No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

ஐரோப்பாவை அன்னை மரியா வழிநடத்துவாராக

நம் வாழ்வில் கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றுஆகஸ்ட் 17,  புதனன்று பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய தனது புதன் மறைக்கல்வித் தொடரின் 17வது பகுதியை வழங்கியபின்னர், இளையோர், வயதுமுதிர்ந்தோர், புதுமணத் தம்பதியர் போன்றோரை வாழ்த்தியபோது இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் இறையழைத்தலுக்காகவும் இறைவேண்டல் செய்த திருத்தந்தை, அண்மையில் சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா, நம் இவ்வுலகப் பயணத்தை, அழியாத பொருள்களை நோக்கி, அர்ப்பணிப்போடு தொடர்ந்து மேற்கொள்ள நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

துன்புறும் உக்ரைன் மக்களை மறக்காதீர்கள்

தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டு மக்களை எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் அம்மக்களை மறக்கவேண்டாம், மற்றும், போருக்குப் பழக்கப்பட்ட மனநிலையில் வளரவேண்டாம் எனவும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.

அமல மரி அருள்சகோதரிகள் சபையினர்

மேலும், தங்கள் சபையின் பொதுப் பேரவையில் பங்குபெறும் அமல மரி அருள்சகோதரிகளைபுதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் வாழ்த்திய திருத்தந்தை, இச்சபையினர், அர்ஜென்டீனா தலைநகர் புவனோஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட அலுவலகத்தில் பணியாற்றினர் என்பதையும் குறிப்பிட்டார்.

நற்செய்தி அறிவிப்புப்பணியை மனத்தாராளத்தோடு பணியாற்றவும், குறிப்பாக, இளைய தலைமுறைகள் மற்றும், சமுதாயத்தில் மிகவும் வலுவற்றவர்களுக்குப் பணியாற்றுமாறு அச்சகோதரிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இறையழைத்தலுக்காகவும் இறைவேண்டல் செய்தார்.

திருத்தந்தை அருகில் சிறுவன்

இளையோருக்கும் வயதுமுதிர்ந்தோருக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், மனித சமுதாயத்தைக் காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது என்றுபுதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை கூறிக்கொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் திருத்தந்தையிடம் சென்று, அவர் அருகில் சிறிதுநேரம் இருந்தான், திருத்தந்தையும் அவனை அணைத்துக்கொண்டு தன் மறைக்கல்வியுரையைத் தொடர்ந்து ஆற்றினார்.

Comment