கர்தினால் இரஞ்சித்
இலங்கையில் அமைப்புமுறையில் மாற்றம் தேவை
- Author குடந்தை ஞானி --
- Friday, 26 Aug, 2022
இலங்கையில், 2019ஆம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று, அந்நாட்டுத் தலைவர்கள் உண்மையாகவே கூறினால், அத்தாக்குதல்கள் குறித்த புலன் விசாரணைகளை நடத்த அவர்கள் அஞ்சத் தேவையில்லை என்று, அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 21 ஞாயிறன்று அந்நாட்டின் ராகாமா பசிலிக்காவில் நடைபெற்ற குணப்படுத்தல் செப வழிபாட்டில் மறையுரையாற்றிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இலங்கையில் அண்மையில் நடைபெற்றுள்ள கவலைதரும் நிகழ்வுகள், அந்நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக தன்னலமும், பாவமும் ஆட்சிசெய்துள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.
இலங்கையில் அமைப்பு முறையில் மாற்றம் கொணர நாம் விரும்புகிறோம், அதேநேரம், நம் ஒவ்வொருவரின் வாழ்வும் மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இலங்கையை, ஆசியாவில் ஒரு சிறந்த நாடாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்த ஆட்சியாளர்கள், மிகுந்த மோசமான நிலைக்கே நாட்டை விட்டுச்சென்றுள்ளனர் என்றும் குறை கூறியுள்ளார்.
நாட்டில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள், ஒரு நாளில் ஒருவேளை உணவுக்கே போராடுகின்றனர் என்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகருக்கு வடக்கே ஏறத்தாழ இருபது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ராகாமா பசிலிக்காவில் ஞாயிறு முழுவதும் நடைபெற்ற குணப்படுத்தல் மற்றும், நோயாளிகள் அர்ச்சிப்பு செப வழிபாட்டில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் என ஏராளமானோர் பங்குகொண்டனர்.
அந்நாட்டில் 2019ஆம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களின் புகைப்படங்களை அவர்களின் குடும்பங்கள், இவ்வழிபாட்டிற்குக் கொண்டுவந்து அவர்களுக்காகச் செபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)
Comment