No icon

மையப்பொருள் : சிலுவை சொல்லும் பாடம்

தொடக்கப் பாடல் : இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே...

தொடக்க இறை வேண்டல்

எங்கும் நிறைந்து, எல்லா நலன்களையும் வழங்கும் இனிய வானகத் தந்தையே! சிலுவை வழியே இந்த ஜெகத்தினையே மீட்ட இனிய இயேசுவே செல்லும் வழிக்குத் துணையாய் வந்து எம் செயல்களுக்கு வெற்றி தரும் இனிய தூய ஆவியாரே! மூவொரு கடவுளே! உமது, அரும் செயல்களை நினைத்து, நன்றி கூறிப் போற்றுகின்றோம். உமது ஒப்பற்ற உடனிருப்பால் நாங்கள் இன்று எமது (அன்பியம் பெயர்) அன்பியக் கூட்டத்தை நடத்த இருக்கின்றோம். இதனைச் சிறப்பாக நடத்தி, இன்றையக் காலக் கட்டத்திற்கு ஏற்ற செயல்பாடுகளுக்குத் திட்டமிட உமது பேரருளை இறைஞ்சுகின்றோம். எல்லா நல்ல செயல்பாடுகளுக்கும் சவாலாக, ஏராளமான பிரச்சனைகள் என்னும் சிலுவைகள் குறுக்கிடுவதும், அவற்றை உம் துணையால் அகற்றி, இலக்கு நோக்கிப் பயணிக்கத் துணை நிற்பதும் எங்கும் காணப்படும் எதார்த்த சூழ்நிலை ஆகும். அதுபோல எங்கள் அன்பியத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னும் சிலுவைகளை முன் மதியுடன் உம் துணையால் எதிர்கொண்டு நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு வெற்றி காண அருள் தாரும் - ஆமென்.

நற்செய்தி வாசகம் : லூக்கா 14: 25-33

சிந்தனை

* சிலுவைகள் (துன்பங்கள்) இல்லாமல் வாழ்க்கை இல்லை.

* ‘சிலுவை எனது பெருமைஎன்றார் திருத்தூதர் பவுல்.

* நுகம் நோகாமல் நுங்கு சாப்பிடல் இயலாது.

* திட்டம் தீட்டுவதிலேயே தெரியும் வேலையின் போக்கு.

* துன்பத்தைக் கடத்த நினைத்தால் அது தொடங்கிய இடத்தை நோக்கியே நகரும்.

* துன்பத்திலிருந்து விதி விலக்குப் பெற்றவர் எவருமிலர் - பிரச்சனைகள் வடிவம் மாறுமே தவிர அவை ஓய்வதில்லை.

* துன்பம் வர நான்கு வாயில்கள் உள்ளன. 1. முன்னேற்றின் செயல்பாடுகள் 2. தனக்குத்தானே வருவித்துக் கொள்பவை 3. பிறரால் அனுப்பப்படுபவை 4. இறைச் செய்திகளைக் கொண்டு வருபவை.

* தாங்க முடியாத, தீர்வு காணாத துன்பமென்பது எதுவும் இல்லை. முனைப்பும் முன்மதியுமே தேவை.

* துன்பத்திற்குக் காரணம் கண்டு பிடிக்கச் செலவிடும் நேரத்தை அதற்குத் தீர்வு காணச் செலவழிப்பதே மேல்.

* இயேசுவைப் பின் செல்ல விரும்பினால் பிரச்சனைகள் போனஸ் ஆக வரும். சபை உரையாளர் 3: 1-8 ல் கூறுகிற படி அவை விலகும் நேரம் வந்து விட்டால் விடை பெறாமல் போய் விடும்.

நற்செய்திப் பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு (கதை)

அவன் ஒரு சோம்பேறி. அவர்தம் மனைவி அவனிடம், "ஐந்து நாள்களுக்குள் நீங்கள் ஏதாவது உருப்படியாகச்   சம்பாதிக்காவிட்டால்  நான்  என் 

அம்மா வீட்டுக்குப் போய் விடுவேன். வேண்டுமானால் கட்டுச் சோறும், கருவாடும் தருவேன்" என்றாள். முதல் நாள் ஒரு மலைக்குப்போய் வேண்டி உள்ளே தங்க நகைகள் வைக்கப்பட்ட பரங்கிக்காய் கொணர்ந்தான்மனைவியின் கட்டளைப்படி அது மளிகைக் கடையில் கொடுக்கப்பட்டு, பூண்டு மிளகு வாங்கி வரப்பட்டது. இரண்டாம் நாள் பூங்காவிற்குப் போய் ஒரு முத்து மாலை கிடைத்தது. அதை கழற்றி வைத்து விட்டு குளத்தில் கால் கழுவும் போது பருந்து தூக்கிச் சென்று விட்டது. வீட்டில் மனைவி கணவன் பொய் சொல்வதாக அடித்தாள்.

