No icon

Vatican News

தினமும் மும்முறை ஒலிக்கும் அசிசியின் ஆலய மணிகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத் தால், இத்தாலியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புனித பிரான்சிஸ் வாழ்ந்த அசிசி நகரில், ஒவ்வொரு நாளும், மும்முறை ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு வருவதாக அசிசி மறைமாவட்ட ஆயர் டோமினிக்கோ சொரன்டினோ கூறியுள்ளார்.

வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலை யில், ஒவ்வொரு நாளும் காலை 7 மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை 6 மணி என்று மூன்று முறை ஆலய மணிகளை ஒலித்து, மக்களை செபிக்கும்படி அழைக்கிறோம் என்று, ஆயர் சொரன்டினோ அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆண்டு முழுவதும், குறிப்பாக, தவக்காலத் திலும், புனித வாரத்திலும், விசுவாசிகளாலும், திருப்பயணிகளாலும் நிறைந்து வழியும் அசிசி நகரம், தற்போது வெறிச்சோடி இருப்பது, வேதனையாக உள்ளது என்பதை, தம் பேட்டியில் குறிப்பிட்ட ஆயர் சொரன்டினோ அவர்கள், இருப்பினும், இத்தாலி மக்கள் அனைவரும், உலக மக்கள் அனைவரும் செபத்தால் ஒன்றித்திருக்கிறோம் என்பது நம்பிக்கை தருகிறது என்று கூறினார்.

இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் மற்றும் புனித கிளாரா ஆகியோரின் பரிந்துரையால், இவ்வுலகம் சந்தித்துவரும் இந்த நெருக்கடி, விரைவில் நீங்கவேண்டும் என்ற மன்றாட்டு, அசிசி நகரிலிருந்து தொடர்ந்து எழுந்து வருகிறது என்று ஆயர் சொரன்டினோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

Comment