No icon

FBAC கூட்டமைப்பின் பொன் விழா

ஆசியத் திருஅவையின் மறைப்பணிகளில் புதுப்பித்தல் அவசியம்

கடுந்துன்பங்களைக் கொணர்கின்ற போர்கள், மக்களின் புலம்பெயர்வுகள், பொருளாதாரச் சரிவு, காலநிலை மாற்றம் முன்வைத்துள்ள அச்சுறுத்தல்கள், பெருந்தொற்றின் பாதிப்புகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசியத் திருஅவை பணியாற்றி வருகின்றது என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள்  திங்களன்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 22,  திங்களன்று தாய்லாந்தின் பாங்காக்கில், FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ள பொன் விழாக் கொண்டாட்ட நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய, அக்கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் போ அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இலட்சக்கணக்கான மக்கள் பசிக்கொடுமையை எதிர்கொள்வது உள்ளிட்ட வரலாற்றில் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தை எதிர்கொள்ளும் ஆசியத் திருஅவை, புதுப்பித்தல் பணியை மிகத் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், பல நாடுகளில் சர்வாதிகாரத் தலைமைத்துவம், ஒரு விதிமுறையாகவே  மாறி வருகின்றது என்று கூறியுள்ளார்.

ஆசிய நாடுகளில் மக்களாட்சி கடும் சவால்களை எதிர்கொள்கிறது, அடிப்படைவாதம் மற்றும், சமய வன்முறை உலகளாவிய அமைதியை அச்சுறுத்துகிறது எனவும், இத்தகைய சவால்நிறைந்த சூழல்களில் ஆசியத் திருஅவைகளின் பங்கு என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும் எனவும், ஆசிய ஆயர்களிடம் கர்தினால் போ கூறியுள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆசியத் திருஅவை நிறையக் காரியங்களைச் சாதித்துள்ளது எனவும், இதற்கு உதவிய இறையியலாளர்களுக்கும் ஏனையோருக்கும் தன் நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், பல்வேறு கலாச்சாரங்களால் பின்னப்பட்டுள்ள ஆசியாவில், திருஅவையும் தன் பன்மைத்தன்மையை பிரதிபலிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்

1970ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட  FBAC கூட்டமைப்பின் பொன் விழா, 2020ஆம் ஆண்டில் கொண்டாடப்படவேண்டியருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக, அவ்விழா இவ்வாண்டில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. (UCAN)

Comment