சுமைகளாகும் சட்டங்கள்!
இலங்கை நாட்டின் தற்போதைய அரசுத் தலைவராக இரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். இவ்வாண்டு இங்கு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே மக்களின் குரலை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரசுத் தலைவர் இரணில் விக்ரமசிங்கேயின் இடைக்கால அரசு செயல்படுவதாகவும், தனக்குச் சாதகமாகப் பல்வேறு சட்டப் பரிந்துரைகளை அடுத்த சில வாரங்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாகவும் கர்தினால் இரஞ்சித் தெரிவித்துள்ளார். இலங்கையின் இடைக்கால அரசு ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது தவறானது என உரைத்த கர்தினால் இரஞ்சித், “மக்களுக்குப் பலன் தருவதாகவும், இன்றைய சூழல்களுக்கு ஏற்றதாகவும் புதிய சட்டங்கள் இருக்க வேண்டுமே தவிர, மக்களின் தோள்களில் பெரும் சுமைகளாக இருக்கக் கூடாது” என்றும் தெரிவித்தார். இலங்கையில் சனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களைக் கொணரும் முயற்சிகளை இடைக்கால அரசு கைவிட வேண்டும் என அந்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் இணைந்து அரசுக்கு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Comment