No icon

பரிதாப நிலையில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்!

அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் வாழ்வது என்பது ஒரு கேள்விக்குறியாகி வருகிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி இலாகூர் நகரில் சாய்ம் என்ற சிறுவன் முடி வெட்டிக்கொள்வதற்காகச் செல்கிறான். அச்சிறுவனின் கழுத்தில் சிலுவை இருப்பதைக் கவனித்த காதர் கான் என்ற ஒரு முஸ்லிம் பாதுகாப்புக் காவலர், அவனைத் தடுத்து நிறுத்தி, சிலுவையுடன் கூடிய அந்தத் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டதுடன், அவனிடம் இஸ்லாமிய செபத்தை வாசிக்கும்படி வற்புறுத்துகிறார். தானொரு கிறிஸ்தவன் என்று கூறி அதனைச் செய்ய அச்சிறுவன் மறுக்கிறான். உடனே அந்தக் காவலர் அச்சிறுவனின் வாயில் நஞ்சைத் திணிக்கிறார். வாயில் பட்ட நஞ்சு வயிற்றுக்குள் செல்லவே சிறுவன் பரிதாபமாய் இறந்து போகிறான்.

இதற்கு நீதி கேட்டு இன்றும் சிறுவனின் பெற்றோர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தானின் அக்பராபாத் பகுதியில் 75 கிறிஸ்தவக் குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் தங்கியிருந்த 57 ஏக்கர் நிலப்பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற  நீதிமன்றத்தின் அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளனர். 1960-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான ராஜா ரியாஸின் தந்தை ஏழைக் கிறிஸ்தவர்களை அக்பராபாத்தில் இலவசமாகக் குடியேற அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீதிமன்றத்தின் ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள தம் மக்களின் வாழ்விற்காக மத்திய பாகிஸ்தானின் மறைமாவட்டம் ஏழு பேர் கொண்ட குழுவை உருவாக்கி, நிதி திரட்டி வருகின்றது.

Comment