மூன்றாம் நாள் கடற்கரையில் ஒரு பெண் தேவதை நாகரத்தினம் இரண்டு கொடுத்ததை வழியில் வந்த கோவில் யானை விழுங்கி விட்டது. இன்னும் சரியான அடி.

நான்காம் நாள் ஒரு சந்தையில் பெண் தேவதை ஒரு பை நிறைய தங்க, வைர நகை கொடுத்ததை வீட்டிற்குக் கொண்டு வந்தான். மனைவி வீட்டில் இல்லை. அந்தப் பையை அடுப்புக்கு அருகில் சாம்பலில் மறைத்து வைத்து விட்டுப் போய், மனைவியிடம் அந்தப் பை பற்றி எடுத்துரைத்து அழைத்து வந்தான். பக்கத்து வீட்டுப் பெண் நெருப்பு எடுக்க வந்தவள் அந்தப் பையைக் கொண்டு போய் விட்டாள்.

கடைசி நாள் மனமுடைந்த சோம்பேறி, இடிந்த ஒரு கோவிலில் போய் வழக்கமாக மூதேவி! மூதேவி! என்று உரைப்பதற்குப் பதில் இன்று ஸ்ரீதேவி! ஸ்ரீதேவி! என்று அழைத்து வந்தான். பெண்மணியிடம் ரூ 5 பெற்று வந்தான். மனைவியின் கட்டளைப்படி அதற்குக் காய்கறி வாங்கப் போனான். அந்தக் கடையில் 5 நாள்களுக்கு முன் அவன் கொடுத்த பரங்கிக்காய் வாடிய நிலையில் இருந்ததாக அந்தக் கடைக்காரர் ரூ.5 வாங்கிக்கொண்டு சோம்பேறியிடம் கொடுத்தார். அவன் வீட்டுக்கு வரும்போது எதிரே கோவில் யானை வந்தது. அவள் கெஞ்சிக் கேட்டதால் நாகரெத்தினம் இரண்டையும் கக்கிக் கொடுத்தது. அதை வீட்டில் மனைவியிடம் கொடுத்தான். அவன், “ஐயா நம்ம புளிய மரத்தில் ஏறி உலுக்கி புளியம் பழம் பறித்து வாருங்கள்என்றாள். அவன் உலுக்கும்போது அவள் கழுத்தில் முத்துமாலை விழுந்தது.

அதே நேரம் அவன் மனைவி பரங்கிக் காயை அரிந்தாள். அதிலிருந்து தங்க நகைகள் கொட்டின. அவள், “ஐயா நான் நகையைக் கண்டு கொண்டேன்" என்று கூறி கை தட்டினான். அவனும் முத்துமாலையைக் கண்டுக் கொண்டதாகக் கை தட்டினாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பை திருடிய பெண் நகைப் பையைக் கொண்டு வந்து கொடுத்து மன்னிப்புக் கேட்டாள். ஆம், தொலையும் நேரத்தில் எதுவும் ஒன்று சேரவில்லை. ஆனால், சேரும்நேரத்தில் மாதா கோவிலில் கேட்ட வேண்டல் எல்லாமே கிடைத்தன. இது போலவே பிரச்சனைகளும் சேரும். நேரம் வந்தால் தீரும்.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகளுக்கான கருத்துகள்

1. திரு அவைப் பணியாளர்கள் துன்பங்களை ஏற்றுக்கொள்ள சக்தி பெற.

2. அன்பியச் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற திட்டமிடுதலில் இறை செயல்பட.

3. சிலுவை அடையாளத்தால் பிற சமயத்தாரிடையேச் சான்று பகர.

4. எல்லாச் செயல்பாடுகளையும் சிலுவை வரைந்து தொடங்க.

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்

1. அன்பியக் குடும்பங்கள் அனைத்திலும் சிலுவையை அரியணையேற்று.

2. நல்லுறவின்றி வாழும் குடும்பங்களை சந்தித்து உறவு மேம்பட உதவுதல்.

நிறைவு இறை வேண்டல்:

அன்புத் தந்தையே இறைவா! இன்றைய எமது அன்பியக் கூட்டத்தில் நாங்கள் அனைவரும் செயல்பாட்டில் பங்கேற்புடன் கலந்து கொள்வோம். பொறுப்பாளர்களின் வழி நடத்தலும், பங்கேற்பாளர்களின் அனுபவப் பகிர்தலும், எங்களுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அளித்தன. எனவே உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக - ஆமென்

(அன்பியப் பாடல்)

Comment