகாப்பு இயக்குனர் சஜித் சில்வா குறிப்பிட்டார்.

மேலும், நோயின் தீவிரத்தன்மை மற்றும் தேவையின் அடிப்படையில் அதிகமானவர்கள் இம்மருந்துகளைப் பெறுவார்கள் என்று தெரிவித்த இயக்குனர் சஜித் சில்வா புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டு 164,000 பேர் CKD  நோய் கண்டறியப்பட்டனர் என்றும் அதில் 10,500 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினார்.

இலங்கையின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் தற்போதைய நெருக்கடியால் சரியான வழிகளில் நோயறிதல் மற்றும் போதுமான சிகிச்சையை வழங்குவது கடினமாக உள்ளதாகவும் இதன் விளைவாகவே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்படுகின்றன என்றும் இயக்குனர் சஜித் சில்வா எடுத்துரைத்துள்ளார்.       

Comment