No icon

ஐரோப்பிய ஆயர்கள்

இப்பூமியின் அழுகுரலுக்கு பதிலளியுங்கள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தை நாம் முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்து அது வேதனையோடு எழுப்பும் விண்ணப்பக் குரலுக்குப் பதிலளிக்க, கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, ஐரோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அக்டோபர் நான்காம் தேதி வரை சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள CCEE எனப்படும், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் சமூக மேய்ப்புப்பணி நலப் பணிக்குழுவின் தலைவர் பேராயர்  ஆஞ்சலோ மாஸாபிரா அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

நம் பூமிக்கோளத்தில், படைத்தவராம் ஆண்டவரைப் புகழும் இனிய பாடலும், அதேநேரம், அது சேதப்படுத்தப்படுவதன் அழுகுரலும் கேட்கின்றன என்றுரைத்துள்ள, அல்பேனியா நாட்டுப் பேராயர் ஆஞ்சலோ மாஸாபிரா அவர்கள், படைப்பின் இந்த அழுகுரலுக்குப் பதிலளிக்க மனிதசமுதாயத்திற்கு ஆண்டவர் புதிய இதயத்தை அருளவேண்டும் என்று தன் செய்தியில் மன்றாடியுள்ளார்.

அண்மையில் வெளியான தரவுகளின்படி, இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து, இப்பூமிக்கோளத்தின் பல்வேறு பசுமைப் பகுதிகள், குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் 27 நாடுகளில் 5,17,881 ஹெக்டேர் பகுதிகள் தீயினால் ஏற்கனவே சேதமடைந்துள்ளன எனவும், இந்த அளவு, கடந்த ஆண்டைவிட அதிகம் எனவும் பேராயரின் செய்தி கூறுகிறது.

கடந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 4,70,359 ஹெக்டேர் பகுதிகள் தீயினால் சேதமடைந்தன என்று கூறியுள்ள பேராயர் ஆஞ்சலோ மாஸாபிரா அவர்கள், இந்த இயற்கைப் பேரிடரோடு, உக்ரைனிலும், பூமிக்கோளத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போரும், கடவுளின் படைப்புக்குப் பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன என்று கூறியுள்ளார்.

படைப்பின் தற்போதைய நிலைக்கு மனிதரே முக்கிய காரணமாக இருக்கும்போது, அதற்குத் தீர்வுகாண வேண்டியதும் மனிதரே என்று கூறியுள்ள பேராயர், படைப்பின் காலம், நம் மனநிலை மற்றும், பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள உண்மையான காலமாகவும், படைப்பைப் பாதுகாப்பதற்குச் செபிக்கும் காலமாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நம் பூமிக்கோளத்தின், குறிப்பாக, ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் ஓர் உண்மையான சூழலியல் பேரிடரை எதிர்கொண்டுள்ளது, இதற்கு 97 விழுக்காடு மனிதரின் செயல்பாடுகளே காரணம் என்பதை, பேராயர் ஆஞ்சலோ மாஸாபிரா அவர்கள் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

Comment